அதானி துறைமுகத்தில் காணாமல் போன ரூ.9 கோடி மதிப்புள்ள வெள்ளி கட்டிகள்... கதி கலங்கிப்போன அதிகாரிகள்!
காட்டுப்பள்ளி அதானி துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட கண்டெய்னரில் இருந்து 9கோடி ரூபாய் மதிப்பிலான வெள்ளி கட்டிகள் மாயம் என போலீசில் புகார்.
சென்னை ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த தனியார் ஏற்றுமதி இறக்குமதி நிறுவனம் ஒன்று லண்டனிலிருந்து 2கண்டைனர்கள் மூலம் சுமார் 39 டன் வெள்ளிக்கட்டிகளை இறக்குமதி செய்தது. 2கண்டெய்னர்கள் மூலம் வந்த வெள்ளி கட்டிகளை துறைமுகத்திலிருந்து லாரிகள் மூலம் தங்களது வேர் ஹவுஸ் நிறுவனத்திற்கு கொண்டு சென்று தனியார் நிறுவனம் ஆய்வு செய்தது. 20 டன் எடை கொண்ட வெள்ளி கட்டிகள் வந்த கண்டைனர் பெட்டி சரியாக இருந்த நிலையில், 19 டன் எடை கொண்ட வெள்ளி கட்டிகள் வந்த கண்டைனர் பெட்டியில் எடை குறைவாக இருந்தது தெரியவந்தது.
தொடர் ஆய்வில் சுமார் 9 கோடி ரூபாய் மதிப்பிலான 922 கிலோ எடை கொண்ட 30 வெள்ளிக்கட்டிகள் மாயமானது தெரியவந்தது. இதனை தொடர்ந்து கண்டெய்னரில் பொருத்தப்பட்டிருந்த ஜிபிஎஸ் கருவியை தனியார் நிறுவன அதிகாரிகள் ஆய்வு செய்த போது அதானி துறைமுகத்திலிருந்து சரக்குகளை வெளியே அனுப்புவதற்கு முன்பாக இரண்டு முறை கண்டெய்னர் பெட்டி திறக்கப்பட்டிருப்பது உறுதியானது. சுமார் 2 நிமிடம் ஒரு முறையும், 16 நிமிடங்கள் ஒரு முறையும் என 2முறை கண்டைனர் திறக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இந்தியா உட்பட 14 நாடுகளின் விசாக்களுக்குத் தடை... சவுதி அரேபியா அதிரடி..!
இதனையடுத்து அதானி துறைமுகத்தில் தான் வெள்ளிக்கட்டிகள் மாயமாகி இருக்கும் என்பதை உறுதி செய்த தனியார் நிறுவனத்தின் மேலாளர் தாசரி ஸ்ரீஹரி ராவ் இது தொடர்பாக காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் காட்டூர் போலீசார் திருட்டு வழக்கு பதிவு செய்து துறைமுக வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும், கன்டெய்னர் கையாண்டபோது பணியில் இருந்தவர்கள் தொடர்பான பட்டியலையும் சேகரித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இறக்குமதி செய்யப்பட்ட கண்டைனரிலிருந்து 9 கோடி ரூபாய் மதிப்பிலான வெள்ளிக் கட்டிகள் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: 10 ஆண்களுக்குச் சமம்... 50 டன் தேரை அசால்ட்டாக நிறுத்தும் +1 மாணவி - யார் இந்த பத்மாவதி?