ஐசிசி கிரிக்கெட் போட்டிக்கு காவலுக்கு செல்லாத 100 போலீசார் டிஸ்மிஸ் ..! சாட்டை எடுத்த பாகிஸ்தான் அரசு..!
பாகிஸ்தானில் நடந்து வரும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டிக்கு காவல் பணிக்குச் செல்ல மறுத்த 100 போலீஸாரை பணி நீக்கம் செய்தது பஞ்சாப் மாகாண அரசு.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் நடந்து வருகிறது. ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்குப்பின் பாகிஸ்தானில் ஐசிசி சார்பான போட்டித் தொடர் நடந்து வருகிறது. இந்தத் தொடரை வெற்றிகரமாக நடத்த வேண்டும் என்ற முயற்சியில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தீவிரமாகப் பணியாற்றி, மைதானங்கள், அரங்குகள், ஆடுகளத்தை கவனத்துடன் தயார் செய்தது. லீக் போட்டிகளும் இதுவரை எந்தவிதமான சிக்கலும் இன்றி நடந்து வருகின்றன.
இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி போட்டித் தொடருக்கு பணி நியமித்து பஞ்சாப் மாகாண அரசு போலீஸாருக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால், அங்கு பணிக்குச் செல்ல மறுத்து வீட்டில் இருந்த போலீஸார், விடுப்பு எடுத்த போலீஸார் என 100 பேரை வேலையிலிருந்து அரசு நீக்கியுள்ளது போலீஸாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இதையும் படிங்க: அமெரிக்காவில் பாகிஸ்தானின் ஆடம்பர ஹோட்டல்… 'விளையாட்டு'க்கு ஆப்பு வைத்த டிரம்ப்..!
பஞ்சாப் போலீஸ் அதிகாரிகள் தரப்பில் கூறுகையில் “ ஏற்ககுறைய 100 போலீஸார், அதிகாரிகள் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் போது பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு ஒதுக்கப்பட்ட பணியை பார்க்கச் செல்லாமல் இருந்ததற்காகவும், பணி செய்ய மறுத்ததற்காகவும் அவர்களை அரசு திடீரென பணிநீக்கம் செய்துள்ளது.
லாகூரில் உள்ள கடாபி அரங்கில் பாதுகாப்பு பணிக்காகவும், வீரர்கள் செல்லும் போது உடன் பாதுகாப்புக்காக செல்லவும், வீரர்கள் ஹோட்டலில் தங்கியிருக்கும்போது அங்கு பாதுகாப்பு வழங்கவும் போலீஸார் நியமிக்கப்பட்டிருந்தனர். ஆனால், பல போலீஸார் தங்களுக்கு நியமிக்கப்பட்ட பணிக்கு செல்லவில்லை, தங்களின் பணியைச் செல்லாமல் விடுப்பு எடுத்தனர். இந்த விவகாரம் குறித்து போலீஸ் ஐஜி உஸ்மான் அன்வர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த விவகாரத்தில் பணிக்குச் செல்லாத, ஒதுக்கப்பட்ட பணியைச் செய்யாத போலீஸார் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க ஐஜி உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து, எந்தவிதமான கவனக்குறையும் இன்றி, வேண்டுமென்றே ஒதுக்கப்பட்ட பணிக்குச் செல்லாமல், அதிலும் குறிப்பாக சர்வதேச விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கு பாதுகாப்பு அளிக்க செல்லாமல் புறக்கணித்துள்ளதை ஏற்க முடியாது. இதனால் பணியை செய்யாத போலீஸாருக்கு எந்தவிதமான மன்னிப்பும் வழங்காமல், ஏன் பணிநீக்கம் செய்கிறோம் என்ற விளக்கம் அளிக்காமல் 100 போலீஸாரை அரசு பணிநீக்கம் செய்துள்ளது” எனத் தெரிவித்தனர். ஆனால், உள்ளூர் சேனல்கள், நாளேடுகள், போலீஸாருக்கு கூடுதலான பணிச்சுமை விதித்தல், நீண்டநேரம் நின்று கொண்டே பணி செய்ததால் சோர்வு ஆகியவற்றால் பலர் பணிக்குச் செல்லவில்லை என்று செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கிடையே சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்திருந்ததாக தகவல்கள் வெளியாகின. இந்த செய்தியை தகவல் தொடர்பு அமைச்சர் அதுல்லா தரார் மறுத்துவிட்டார். அவர் ஊடகங்களிடம் பேசுகையில் “ பாகிஸ்தானில் நடந்து வரும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு எந்தவிதமான தீவிரவாதிகள் அச்சுறுத்தலும் இல்லை, ரசிகர்கள் உலகம் முழுவதிலும் இருந்து வந்து போட்டியை ரசிக்கிறார்கள். மக்கள் கிரிக்கெட்டை கொண்டாடுகிறார்கள். இதில் தீவிரவாதிகள் மிரட்டல் ஏதும் விடுக்கவில்லை” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பாகிஸ்தான் ஜிந்தாபாத்..! ரோஹித் அவுட்டானதால் கொண்டாட்டம்... தரைமட்டமான இஸ்லாமியரின் கடை..!