நிழல் உலக தாதாவின் கதையை முடித்தது எப்படி? சினிமாவை மிஞ்சும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு..!
இலங்கை நீதிமன்றத்தில் நிழல் உலக தாதாவை சுட்டுக்கொன்ற கூலிப்படை தலைவனை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கொலையில் தொடர்புடைய மற்றோரு பெண்ணை தேடி வருகின்றனர்.
இலங்கை மட்டுமல்ல உலக நாடுகளின் ரெட் அலர்ட்டில் இருந்தவர் நிழல் உலக தாதாவான கணேமுல்ல சஞ்சீவ என்றழைக்கப்படும் சஞ்சீவ குமார சமரரத்ன. சஞ்சீவ மீது கொலை, கொள்ளை, போதைப்பொருள் கடத்தல் என எண்ணற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. போலீசார் தன்னை தீவிரமாக தேடுவதை அறிந்த சஞ்சீவ, கள்ளப்படகு மூலம் இந்தியாவிற்குள் நுழைந்துள்ளான். இங்கிருந்தபடியே தன்னுடைய ஆட்களுக்கு கட்டளைகளை பிறபித்து தொடர்ந்து சட்டவிரோத செயல்களையும் நடத்தி வந்துள்ளான். இதனிடையே கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் 13ம் தேதி நேபாளத்தில் இருந்து இலங்கைக்கு போலி பாஸ்போர்ட் மூலம் சஞ்சீவ சென்றபோது, கட்டுநாயககவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் அவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
அன்றிலிருந்து, சஞ்சீவ வாய் திறந்தால் மாட்டிக்கொள்வோம் என நினைத்த மற்ற நிழல் உலக தாதாக்கள் அவனை கொல்ல சதித்திட்டம் தீட்டி வந்தனர். இந்நிலையில் சஞ்சீவ மீது நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரிக்க நேற்று புதுக்கடை நீதிமன்றத்திற்கு அவனை போலீசார் அழைத்து வந்திருந்தனர். நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்ற அறை எண் ஐந்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கே நீதிபதி முன் கூண்டிலேற்றப்பட்ட சஞ்சீவ சாட்சியம் அளித்துக் கொண்டிருந்தான். அப்போது அங்கே வக்கீல் உடையில் இருந்த நபர் ஒருவர் சஞ்சீவ-யிடம் கேள்விகளை கேட்பது போல அருகில் வந்து 5 முறை சஞ்சீவ மீது துப்பாக்கியால் சுட்டார். அத்தனை தோட்டாக்களும் சஞ்சீவவின் மார்பை குறிபார்த்தே சுடப்பட்டது.
இதையும் படிங்க: தமிழக மீனவர்களுக்கு பிப்ரவரி 5-ந் தேதி வரை காவல்...
பின்னர் அந்த நபர் கைத்துப்பாக்கியை அங்கேயே போட்டுவிட்டு, சாதாரண மக்கள் போல் கோர்ட்டுக்குள் துப்பாக்கி சூடு நடக்கிறது என கத்திக்கொண்டு வெளியேறி உள்ளார். ஏதோ அசம்பாவிதம் நடந்ததை அறிந்த போலீசார் கோர்ட் உள்ளே வந்து கைத்துப்பாக்கியை கைப்பற்றினர். வக்கீல் வேடத்தில் வந்தவர் தான் கொலை செய்தது என அறிந்த போலீசார், சிசிடிவி காட்சி மூலம் அவரை அடையாளம் கண்டுபிடித்து அனைத்து எல்லைகளிலும் உள்ள சோதனை சாவடிகளுக்கு தகவல் அளித்துள்ளனர். கைதுப்பாக்கி மறைத்து எடுத்துவர பயன்படுத்தப்பட்ட சட்ட புத்தகத்தையும் கைப்பற்றினர்.
இந்நிலையில் கொலையாளி பத்தளம் அருகே போலீசாரின் சோதனை சாவடியில் சிக்கினான். இலங்கை ராணுவத்தின் உளவுப் பிரிவில் வேலை பார்த்த முகமது அஸ்மன் ஷெர்புதீன் தான் அந்த கொலையாளி என்பது விசாரணையில் தெரிந்தது. முகமது அஸ்மன் ஷெர்புதீன் மீது ஏழு கொலை வழக்குகளில் நிலுவையில் உள்ளன. அதோடு அவனிடம் நடத்திய விசாரணையில் 15 லட்ச ரூபாய்க்காக இந்த கொலையை செய்ய ஒப்புக்கொண்டது தெரிந்தது. முன்பணமாக முகமது அஸ்மன் ஷெர்புதீன் 2 லட்ச ரூபாயை பெற்றுக்கொண்டதையும் ஒப்புக்கொண்டான். துபாயில் உள்ள மற்றோரு நிழல் உலக தாதாவான கெஹல்பத்தர பத்மவின் நெருங்கிய கூட்டாளியிடமிருந்து, இந்தக் கொலைக்கான ஒப்பந்தத்தைப் பெற்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
போதைப்பொருளுக்கு அடிமையான முகமது அஸ்மன் ஷெர்புதீன், அதை வாங்க பணம் வேண்டும் என்பதால் கூலிப்படை தலைவனாக மாறியதும் தெரிந்தது. இந்நிலையில் இந்த கொலையில் மேலும் ஒரு பெண்ணுக்கு தொடர்பு இருப்பது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. அவர் நீர்கொழும்பு கட்டுவெல்லேகம வீதியைச் சேர்ந்த பின்புர தேவகே இஷாரா செவ்வந்தி என்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அவரைக் கைது செய்ய போலீசார் சிறப்பு தனிப்படையை அமைத்துள்ளனர்.
இதையும் படிங்க: சுங்கத்துறையா? அசிங்கத்துறையா?.. அப்பாவிகளிடம் கெடுபிடி காட்டும் சுங்கத்துறை..