பேருந்துகள் மோதிக்கொண்ட கோர விபத்து.. அதிகாலையில் கேட்ட மரண ஓலம்.. படுகாயம் அடைந்த 18 பேர் கதி?
கடலூர்-சிதம்பரம் சாலை ஆலப்பாக்கம் பகுதியில் இரு பேருந்துகள் மோதிக் கொண்ட விபத்தில் பேருந்தில் பயணித்த 30 பயணிகள் படுகாயம் அடைந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்து ஒன்று விழுப்புரம் - நாகை 4 வழிச்சாலையில் இன்று அதிகாலை 6 மணி அளவில் சென்று கொண்டிருந்தது. அப்போது கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த புதுச்சத்திரம் பகுதியில் கடலூரில் இருந்து குள்ளச்சாவடி செல்வதற்காக தனியார் பேருந்து ஒன்று 20 பயணிகளுடன் குள்ளஞ்சாவடி வந்துள்ளது.
ஆலம்பாக்கம் மேம்பால இறக்கத்தில் இடதுபுறமாக இணைப்பு சாலையில் தனியார் பேருந்தை அதன் டிரைவர் திருப்பி உள்ளார். அப்போது அதே வழியில் சென்று கொண்டிருந்த சென்னையில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் அரசு விரைவுப் பேருந்தின் பின்புறம் அந்த தனியார் பேருந்து மோதி உள்ளது.
தனியார் பேருந்து இடித்த வேகத்தில் சாலை ஓரத்தில் உள்ள வயலில் அரசுப் பேருந்து இறங்கி நின்றது. அதன் உள்ளே இருந்த பயணிகள் அதிர்ச்சியில் அலறி துடித்துள்ளனர். தனியார் பஸ் மோதிய வேகத்தில் இரண்டு பேருந்துகளில் இருந்த பயணிகளும் இருக்கையை விட்டு தூக்கி விசப்பட்டனர்.
பலர் இரண்டு இருக்கைகளுக்கு இடையிலும், இருக்கைகளுக்கு அடியிலும் சிக்கிக் கொண்டு கதறினர். அதிகாலை 6 மணி என்பதால் பலர் தூக்க கலக்கத்தில் இருந்துள்ளனர். தங்களுக்கு என்ன ஆனது என்றே பல பயணிகளுக்கு சில நிமிடங்கள் புரியாமல் இருந்துள்ளது.
இதையும் படிங்க: கள்ளநோட்டு அச்சடிப்பு விவகாரம்.. போலீசை கண்டதும் தப்பி ஓடிய விசிக நிர்வாகி... போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை..!
இதையடுத்து மக்களின் அபய குரல் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், பேருந்து விபத்தில் சிக்கிய பயணிகளை மீட்டனர். பஸ் விபத்து குறித்து போலீசாருக்கும் தகவல் அளித்தனர். தகவல் கிடைத்ததும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த புதுச்சத்திரம் போலீசார் காயமடைந்த பயணிகளை அக்கம் பக்கதினர் உதவியுடன் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பேருந்துகள் விபத்தால் கடலூர், சிதம்பரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. புதுச்சத்திரம் போலீசார் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். மேலும் இதுபற்றி வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
இந்த நிலையில் பஸ் விபத்தில் காயமடைந்தவர்களின் பெயர் மற்றும் விபரங்கள் வெளியாகி உள்ளது. சாக்கான் குடி உதயகுமார்(வயது 35), பூண்டியாங்குப்பம் அமிர்தவள்ளி (வயது 60), பூண்டியாங்குப்பம் தமிசரசி (வயது 65), பூண்டியாங்குப்பம் அலமேலு (வயது65), திருத்துறைப்பூண்டி பிரகாஷ் (வயது 28), திருத்துறைப்பூண்டி நவீன் ராஜ் (வயது34), கடலூர் வாசுகி (வயது 49), பூண்டியாங்குப்பம் வீரகுமார் (வயது 32), திருக்குவளை லெனின் (வயது 49), மேல்மலையனூர் பச்சையப்பன்(வயது 52) உள்ளிட்ட 18 பேர் படுகாயம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நல்வாய்ப்பாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. அரசு பேருந்து மற்றும் தனியார் பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கடலூரில் நிலம் கையகப்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு.. மார்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலாளர் கைது..!