மகனை துண்டு துண்டாக வெட்டிக்கொன்ற தாய்: சாக்கு பைகளில் கட்டி கால்வாயில் வீச்சு
ஆந்திராவில் மதுபோதையில் பெண்களிடம் அத்துமீறிய மகனை, மற்றொரு மகனுடன் சேர்ந்து துண்டு துண்டாக வெட்டிக்கொன்ற தாய், உடல் பாகங்களை சாக்கு பைகளில் கட்டி கால்வாயில் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் மேதாரா பஜார் அருகே கால்வாய் உள்ளது. இதன் அருகே கடும் துர்நாற்றத்துடன் மூன்று பைகள் மிதப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவம் இடத்திற்கு வந்த மார்க்கபுரம் டிஎஸ்பி நாகராஜு தலைமையிலான போலீசார் கால்வாயில் கிடந்த பைகளை மீட்டு சோதனையிட்டனர். அப்போது அந்த பைகளில் கொலை செய்யப்பட்ட உடல் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டி அடைத்து இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
அந்த உடல் பாகங்களை சோதித்தபோது அது ஒரு இளைஞரின் உடல் பாகங்கள் போல் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை தொடங்கினர். விசாரணையில் பிரகாசம் மாவட்டம், கம்பத்தில் உள்ள தெலுங்கு தெருவில் வசிக்கும் ஷ்யாம் (35) கொடூரமாக கொலை செய்யப்பட்டு உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு வீசப்பட்டிருப்பது தெரியவந்தது. சொத்து தகராறு காரணமாக இந்தக்கொலை நடந்திருக்கிறதா, பெண் விவகாரமா? முன் விரோதமா என பல கோணங்களில் போலீஸார் விசாரணை நடத்தினர்.
இதையும் படிங்க: ஆம் ஆத்மி முதல்வரே… அமெரிக்காவுக்கும் - பஞ்சாபிற்கும் வேறுபாட்டை பார்..! பாடம் எடுத்த பாஜக..!
ஆனால் போலீஸ் விசாரணையில், பரபரப்பு தகவல் வெளியானது. கொலையான ஷியாம் மதுவுக்கு அடிமையானவர். மது போதையில் இருக்கும்போது தனது உறவுமுறைகளை மறந்து பெண்களிடம் அத்துமீறி நடக்க முயற்சித்ததாக தெரிகிறது. இதனால் அவரது தொல்லை தாங்க முடியாமல் தாய் சாலம்மா, தனது மகன் சுப்பிரமணியம் மற்றும் அருகிலுள்ள ஆட்டோ டிரைவர் மோகன் ஆகியோருடன் சேர்ந்து ஷியாமை கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெட்டிக்கொன்றுள்ளார். பின்னர் உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி சாக்கு மூட்டையில் கட்டி கால்வாயில் வீசியதும் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக 3 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்றெடுத்த மகனை தாயே துண்டு துண்டாக வெட்டிக்கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: மகா கும்பமேளாவில் மீண்டும் தீ விபத்து: எரிந்து சாம்பலான கூடாரங்கள்..!