×
 

இலக்கிய திருவிழாவின் வித்து இரா. நாறும்பூநாதன் மறைவு!

எழுத்தாளரும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க நிர்வாகியுமான நாறும்பூநாதன் காலமானார். அவருக்கு வயது 66.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கழுமலையை சேர்ந்தவர் நாறும்பூநாதன். இவர் கோவில்பட்டியில் உள்ள ஜி.வி.என் கல்லூரியில் படித்தார். பின்னர், திருநெல்வேலியில் ஸ்டேட் வங்கியில் அதிகாரியாக பணிபுரிந்துள்ளார். மேலும திருநெல்வேலி மாவட்ட செயலாளராக பதவி வகித்துள்ளார்.

எழுத்தாளரும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க நிர்வாகியாகவும் இருந்துள்ளார் நாறும்பூநாதன். இவர் சிறுகதைகள், கட்டுரைகள் என பல்வேறு நூல்களை எழுதி உள்ளார்.

இதையும் படிங்க: பொதுத் தேர்வு எழுத சென்ற மாணவன்..! பட்டப் பகலில் அறிவாளால் வெட்டப்பட்ட கொடூரம்..!

இவரது மனைவி உஷா திருநெல்வேலியில் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரின் மகன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். 

2022-ஆம் ஆண்டு தமிழறிஞர் உ.வே.சா விருதை தமிழக அரசு நாறும்பூநாதனுக்கு வழங்கி சிறப்பித்துள்ளது. நான்கு சிறுகதைத் தொகுப்புகளும் பத்துக் கட்டுரைத் தொகுப்புகளும் இவரது இலக்கியப் பங்களிப்பு. தற்போது சிறுவர் நூல்களும் எழுதிவந்தார். இவரது சிறுகதை தொகுப்பான ‘கனவில் உதிர்ந்த பூ’ பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா தன்னாட்சி கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களின் பாடநூலாக உள்ளது. மேலும், ‘யானை சொப்பனம்’ நூலின் கட்டுரைகள் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களின் பாட நூலாகவும் உள்ளது.

தமிழ்நாடு அரசு முன்னெடுப்பில் திருநெல்வேலியில் ஒருங்கிணைக்கப்படும் பொருநை இலக்கியத் திருவிழா, நெல்லை புத்தகக் காட்சி ஆகியவற்றின் பின்னணியில் நாறும்பூநாதனின் பங்கும் ஏராளம் இருக்கிறது. 2014க்குப் பிறகு புத்தகக் காட்சி திருநெல்வேலியில் நடைபெறவில்லை என ஆட்சியரிடம் மனு கொடுத்து, இந்த வாசிப்பு இயக்கத்துக்கு வித்தாக இருந்தவர் நாறும்பூநாதன். விருதுநகரில் நடைபெற்ற கரிசல் இலக்கியத் திருவிழாவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராகவும் இருந்த இவர், அதை ஒட்டி நூல்களைத் தொகுக்கவும் உறுதுணையாக இருந்துள்ளார்.

வெறும் இருபதே நாள்களில் ‘நெல்லைச் சீமையில் ஒரு நூற்றாண்டு’ சிறுகதைத் தொகுப்பும், ‘ஒரு நூற்றாண்டுக் கவிதைத் தொகுப்பும்’ இவரின் சீரிய முயற்சியால் வெளியிடப்பட்டன. தன் எழுத்துகள் மட்டும் போதும் என்றில்லாமல் சமூக சிந்தனையோடும் செயலாற்றியவர் நாறும்பூநாதன்.

இந்த நிலையில் இன்று காலை நடைபயிற்சி சென்றபோது நாறும்பூநாதன் மயக்கமடைந்துள்ளார். உடனடியாக அவரை வண்ணாரப்பேட்டை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார். அவரது மறைவு எழுத்தாளர்கள், வாசகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த எழுத்தாளர் நாறும்பூநாதனுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

இதையும் படிங்க: ரூ.80 மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்.. நடுக்கடலில் நடந்த அதிரடி சேசிங்.. அயன் படத்தை மிஞ்சும் கடத்தல் ப்ளான்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share