×
 

ரூபாய் சின்னம் மாற்ற இதுதான் சரியான நேரம்.. வடிவமைப்பாளர் உதயகுமார் வெளிப்படை..!

ரூபாய் சின்னம் மாற்ற இதுதான் சரியான நேரம் என தமிழக அரசு நினைத்திருக்கலாம் என்று கூறியிருக்கிறார் அதன் வடிவமைப்பாளர் உதயகுமார்.

ரூபாய் சின்னத்தை மாற்ற இதுதான் சரியான நேரமாக இருக்கும் என தமிழக அரசு நினைத்திருக்கலாம். இந்த விவகாரத்தில் நான் எந்தக் கருத்தும் கூற இயலாது என்று இந்திய ரூபாய் சின்னத்தை (₹) வடிவமைத்த திமுக முன்னாள் எம்எல்ஏ மகன் உதயகுமார், வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

தேசிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும், மும்மொழிக் கொள்கைக்கு எதிராகவும்  தேவநாகரி எழுத்தை நீக்கிவிட்டு தமிழக பட்ஜெட்டில் ரூ என்ற எழுத்தை தமிழக அரசு வைத்துள்ளது. இந்திய ரூபாய் நோட்டுகளில் இருக்கும் ரூபாய் சின்னத்தை வடிவமைத்தது தமிழகத்தைச் சேர்ந்த உதயகுமார். இவர் ரிஷிவந்தியம் தொகுதி திமுக முன்னாள் எம்எல்ஏ தர்மலிங்கத்தின் மகன் ஆவார். 

ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்எல்ஏவாக தர்மலிங்கம் கடந்த 1971ம் ஆண்டு இருந்தார். உதயகுமார் மும்பை ஐஐடி கல்வி நிறுவனத்தில் பட்டம் பெற்ற உதயகுமார் கவுகாத்தி ஐஐடி கல்வி நிறுவனத்தில் தற்போது பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

இதையும் படிங்க: ரூபாய் (₹) சின்னத்தை உருவாக்கியது யார்..? தமிழகத்துக்கு என்ன தொடர்பு..? கதை தெரியுமா..?

தமிழக அரசு ரூ என்ற தமிழ் எழுத்தை பட்ஜெட்டில் பயன்படுத்தியிருக்கிறது என்று ரூபாய் சின்னத்தை வடிவமைத்த உதயகுமாரிடம் பிடிஐ செய்தி நிறுவனம் கேள்வி எழுப்பியது. அதற்கு அவர் அளித்த பதிலில் “ எனக்கு எந்தவிதமான கருத்தும் இல்லை. தமிழக அரசு திடீரென ஒரு மாற்றம் தேவைப்பட்டதாக உணர்ந்தது மாற்றியுள்ளது, தங்களுடைய சொந்த மொழியின் எழுத்தை வைக்க விரும்பியுள்ளனர். இது தமிழக அரசின் முடிவு. இதில் நான் கருத்துக் கூற ஏதுமில்லை, முழுவதும் தமிழக அரசின் முடிவுதான்.

என்னுடைய தந்தை திமுக முன்னாள் எம்எல்ஏவாக நான் பிறப்பதற்கு முன் இருந்தார். இப்போது, வயது மூப்பு காரணமாக கிராமத்தில் அமைதியாக வாழ்ந்து வருகிறார். அது ஒரு தற்செயல் நிகழ்வுதான், திமுக எம்எல்ஏ மகனாக இல்லாமல் வேறுயாரோவாகவாகக்கூட நான் இருந்திருக்கலாம். 

நான் திமுக முன்னாள் எம்எல்ஏ மகன், திமுக அரசு சின்னத்தின் வடிவத்தை மாற்றியது அனைத்தும் தற்செயல் நிகழ்வுதான். இதைத் தவிர வேறு எதையும் நான் தற்செயலாக நடந்ததாகப் பார்க்கவில்லை. நான் இந்த சின்னத்தை  வடிவமைத்தபோது அப்போது இருந்த அரசு சில தேவைகளை முன்வைத்து சின்னத்தை வடிவமைக்க கோரியது. இந்திய அரசு நடத்திய போட்டிகள் மூலம் இந்த சின்னம் தேர்வானது. நான் இதில் பங்கேற்று சின்னத்தை வடிவமைத்து கொடுத்தபோது எனக்கு முதல் பரிசு கிடைத்தது. அதன்பின் இந்திய ரூபாயில் இந்தச் சின்னம் பொறிக்கப்பட்டது. 

தங்களின் சொந்த வடிவமைப்பில் சின்னத்தை மாற்றுவதற்கு இதுவே சரியான நேரம் என்று தமிழக அரசு நினைத்திருக்கலாம், இதைப் பற்றி நான் அதிகம் சொல்ல வேண்டியதில்லை” எனத் தெரிவித்தார்.

தமிழக அரசு நேற்று ரூபாயின முதல் எழுத்தான ரூ என்ற எழுத்தை பட்ஜெட் ஆவணத்தில் அச்சுப்பதித்து வெளியிட்டது. அந்த ரூ சின்னத்தில் “ அனைவருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும்” என எழுதப்பட்டிருந்தது. இதன் மூலம் ஆளும் திமுக அரசு அனைத்து மக்களுக்கையும் உள்ளடக்கிய அரசு என்று தெரிவித்தது.

ரூபாய் (₹) சின்னம் எப்படி வந்தது?

2010ம் ஆண்டுக்கு முன்புவரை இந்திய ரூபாயை “RS” அல்லது “INR”  என்ற எழுத்துக்களால்தான் சர்வதேச சந்தையில் குறிக்கப்பட்டது. பாகிஸ்தான், இலங்கை கரன்சிகளுக்கும் இதேபோன்ற எழுத்துக்கள் இருந்ததால் குழப்பமும் இருந்தது. இதையடுத்து, 2009ம் ஆண்டு மத்திய நிதி அமைச்சகம், தேசிய அளவில் ஒரு போட்டியை நடத்தி, இந்திய ரூபாய்க்கான சின்னத்தை வடிவமைக்கக் கூறியது. இதற்காக வடிவமைப்பாளர்கள், கலைஞர்கள், ஓவியர்கள், பொதுமக்கள் அனைவரும் தங்களின் கற்பனையை வரைந்து அனுப்பலாம் என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்தது. இந்தியப் பொருளாதாரம், கலாச்சாரத்தை தாங்கி இந்த சின்னம் இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது.

2010, ஜூலை 15ம் தேதி இந்திய ரூபாய்க்கு புதிய (₹) சின்னத்தை அப்போது ஆட்சியி்ல் இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வெளியிட்டது. மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இந்த (₹) சின்னத்தை சர்வதேச சந்தைக்கு அறிமுகம் செய்தார்.
 

இதையும் படிங்க: ரூபாய் (₹) சின்னத்தை உருவாக்கியது யார்..? தமிழகத்துக்கு என்ன தொடர்பு..? கதை தெரியுமா..?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share