×
 

நெல்லை முன்னாள் எஸ்.ஐ. கொலை வழக்கு.. குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு..!

நெல்லை முன்னாள் எஸ்.ஐ.கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

திருநெல்வேலி மாவட்டம் டவுன் பகுதியில் வசித்து வந்த ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ஜாகீர் உசேன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டை உலுக்கி உள்ளது. அந்தக் கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் தனிப்பிரிவு அதிகாரியாக பணியாற்றி விருப்பு ஓய்வு பெற்றவர் ஜாகீர் உசேன். நெல்லை டவுன்பகுதியில் வசித்து வந்த அவர், அங்கு நடைபெற்ற நில ஆக்கிரமிப்பு சம்பவங்களுக்கு எதிராக செயல்பட்டு வந்தார். 

குறிப்பாக வக்பு வாரிய இடம் ஆக்ரமிக்கப்படுவதாக அவர் சில நாட்களுக்கு முன்னர் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் சில நபர்களின் பெயரைக் குறிப்பிட்டு அவர்கள் மூலமாக தன்னுடைய உயிருக்கு ஆபத்து என்றும் ஆனால் அதற்காக தான் பின்வாங்கப் போவதில்லை என்றும் கூறியிருந்தார். மேலும் வக்பு வாரிய இடம் ஆக்ரமிப்பிற்கு மூலகாரணமாக இருப்பவர் தௌபிக் என்றும் அவர் மீது தான் அளிக்கும் புகார்களை போலீசார் கண்டுகொள்வதில்லை என்றும் குற்றஞ்சாட்டி இருந்தார். திருநெல்வேலி டவுன் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகிய இருவரும் தன்னுடைய புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை என்று கூறியிருந்தார். 

இதையும் படிங்க: ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வெட்டிக்கொலை.. சட்டம் - ஒழுங்கு எங்கே? என அன்புமணி கேள்வி..!

இந்த சூழ்நிலையில்தான், இரண்டு நாட்களுக்கு முன்பு ரமலான் மாதத்திற்காக நோன்பிருந்த அவர், அதிகாலை தொழுகையை முடித்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள், ஜாகீர் உசேனை அரிவாளால் வெட்டிக் கொன்றுவிட்டு தப்பியோடினர்.

ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் இந்த படுகொலை உலுக்கி எடுத்தது. உண்மைக்காக போராடுபவர்களுக்கு மரணம் தான் பரிசா என்று பலரும் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். இந்தக் கொலை தொடர்பாக திருநெல்வேலி 4-வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் கார்த்திக், அக்பர் ஷா ஆகிய இரண்டு பேர் நேற்று சரண் அடைந்தனர். 

ஆனாலும் கொலைக்கு முக்கிய காரணமாக கருதப்படும் தௌபிக் என்ற இயற்பெயர் கொண்ட கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது மனைவி நூருன்னிசா ஆகியோரை போலீசார் தேடி வந்தனர். அவர்கள் அண்டை மாவட்டங்களுக்கு தப்பியோடி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அவர்களை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

புதுக்கோட்டை மாவட்டத்தில் கல் குவாரிகளுக்கு எதிராக போராடிய ஜகபர் அலி என்ற சமூக ஆர்வலர் படுகொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இப்படி பொதுநலன்களுக்காக குரல் கொடுப்பவர்கள் கொல்லப்படும் சூழல் தமிழ்நாட்டில் நிலவுவது சரிதானா? என முதலமைச்சரை நோக்கி குரல் எழுப்புகின்றனர் சமூகநலன்விரும்பிகள்.

இதையும் படிங்க: கலெக்டர் ஆபிஸ் அருகே கஞ்சா விற்பனை..? வடமாநில தொழிலாளர்கள் துணிகரம்.. கட்டிட தொழிலாளி 3 பேர் கைது..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share