அனுமதி இன்றி கட்டப்பட்ட கட்டிடங்கள்.. சீல் வைத்த அதிகாரிகள்..
திருநெல்வேலி அருகே அனுமதி இன்றி கட்டப்பட்ட 12 கடைகள் கொண்ட வணிக வளாகத்தை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
திருநெல்வேலி மாநகராட்சி எல்லையில் மாநகராட்சி அனுமதி இன்றி 200 கட்டடங்கள் மற்றும் வணிக வளாகங்களும், உள்ளூர் திட்ட குழுமத்தின் அனுமதி இன்றி 68 கட்டிடங்களும் கட்டப்பட்டுள்ளதாக மாநகராட்சி தகவல்களை வெளியிட்டது.
இது தொடர்பாக புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து, அனுமதி இன்றி கட்டப்பட்ட கட்டிடங்களை அகற்றுமாறு உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடியாக உத்தரவிட்டது. இந்த உத்தரவின் பேரில் மாநகராட்சி கமிஷனர் சுகபுத்திரா நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இதன் அடிப்படையில் கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 4 கட்டடங்களுக்கு சீல் வைக்கப்பட்டு அகற்றப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இன்று மேலப்பாளையம் அலங்கார் தியேட்டர் அருகே அனுமதி இன்றி கட்டப்பட்ட தனியார் வணிக வளாகம் அதிகாரிகளின் ஆய்வின்போது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையும் படிங்க: உங்க இஷ்டத்துக்கு கட்டுவீங்களா?... இடித்துத் தள்ள உத்தரவிட்ட நீதிமன்றம்...
இந்த கட்டிடத்தின் தரைதளத்தில் ஆறு கடைகளும், முதல் மாடியில் ஆறு கடைகள் என மொத்தம் 12 கடைகள் இயங்கி வருகின்றன. இந்த நடவடிக்கையில் மாநகராட்சி சிட்டி உதவி திட்டக்குழு அலுவலர் மற்றும் உதவி பொறியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று வணிக வளாகத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால் பகுதியில் பெரும் பரபரப்பானது.
அதுமட்டுமின்றி மேலும் இதுபோன்று அனுமதி இன்றி நகரில் வணிக வளாகங்கள் கட்டப்பட்டால், கட்டிடங்கள் அகற்றப்படுவதோடு சம்பந்தப்பட்ட நபர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஊராட்சி தலைவர் வீடு உட்பட 9 வீடுகளை இடிப்பு.. நீதிமன்ற உத்தரவுப்படி வீடுகளை தகர்த்து அகற்றி அதிரடி காட்டிய அதிகாரிகள்..