1 மணி நேரம் தான் டைம்.. கலெக்டர் ஆபிசுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. புதுச்சேரியில் பரபரப்பு..!
புதுச்சேரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் இரண்டு மணி நேரம் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி வழுதாவர் சாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் ஒன்று வந்தது. அதில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அடுத்து வரும் ஒரு மணி நேரத்தில் பயங்கர சத்தத்துடன் வெடிக்கும் என்று மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் ஊழியர்கள் உடனடியாக அருகில் உள்ள கோரிமேடு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசாரும் உடனடியாக அலர்ட் ஆகினர். உடனடியாக கோரிமேடு போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து ஊழியர்களை வெளியேற்றிவிட்டு, மெட்டல் டிடெக்டர் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூன்று மாடிகளிலும் சோதனை செய்தனர். அதே போன்று மாவட்ட ஆட்சியர் கார் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலக பார்க்கிங் உள்ளிட்ட வளாகம் முழுவதும் போலீசார் சோதனை இட்டனர். ஒவ்வொரு அறையிலும் சோதனை செய்யப்பட்டது. புதிதாக யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. உள்ளே இருந்த அனைவரின் உடமைகளும் சோதனை செய்யப்பட்டது. மேலும் அப்பகுதியில் போக்குவரத்தை தடுத்து நிறுத்தினர்.
இதையும் படிங்க: இந்திய இறக்குமதிக்கு 26% வரி விதித்த அமெரிக்கா; உற்சாகத்தில் துள்ளி குதிக்கும் பின்னலாடை நிறுவனங்கள்..!
சுமார் 2 மணி நேரமாக நடைபெற்ற வெடிகுண்டு சோதனையில் எந்த ஒரு பொருளும் சிக்கவில்லை. மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இ-மெயிலில் வந்த வெடிகுண்டு மிரட்டல் புரளி என்றும் தெரியவந்தது. மேலும் வெடிகுண்டு சோதனையின் போது வெளியிலிருந்து பொதுமக்கள் யாரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்படாமல் நுழைவாயில் பூட்டப்பட்டது. இது வெறும் புரளி என்பது உறுதி செய்ததை தொடர்ந்து தீயணைப்பு வீரர்களும் வெடிகுண்டு நிபுணர்களும் புறப்பட்டுச் சென்றனர். இதனையடுத்து போக்குவரத்து தடை நீக்கப்பட்டு வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன.
போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டு மணி நேரம் நடத்திய சோதனையால் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இ மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மெயில் முகவரியை சைபர் கிரைம் போலீசாரிடம் அளித்துள்ளனர். யாருடைய மெயிலில் இருந்து மிரட்டல் வந்தது?
எந்த இணைய முகவரி? டோமைன் அட்ரஸ் என்ன? சர்வர் எது என்பது குறித்து எல்லாம் சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். சமீபகாலமாகவே இமெயில் மூலம் மிரட்டல் விடுப்பது அதிகரித்துள்ளது. இதுபோல் மிரட்டல் விடும் ஆசாமிகள் வி.பி.என் போன்றவற்றை பயன்படுத்துவதால் அவர்களை கண்டறிவதில் சிக்கல் எழுந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: 2 நாளில் மகனின் திருமணம்.. தந்தை கத்தியால் குத்திக்கொலை.. சமாதானம் செய்ய சென்றவருக்கு விபரீதம்..!