முடிவுக்கு வந்தது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்..!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வும் முடிந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் மக்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும் நாடாளுமன்றத்தின் செயல்பாடுகள் இந்த கூட்டத்தொடரில் அனல் பறக்கும் வகையில் இருந்ததை யாராலும் மறுக்க முடியாது. மிக முக்கிய மசோதாக்கள் மீது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நீண்ட, நெடிய விவாதங்கள் நடைபெற்றன. ஒட்டுமொத்ததில் ஆக்கபூர்வமாகவே நடந்து முடிந்துள்ளது இந்த கூட்டத்தொடர்.
இந்த கூட்டத்தொடரின் முதல் அமர்வு ஜனவரி 31-ந் தேதி தொடங்கி பிப்ரவரி மாதம் 13-ந் தேதி வரை நடைபெற்றது. அப்போது 2025-26-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 10-ந் தேதி தொடங்கி இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளது.
நடப்பு அமர்வின் போது மொத்தம் 16 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டதாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். அதேபோன்று மக்களவையின் வேலைநேரம் 118% அதிகமாக இருந்ததாகவும் அது நாட்டு மக்களின் நலனுக்காகவே என்பதால் பெருமை கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: அமித் ஷா முதலிடம்..! வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் கைவிட்டதில் உள்துறை அமைச்சகம் அதிகம்..!
வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா விவாதிக்கப்படாமல் நிறைவேற்றப்பட்டுள்ளதாக காங்கிரசின் சோனியா காந்தி கூறியிருப்பது கண்டித்தக்கது என்று ஓம் பிர்லா கூற, அதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். மக்களவையின் கடைசி நாளிலும் ஆர்பாட்டமும், வெளிநடப்பும் நடந்தேறியது.
கோவா மாநில சட்டமன்றத் தொகுதிகளில் பட்டியலிடப்பட்ட பழங்குடியினரின் பிரதிநிதித்துவத்தை மறுசீரமைத்தல் மசோதா, 2024 என்ற மசோதாவை மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார்.
மனநல சுகாதாரச் சட்டம், 2017 மற்றும் மனநல (திருத்த) மசோதா, 2024 ஆகியவற்றைத் திருத்துவதற்கான மசோதாவை அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி தாக்கல் செய்தார்.
சர்ச்சைக்குரிய வக்பு மசோதா இரண்டு அவைகளிலும் நிறைவேறிய பரபரப்புக்கு நடுவே நிதி மசோதா 2025, குடிவரவு மற்றும் வெளிநாட்டினர் மசோதா போன்றவையும் நிறைவேற்றப்பட்டன. குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெறும் மணிப்பூருக்கான பட்ஜெட்டும் நிறைவேற்றப்பட்டது.
இதையும் படிங்க: வக்ஃப் மசோதாவை யார் ஆதரிப்பது? யார் எதிர்ப்பது..? பாஜகவுக்கு பெரும்பான்மை உள்ளதா?