தமிழ்நாட்டில் பாஜகவினர் கலவரத்தை ஏற்படுத்த முயற்சி... திருப்பரங்குன்றத்தை சுட்டிக்காட்டி அமைச்சர் சேகர்பாபு ஆவேசம்...
தமிழ்நாட்டில் பாஜகவினர் கலவரத்தை ஏற்படுத்த முயற்சி: அமைச்சர் சேகர்பாபு ஆவேசம்
தமிழ்நாட்டில் இந்துக்களும், இஸ்லாமியர்களும் சகோதரர்களாக வாழ்ந்து வரும் நிலையில், அவர்களுக்கு இடையே விரோதத்தை வளர்த்து கலவரத்தை மூட்ட பாரதிய ஜனதா கட்சி முயற்சித்து வருவதாக தமிழக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு குற்றஞ்சாட்டி உள்ளார்.
திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க வலியுறுத்தி பிப்ரவரி 4-ந் தேதி அங்குள்ள 16 கால் மண்டபத்தில் ஆர்பாட்டம் நடைபெறும் என இந்து முன்னணி அமைப்பு அறிவித்தது. இதற்கு பல்வேறு இந்து அமைப்புகளும், தமிழக பாரதிய ஜனதா கட்சியும் ஆதரவு தெரிவித்தன. இதையடுத்து மதுரை மாவட்டத்தில் 2 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்தார் மாவட்ட ஆட்சியர் சங்கீதா. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்து முன்னணி நிர்வாகிகளும், பாஜக நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி மதுரை பழங்காநத்தத்தில் பொதுமக்களுக்கு இடையூறு இன்றி ஆர்பாட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பழங்காநத்தத்தில் திரண்டு திருப்பரங்குன்றம் மலை இந்துக்களுக்கே சொந்தம் என்று முழக்கமிட்டனர். திமுக அரசு பாரபட்சமாக நடப்பதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர்.
இதையும் படிங்க: திருப்பரங்குன்றத்தில் அயோத்தி யுத்தம்.. தாலிபன் திமுக அரசு.. கோபத்தில் கொந்தளித்த எச். ராஜா..!
இதுகுறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, நேற்று திருப்பரங்குன்றத்தில் நடந்தது தேவையற்ற போராட்டம் என்று விமர்சித்தார். அந்த போராட்டத்தில் பங்கேற்றவர்கள் இந்துக்களே அல்ல என்றும் அவர் சந்தேகம் எழுப்பி உள்ளார். ஆண்டாண்டு காலமாக இந்துக்களும், இஸ்லாமியர்களும் திருப்பரங்குன்றத்தில் தத்தமது முறைப்படி வழிபாடு செய்து வரும் நிலையில், அப்பகுதி மக்களே இதனை பிரச்னையாக்குவதை விரும்பவில்லை என்று சேகர்பாபு கூறியுள்ளார்.
போராட்டம் என்ற பெயரில் பாஜகவினர் திமுக அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும், கலவரத்தை தூண்ட முயற்சிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். கலவரத்தை ஏற்படுத்தும் பாஜகவின் முயற்சி தமிழ்நாட்டில் பலிக்காது என்று சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: உங்கள் நாடகங்கள் விரைவில் அம்பலமாகும்... திருப்பரங்குன்றம் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினை வறுத்தெடுக்கும் மத்திய இணையமைச்சர் எல். முருகன்.!