ஆகஸ்டுக்கு பிறகு மாதம்தோறும் மின்கட்டணம்..! தமிழக அரசு ஆலோசனை..!
தமிழகத்தில் மாதம்தோறும் மின்கட்டணம் வசூலிக்கும் நடைமுறை தொடர்பாக தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் மூன்று கோடிக்கும் அதிகமான மின் இணைப்புகள் உள்ளன. இந்த மின் இணைப்புகளுக்கான கட்டணத்தை இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கணக்கெடுத்து மின்வாரியம் வசூலித்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் குறிப்பிட்ட தேதிக்குள் கட்டணத்தை செலுத்தாத மின் இணைப்புகள் துண்டிக்கப்படுகிறது. பிறகு அபராத தொகையோடு சேர்த்து மின்கடன் செலுத்திய பிறகு தான் மின்வாரிய ஊழியர்கள் மீண்டும் இணைப்பை வழங்குவது நடைமுறையாக இருந்து வருகிறது.
இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின்கட்டணம் செலுத்துவது என்ற நடைமுறையை மாதம் ஒருமுறை மின்கட்டணம் செலுத்தும் நடைமுறையாக வர வேண்டும் என்று கோரிக்கை வலுத்தது. இதன் நீட்சியாக, கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக தனது தேர்தல் அறிக்கையில் மாதம் ஒருமுறை மின்கட்டணம் வசூல் செய்யும் நடைமுறை கொண்டுவரப்படும் என வாக்குறுதி அளித்தது. இதனிடையே ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணி நடந்து முடிந்தவுடன் மாதம்தோறும் மின்கட்டணம் கணக்கெடுக்கும் நடைமுறை அமல்படுத்தப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி அளித்திருந்தார்.
இதையும் படிங்க: அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியே இலக்கு..! சிஐஐ மாநாட்டில் முதல்வர் பெருமிதம்..!
இந்த நிலையில் மாதந்தோறும் மின் கட்டணம் வசூல் செய்யப்படும் நடைமுறை தொடர்பாக மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கான டெண்டர் கூறப்பட்டுள்ளதாகவும் தகுதியான ஐந்து முதல் ஆறு நிறுவனங்களுக்கு பணி ஆணை வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதற்கான பணிகள் மும்முறமாக நடந்து வரும் நிலையில் தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் அதற்குள் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்ட பகுதிகளில் மாதம் ஒரு முறை மின் கட்டணம் வசூலிக்கும் நடைமுறை சோதனை அடிப்படையில் தொடங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தனர்.
தமிழகத்தில் மூன்று கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட உள்ளதாகவும் முதல் கட்டமாக ஒரு கோடி வீடுகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் நடைமுறை அமலுக்கு வரும் என்றும் கூறியுள்ளனர். வருகிற ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு வீடுகளுக்கு மாதம் தோறும் மின்கட்டணம் கணக்கெடுக்கும் நடைமுறையை செயல்படுத்த தமிழக அரசு ஆலோசித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: தீராத தமிழக மீனவர் பிரச்சினை.. திமுக, காங்கிரஸே மூலக் காரணம்.. மறைமுகமாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் விமர்சனம்!!