ஊட்டி மக்கள் செம ஹேப்பி..! நாளை அதிநவீன மருத்துவமனை திறப்பு.. நிகழ்ச்சியில் பங்கேற்கும் முதல்வர்..!
நீலகிரி மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை (நாளை) ஏப்ரல் 6 ஆம் தேதி திறந்து வைக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், பல நலத்திட்ட பணிகளையும் தொடங்கி வைக்க உள்ளார்.
நாட்டிலேயே பழங்குடியினருக்கு என 50 படுக்கைகளுடன் தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது என்பது தான் இந்த உதகை அரசு மருத்துவமனையின் சிறப்பாக பார்க்கப்படுகிறது. இந்த மருத்துவமனையின் திறப்பு அப்பகுதி மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை நீலகிரி மக்கள் உயர் சிகிச்சைக்காகக் கோவை அல்லது மைசூர் போன்ற தொலைதூர நகரங்களுக்குச் செல்ல வேண்டியிருந்த நிலை மாறி, இனி ஊட்டியில் உலகத்தரம் வாய்ந்த மருத்துவ சேவைகளைப் பெற முடியும்.
கடந்த 3 ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகமும், பொதுப்பணித்துறையினரும் இணைந்து பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையே உதகை மருத்துவமனை பணிகளை முடித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் மருத்துவத் துறை கட்டமைப்பு நிறைவு பெற்ற மாவட்டமாக உள்ளது என்றும் இந்தியாவிலேயே 700 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமைந்துள்ள மலை பிரதேசம் உதகையில் தான் எனவும் கூறப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: அடுத்த 3 மாதத்திற்கு நீலகிரியில் படப்பிடிப்புகளுக்கு தடை.. சுற்றுலாப் பயணிகளுக்கே முக்கியத்துவம்..!
இந்த நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் நாளை நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைக்க உள்ளார். மேலும், 17 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களையும், எமரால்டு அரசு மருத்துவ மனையில் கூடுதல் கட்டடத்தையும் திறந்து வைக்க உள்ளதாகவும் பல்வேறு திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டி வைக்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து நீலகிரி சுற்று பயணத்தை முடித்துக் கொண்டு நாளை மாலை கோவை செல்ல உள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். கோவையில் பத்தாயிரம் பெண்கள் பங்கேற்கும் வள்ளி கும்மி நடனத்தை அவர் நேரில் பார்வை விட உள்ளார். கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியில் சாதனை படைத்த பெண்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்ட உள்ளார்.
இதையும் படிங்க: மே 16-ல் தொடங்குகிறது ஊட்டி மலர் கண்காட்சி.. ஆட்சியர் அறிவிப்பு..!