ஆதீனத்தின் 24-ஆவது குரு மகாசன்னிதானம் - 'ஒரு கிராமம் ஒரு அரச மரம்' திட்டம் அமல்..!
கோவை பேரூர் ஆதீனத்தின் 24-ஆவது குரு மகாசன்னிதானம் தெய்வத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளார் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க் கல்லூரியின் முத்தமிழ் அரங்க வளாகத்தில் முதல் மரக்கன்று நட்டு துவங்கப்பட்டது.
கோவை பேரூர் ஆதீனத்தின் 24-ஆவது குரு மகாசன்னிதானம் தெய்வத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளார் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, ஈஷா காவேரி கூக்குரல் இயக்கத்தின் வழிகாட்டுதலில் 'ஒரு கிராமம் ஒரு அரச மரம்' எனும் மாபெரும் திட்டம் இன்று (20/03/25) சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க் கல்லூரியின் முத்தமிழ் அரங்க வளாகத்தில் முதல் மரக்கன்று நட்டு துவங்கப்பட்டது.
இவ்விழாவில் காவேரி கூக்குரல் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் இத்திட்டம் குறித்து விளக்கி பேசுகையில், "சத்குரு அவர்கள் கடந்த 2004-ஆம் ஆண்டு 'பசுமை கரங்கள்' என்ற இயக்கத்தினை துவங்கிய போது ஒரு கிராமத்தில் 5 அரச மரங்களை வைத்து வளர்த்தால் அது அங்கு இருக்கும் மக்களின் மன நிலையில் பெரிய மாற்றத்தினை உருவாக்கும் எனக் கூறினார். பேரூர் ஆதீனம் 24-ஆவது குரு மகாசன்னிதானம் அவர்களோடு சத்குருவிற்கு நெருங்கிய தொடர்பு உண்டு.
அந்த வகையில் அவரின் நூற்றாண்டு விழாவை ஒட்டி, தற்போதைய 25-ஆவது ஆதீனம் அவர்களின் ஆசியோடும், ஆதரவோடும் இந்த “ஒரு கிராமம் அரச மரம்” திட்டத்தினை துவங்குகிறோம். முன்பு எல்லாம் 10 அல்லது 20 வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே வந்த பேரிடர்கள் தற்போது ஒவ்வொரு ஆண்டும் வருகிறது. ஒரே நாளில் அதிக மழை பொழிந்து பெரு வெள்ளம் ஏற்படுகிறது, அல்லது மழை பெய்யாமல் வறட்சி ஏற்படுகிறது. ஆகையால் புவி வெப்பமயமாதலால் உருவாகும் பிரச்சினைகளுக்கு மரங்கள் தீர்வாக இருக்கும்.
இதையும் படிங்க: தொப்பியில் 804 என்று எழுதிய பாக். வீரர்... ஒரு மில்லியன் அபராதம்; காரணம் என்ன?
அரச மரங்கள் அதிக அளவில் குறிப்பாக 8 முதல் 10 மனிதர்களுக்கான ஆக்சிஜனை வழங்குகின்றன. ஆனால் பல இடங்களில் அரச மரங்களை நாம் அழித்து விட்டோம். ஆகையால் அதனை மீட்டுருவாக்கம் செய்யும் நோக்கத்தில் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கிராமங்களிலும் அரச மரங்கள் நட வேண்டும் என்று பேரூர் ஆதீனம் அய்யா அவர்களிடம் தெரிவித்த போது, அவரின் முழுமையான ஆதரவை தெரிவித்து தமிழகம் முழுவதும் எடுத்து செல்ல வேண்டும் என்று கூறினார்கள்.
அந்த வகையில் இத்திட்டத்தின் முதற்கட்டமாக கோவை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள 2,000 கிராமங்களில் அரச மரங்களை நடவு செய்ய உள்ளோம். அதனைத் தொடர்ந்து தமிழகத்தின் அனைத்து கிராமங்களுக்கும் இத்திட்டத்தினை எடுத்து செல்வோம்” எனக் கூறினார். இதனைத் தொடர்ந்து பேசிய பேரூர் ஆதீனம் அவர்கள், அரச மரங்கள் அதிக அளவில் ஆக்ஸிஜன் அளிப்பதோடு மகப்பேறு பிரச்சனைகளுக்கு தீர்வாகவும் இருக்கிறது. இன்று அவை பல இடங்களில் வெட்டப்பட்டு அருகி வருகின்றன.
ஆகையால் நம் பேரூர் அடிகளாரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதிலும் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு அரச மரத்தினை நடவு செய்வதை இலக்காக கொண்டு "ஒரு கிராமம் ஒரு அரச மரம்" எனும் மாபெரும் திட்டம் துவங்கப்பட்டு உள்ளது.
அரச மரங்கள் கல்விக்கூடங்களாக, வழிபாடு செய்யும் இடமாக மற்றும் நீதிமன்றங்களாக கூட செயல்பட்டு வந்தன. இத்திட்டத்தின் மூலம் அரச மரக்கன்றுகள் நடுவதோடு நிற்காமல் அதனை பராமரிக்க வட்டம், மாவட்டம், வட்டார அளவில் குழுக்கள் உருவாக்கப்படும். இதன் மூலம் நம் சமயம், பண்பாடு, சுற்றுச்சூழல், உடல் நலம் என அனைத்தும் பாதுகாக்க கூடிய வகையில் இது மரம் நடும் நிகழ்வாக மட்டும் இல்லாமல் ஒரு மறுமலர்ச்சியை மீட்டெடுப்பை ஏற்படுத்துவதாக அமையும்.” எனக் கூறினார்.
இதையும் படிங்க: தந்தை இறந்த துயரிலும்.. தேர்வு எழுத சென்ற 11 வகுப்பு மாணவன்..!