என்னது..? விஜய்க்கு ரூ.1000 கோடி சம்பளமா..? வருமான வரி கட்டினாரா..? IT-க்கு தகவல் சொல்லும் அப்பாவு..!
தவெக தலைவர் விஜய் ரூ.1000 கோடி வருவாயில் கடந்த ஆண்டு அவர் 80 கோடி ரூபாய் மட்டுமே வருமான வரியாக செலுத்தியுள்ளார். மீதியை வருமானவரித்துறை சோதனை நடத்தி வசூல் செய்யுமா என சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பினார்.
நெல்லையில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் கலை சங்கமம் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் சுகுமார் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இசைக் கலைஞர்கள் நாட்டுப்புற கலைஞர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தவில் இசைத்து தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த இயல் இசை நாடக மன்ற உறுப்பினர்களுக்கு விருது வழங்கி பாராட்டினார். தொடர்ந்து நெல்லை மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கிராமிய கலைஞர்களுடன் மேடையில் தப்பு இசைத்து கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு மக்கள் பிரச்சனைக்காக போராட்டம் நடத்தும் எந்த அரசியல் கட்சிக்கும் தமிழக அரசு அனுமதி மறுத்தது கிடையாது.
200 கிறிஸ்தவ ஆலயங்கள் மணிப்பூரில் இடிக்கப்பட்ட போது போராட்டம் , வக்பு வாரிய திருத்த மசோதா உ.பியில் வீடுகள் இடிக்கப்பட்ட சம்பவம், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு நிதி வழங்காதது போன்ற பல்வேறு நிகழ்வுகளுக்கு போராட்டம் நடத்த தமிழக வெற்றிக் கழகம் அனுமதி கேட்கவில்லை என்றார். மக்கள் நலம் சார்ந்து பாதிக்கப்பட்ட மக்கள் பக்கம் நின்று போராடியுள்ளார்களா? அதுபோன்ற போராட்டத்தை நடத்த இவர்கள் அனுமதி கேட்கவில்லை.
இதையும் படிங்க: அதிமுக எம்எல்ஏக்கள் ஒரு நாள் சஸ்பெண்ட்.. கவன ஈர்ப்பு தீர்மான விவகாரத்தில் கூச்சல், குழப்பம்..!
ஆண்டுக்கு ஆயிரம் கோடி வருவாயை விட்டு விஜய் மக்கள் பணி செய்ய அரசியலுக்கு வந்திருப்பதாக அக்காட்சியின் நிர்வாகி ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார். ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் வந்திருந்தால் முன்னூறு கோடி ரூபாய் வருமான வரி செலுத்தி இருக்க வேண்டும். ஆனால் நடிகர் விஜய், கடந்த ஆண்டு 80 கோடி மட்டுமே வருமான வரி செலுத்தி இருப்பதாக தகவல்கள் உள்ளது.
மீதம் இருக்கும் 220 கோடி ரூபாய் தொடர்பாக வருமானவரித்துறை சோதனை நடத்தி வசூல் செய்யுமா? அப்படி செய்தால் பாஜகவுடன் அவர்கள் கூட்டணியில் இல்லை என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள். வருமான வரித்துறை சோதனை செய்யாவிட்டால் பாஜக சொல்லித்தான் இவர்கள் அரசியல் செய்கிறார்கள் என்பது நிரூபணம் ஆகிவிடும்.
கிராம சபை கூட்டங்களில் போராட்டம் நடத்தி நாடகத்தை நாங்கள் நடத்தவில்லை. 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு மத்திய அரசு தர வேண்டிய 4000 கோடி ரூபாய் தரவில்லை. அது ஏழை மக்களின் ஊதியம் அதனாலேயே மக்கள் மத்தியில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வங்கிகளில் கடன்களை பெற்றுக் கொண்ட குஜராத்தை சேர்ந்த தொழிலதிபர்களுக்கு மட்டுமே 16.5 லட்சம் கோடி கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இது போன்ற தொழிலதிபர்கள் தமிழகத்தில் இல்லையா?. 50,000 கோடி கல்விக்கடன், விவசாய கடன் என பல்வேறு கடன்கள் சாமானிய மக்களால் பெறப்பட்டுள்ளது. அதனை தள்ளுபடி செய்ய அவர்களுக்கு மனம் இல்லையா? என கேள்வி எழுப்பினர்.
பாஜகவின் மறைமுக திட்டத்தின் அடிப்படையிலேயே விஜயின் தமிழக வெற்றி கழகம் தொடங்கி நடத்தப்பட்டு வருகிறது. மத்திய அமைச்சர் அமித்ஷாவோடு தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தொடர்பில் இருந்தவர் என்பது அனைவரும் அறிந்ததே.பாஜகவின் அஜண்டாவிலேயே தமிழக வெற்றிக் கழகம் இயக்கப்படுகிறது.
100 நாள் வேலை திட்டத்திற்கு 39 ஆயிரம் கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளதாக அண்ணாமலை தெரிவித்த கருத்து குறித்து கேள்வி எழுப்பியதற்கு அவர்கள் கட்சிக்கு வேண்டுமானால் நிதி வாங்கி இருக்கலாம் எங்களுக்கு அதுபோன்ற எந்த நிதியும் வரவில்லை என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
இதையும் படிங்க: தம்பி விஜய்க்கு எங்களைப் பற்றி நல்லா தெரியும்... திமுகவின் கரிசனம் அதிமுகவுக்கு தேவையில்லை - சிதறவிடும் செல்லூரார்..!