×
 

செல்வப்பெருந்தகை எடுத்த அந்த முடிவு...நீக்க கோரி  திரண்ட மாஜி தலைகள்...பின்னணியில் யார்?

மாவட்ட தலைவர்களை மாற்றும் முடிவை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை எடுத்ததால் செல்வப்பெருந்தகையை நீக்க கோரி முன்னாள் தலைவர்கள், எம்பிக்கள், மாவட்ட தலைவர்கள் டெல்லியில் முகாமிட்ட நிலையில் பின்னணி காரணம் வேறொன்று என பேச்சு அடிபடுகிறது. 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் இதுவரை ஏதாவது ஒரு மூத்த தலைவர்களுடைய ஆதரவாளர்கள், அனுதாபிகளுக்கு அவர்களின் பரிந்துரையின் பெயரில் மாவட்ட பொறுப்புகளுக்கும், மாநில பொறுப்புகளுக்கும் நியமிக்கப்பட்ட வந்தனர். இந்தை நிலையில் செல்வப்பெருந்தகை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக பொறுப்புக்கு வந்தார். அவர் காங்கிரஸ் கட்சியை மாற்றி அமைக்க விரும்பினார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக செல்வப் பெருந்தகை அடிமட்ட தொண்டனும் மாவட்ட தலைமைக்கு விண்ணப்பிக்கலாம் அதுவும் யாருடைய பரிந்துரை இல்லாமல் தன்னிச்சையாக இணையதளம் வாயிலாக பரிந்துரைக்க முடியும் என்ற நிலைமையை உருவாக்கினார். இதுதான் அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. காரனம் அவர் இருக்கின்ற மாவட்ட தலைவர்களின் பதவிக்கு வேட்டு வைப்பதால் அனைவரும் ஓரணியில் திரண்டு நிற்கின்றனர்.

இதையும் படிங்க: தமிழகத்துக்கு கல்வி நிதி மறுப்பு.. ஒன்றுகூடிய திமுக கூட்டணி கட்சிகள்... மத்திய அரசுக்கு எதிராக அதிரடி முடிவு.!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி புதிய ரத்தம் பாய்ச்சினால் மட்டுமே கட்சி வளர்ச்சி அடையும் என்ற எண்ணத்துடன் செல்வ பெருந்தகை இத்தகைய அறிவிப்பை வெளியிட்டார் என அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். ஆனால் அது ஆண்டாண்டு காலமாக இருக்கும் தங்கள் அஸ்திவாரத்தை அசைப்பதாக உள்ளது, எங்கள் தூக்கத்தை கெடுக்க நீ யார் என செல்வப்பெருந்தகைக்கு எதிராக முன்னாள் தலைவர்கள் திருநாவுக்கரசர், தங்கபாலு, மாணிக் தாகூர், ராபர்ட் புரூஸ் உள்ளிட்ட எம்பிக்களும் டெல்லி சென்றுள்ளனர். இதில் திருநாவுக்கரசர் ஆதரவு மாவட்ட தலைவர்கள் மாநிலம் முழுவதும் அதிக அளவில் இருக்கின்றனர். 

கட்சி ஏதாவது முடிவெடுத்தால் அதை நடைமுறைப்படுத்தாமல் இவர்கள் அனைவரும் இடையூறு ஏற்படுத்துவதாக கூறுகின்றனர். தமிழகத்திலேயே மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக் தாகூர் தொடங்கி டெல்லியில் உள்ள முன்னாள் இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் சக்திக்கு ஏற்ப செல்வ பெருந்தகைக்கு எதிராக  நீக்க வேண்டும் என்கிற ஒரே நோக்கத்துடன் பலவிதமான யுக்திகளை கையாண்டு வருகின்றனர். 

சொக்கர் ஸ்ரீ ராஜா என்பவர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவியவர். இவரது தந்தை சொக்கர் தமாக ஆரம்பிப்பதற்கு முன்னணியில் இருந்தவர், தூணாக இருந்தவர், அவரும் திமுகவின் ஒரு ராஜ்யசபா எம்.பியும், மாணிக் தாகூரும் சிண்டிகேட் என்கிறார்கள். செல்வப்பெருந்தகைக்கு எதிர் வினையாற்றும் விதமாக தமிழகத்திலிருந்து டெல்லிக்கு சென்ற பலரின் மூலமாக பல காய்களின் நகர்த்தி வருகின்றனர். இது காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி விவகாரம் என்று பார்த்தால் அதெல்லாம் சும்மாங்க இதன் பின்னணியே வேறு என நமக்கு அதிர்ச்சியூட்டினர் காங்கிரஸ் கட்சியில் உள்ள சிலர். 

என்னவென்று கேட்டபோது ”செல்வப்பெருந்தகையை காங்கிரஸ் கமிட்டி தலைவராக கொண்டு வரும்போதே அவர் திமுகவுக்கு அச்சுறுத்தலாக இருப்பார் என்று பேசப்பட்டது. ஆனால் செல்வப்பெருந்தகை இந்தியா கூட்டணியில் திமுகவும் இருப்பதால் கூட்டணியுடன் அனுசரித்து போனார். செல்வப்பெருந்தகை மற்ற காங்கிரஸ் தலைவர்கள் போல் அறிவாலயத்தில் இருப்பவர் அல்ல, ஆதரிக்கும் விஷயத்தில் ஆதரிப்பது, விமர்சிக்கும் விஷயத்தில் விமர்சிப்பது என்கிற நிலைப்பாடு திமுக தலைமைக்கு கோபத்தை கிளப்பி உள்ளதாக கூறப்படுகிறது. 

தவெக ஆரம்பித்து விஜய் மேடையில் திமுகவையும், பாஜகவையும் கடுமையாக விமர்சித்தபோது மற்ற தோழமைக் கட்சித்தலைவர்கள் இதனால் விஜய்யை கடுமையாக எதிர்த்தபோது செல்வப்பெருந்தகை விஜய் அவரது கருத்தைச் சொல்கிறார், கட்சி ஆரம்பிக்க யாருக்கும் உரிமை இருக்கிறது, அவர் என்ன கொள்கையில் செல்கிறார் என்பதை பொருத்திருந்து பார்ப்போம் என்று பொத்தாம் பொதுவாக பேசியதை திமுக தலைமை ரசிக்கவில்லை” என்று தெரிவித்தார். 

அதன் பின்னரும் செல்வப்பெருந்தகை பெரிய அளவில் விஜய் எதிர்ப்பை காட்டவில்லை, திருமாவளவன் புத்தக வெளியீட்டு விழாவிலேயே விஜய்யுடன் கலந்துக்கொள்ள எதிர்ப்பு இருந்தது. ஆனால்  செல்வப்பெருந்தகை விஜய் இந்தியா கூட்டணிக்கு வரவேண்டும் என பகீரங்க அறிவிப்பை வெளியிட்டார். திமுகவை கடுமையாக விமர்சிக்கும் விஜய் இந்தியா கூட்டணிக்குள் எப்படி வர முடியும் என்றால், ராகுல்-விஜய் பேசியுள்ளனர் என்கின்றனர். ராகுலிடம் விஜய்யை எதிர்க்கவேண்டும் என செல்வப்பெருந்தகை வலியுறுத்தவில்லை மாறாக ஆதரிக்கிறார் என்கிற கோபம் திமுக தலைமைக்கு உண்டு என்கின்றனர். 

இதன் காரணமாக 2026 தேர்தலில் காங்கிரஸ் திமுக கூட்டணிக்குள் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும். கூடுதலாக பெரும் எண்ணிக்கையிலான தொகுதியை மாநில தலைவர் என்கிற முறையில் செல்வப்பெருந்தகை டிமாண்டாக வைப்பார், டெல்லியிலும் திமுக தலைமை இதுகுறித்து பேச முடியாது. காரணம் எந்த பிரச்சனையிலும் தலையிடுவதில்லை என்கிற முடிவில் ராகுல் இருக்கிறாராம். அதையும் மீறி கொண்டுச் சென்றால் மாநில தலைவர், பொறுப்பாளர், பொருளாளர், அகில இந்திய தலைவர் கார்கே என பெரும் ரூட்டை காட்டுகிறார்கள். 

கார்கேவும் 2024 மக்களவை தேர்தலில் 21 தொகுதி கேட்டு, பின்னர் 16 தொகுதி கேட்டு போராடி மீண்டும் அதே பழைய 10 தொகுதிகளையே வாங்கியதை மறக்கவில்லை. ஆகவே இம்முறை 60 தொகுதிகள் வரை கேட்டு பெற வேண்டும், இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது தவெக, அதிமுக என்கிற முடிவில் இருக்கிறாராம். இதனால் செல்வப் பெருந்தகையை இப்போதே நீக்கி வேறு ஒரு தோதான தலைவரை தமிழ் நாட்டுக்கு வரவழைத்து விட்டால் நம் இஷ்டத்துக்கு சீட்டு எண்ணிக்கையை நிர்ணயிக்கலாம் என்று திமுக நினைக்கிறது என்கிறார்கள். இது தலைவர் ஸ்டாலினுக்கு தெரியுமா தெரியாது, வியூக வகுப்பாளர்கள் திட்டம் அதன்படித்தான் காய் நகர்த்தப்படுகிறது என்றார் அந்த காங்கிரஸ் நண்பர். 

”கூடுதலாக இன்னொரு தகவல் என்று சொன்ன அவர், இங்கிருந்து சென்ற கும்பல் அகில இந்திய தலைவர் கார்கே, பொதுச் செயலாளர் கேசி.வேணுகோபால் உள்ளிட்டோரை சந்திக்க திட்டமாம். “நான் இண்ட்ரஸ்ட் காண்பித்தால் சிக்கலாகிவிடும். ஏற்கனவே வாய்க்கா தகராறு இருக்கு, கார்கேவிடம் பேசிக்கொள்ளுங்கள் என்று கே.சி.வேணுகோபால் நகர்ந்துவிட்டாராம்.  ஆனால் கார்கே அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்கவில்லை.

போய் மாநில பொறுப்பாளரை பாருங்கள் என அனுப்பி விட்டார்களாம். இனி எந்த பிரச்சனை என்றாலும் மாநில தலைவரை பார்க்கணும், அவர் சம்பந்தப்பட்ட பிரச்சனை என்றால் மாநில பொறுப்பாளரை பார்க்கணும், இங்கெல்லாம் கோப்புகளை தூக்கிக்கொண்டு வரக்கூடாதுன்னு டெல்லி தலைமை சொல்லி அதை சர்குலராகவும் போட்டு அனுப்பி விட்டார்களாம்”. என்றார் அந்த நண்பர்.

”இதையடுத்து கிரிஸ் ஜோடாங்கரை சந்தித்து கோப்புகளை கொடுத்துள்ளனர், நான் பார்த்துக்கொள்கிறேன் என அவர் விட்டேத்தியான பதிலை சொன்னதால் மாவட்ட தலைவர்கள், எம்பிக்கள், மாஜி தலைவர்கள் தொங்கிப்போன முகத்துடன் சென்னை திரும்பி வந்துள்ளனர். போனதற்கு இனி டெல்லி வரக்கூடாதுன்னு சர்குலரை வாங்கி வந்ததுதான் மிச்சம் என்கின்றனர். இதனால் செல்வப்பெருந்தகையை மாற்றும் முடிவில் ஈடுபட்ட கூட்டணிக்கட்சியின் வியூக வகுப்பாளர்களுக்கும் தோல்வி” என சொல்லி அந்த நண்பர் நகர்ந்தார். 
 

இதையும் படிங்க: திருப்பரங்குன்றம் விவகாரம்… ஓரணியில் திரண்ட திமுக கூட்டணிக் கட்சிகள்..! 'பலியாடாகும்' மாவட்ட ஆட்சியர் சங்கீதா..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share