×
 

கேட்டது கரும்பு விவசாயி சின்னம்.. கிடைத்தது மைக் சின்னம்.. நாதக ஹேப்பி அண்ணாச்சி!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டது.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் பிப்ரவரி 5இல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் திமுக, நாதக கட்சி வேட்பாளர்கள் உள்பட 58 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். 3 பேர் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. எட்டு சுயேட்சைகள் வேட்புமனுக்களை திரும்ப பெற்றனர். எனவே, திமுக, நாதக  வேட்பாளர்கள் உள்பட 47 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இத்தேர்தலில்  திமுக வேட்பாளர் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி இடையே நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று வேட்பாளர்களுக்குச் சின்னம் ஒதுக்கும் பணி நடைபெற்றது. முதலில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. திமுக வேட்பாளர் சந்திரகுமாருக்கு  உதயசூரியன் சின்னம்  இருப்பதால் அச்சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அண்மையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியான நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி, கரும்பு விவசாயி சின்னம் அல்லது மைக் சின்னம் கேட்டு கோரிக்கை வைத்தார்.



இதில் கரும்பு விவசாயி சின்னம் வேறொரு அரசியல் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதால், மைக் சின்னம் ஒதுக்குவதாக தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்தார். இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் அளித்த விளக்கத்தை தேர்தல் அலுவலர் காட்டினார். இதை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி ஏற்றுக்கொண்டார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம்  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி கூறும்போது, “நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. கரும்பு விவசாயி சின்னம் வேறொரு மாநிலத்தில் வழங்கப்பட்டுள்ளதால், இத்தேர்தலில் கரும்பு விவசாயி சின்னம் வழங்கப்படவில்லை. கட்சிக்கு அங்கீகாரம் பெற்று கொடுத்த மைக் சின்னம் கிடைத்ததில் மகிழ்ச்சி. என் பிரச்சாரத்திற்கு வரவேற்பு உள்ளதால், நாம் தமிழர் வெல்லும் வாய்ப்பு உள்ளது” என்று சீதாலட்சுமி தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'சீமானுடைய புகைப்படத்தை எடிட் செய்ததே நான்தான்' -சங்ககிரி ராஜ்குமார் அதிரடி..! 'பிரபாகரனை தமிழகத்திற்கு தெரியப்படுத்தியதே சீமான்தான்'- நாதக பதிலடி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share