ஆன்லைன் விளையாட்டு மட்டுமே தற்கொலைக்கு காரணமல்ல... ஆன்லைன் நிறுவனம் விளக்கம்..!
ஆன்லைன் விளையாட்டு மட்டுமே தற்கொலைக்கு காரணமல்ல என்று ஆன்லைன் நிறுவனம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்கொலைக்கு பல காரணங்கள் இருக்கும் போது, ஆன்லைனில் விளையாடுவதால் தான் தற்கொலை செய்து கொள்வதாக கூறுவதை ஏற்க முடியாது என ஆன்லைன் நிறுவனம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஆதார் இணைப்பை கட்டாயமாக்கியும், நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை யாரையும் விளையாட அனுமதிக்க கூடாது என கட்டுப்பாடு விதித்தும் கொண்டு வரப்பட்ட விதிகளை எதிர்த்து ஆன் லைன் விளையாட்டு நிறுவனங்கள் தாக்கல் செய்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஆன்லைன் நிறுவனம் தரப்பில், ஆன்லைன் விளையாட்டுகள் அடிமைப்படுத்தும் என விதியில் குறிப்பிட்டுள்ளது ஏற்புடையது அல்ல. தற்கொலை சம்பவங்களுக்கு பல காரணங்கள் உள்ள நிலையில், ஆன்லைன் விளையாட்டில் பணம் இழந்ததற்காக மட்டுமே தற்கொலை செய்து கொண்டதாக தமிழக அரசு கூறுவதை ஏற்க முடியாது என தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: ஆன்லைன் விளையாட்டுகளுக்கு நேர கட்டுப்பாடு.. இளைஞர்களின் நலன்களுக்காகவே..!
இதையடுத்து, தமிழக அரசு தரப்பு வாதத்திற்காக வழக்கு விசாரணையை ஏப்ரல் 4ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுக்களை முறைப்படுத்த, கடந்த 2022ம் ஆண்டு தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன் லைன் விளையாட்டுக்கள் ஒழுங்குமுறைச் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் ஆன்லைன் விளையாட்டுக்களை ஒழுங்குபடுத்த விதிமுறைகளை வகுத்து பிப்ரவரி 14ம் தேதி அரசிதழில் அறிவிப்பு வெளியிட்டது.
அதில், ஆன்லைன் விளையாட்டுக்களை விளையாட ஆதார் இணைப்பு கட்டாயமாக்கியதையும், நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை விளையாட்டுக்கு யாரையும் அனுமதிக்க கூடாது என நேர கட்டுப்பாடு விதித்ததையும் எதிர்த்து ப்ளே கேம்ஸ் 24*7 பிரைவேட் லிமிட்டெட், ஹெட் டிஜிட்டல் வொர்க்ஸ், எஸ்போர்ட் ப்ளேயர்ஸ் நலச்சங்கம் உள்ளிட்டோர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இரவு 12 மணி முதல் காலை 5மணி வரை ஆன்லைனில் ரம்மி விளையாட மற்ற எந்த மாநிலங்களிலும் தடை இல்லாத நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் ஏன் தடை என்பது அந்த நிறுவனங்களின் கேள்வியாகும். ஐந்து மணி நேரம் விளையாடக்கூடாது என்ற விதி தங்களை கடுமையாக பாதிக்கும் என்பதும் அவர்களின் வாதம்.
மற்ற விளையாட்டுகளில் ஒருவர் வெற்றி பெற்று மற்றொருவர் தோல்வி அடைந்தால் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை ஆனால் இங்கு தோல்வி அடையும் ஒருவரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறதே? என்பது நீதிமன்றத்தின் கேள்வியாக உள்ளது.
இதையும் படிங்க: இலங்கை அகதிகளுக்கு தமிழ்நாட்டில் பிறந்த குழந்தை.. குடியுரிமை குறித்து பரிசீலிக்க மத்திய அரசுக்கு உத்தரவு..!