×
 

சென்னை வரும் மத்திய கல்வித் துறை இணை அமைச்சர்... கருப்புக் கொடியுடன் திரளும் மாணவ அமைப்புகள்..!

சென்னை ஐஐடி-க்கு வரும் மத்திய கல்வித் துறை இணை அமைச்சர் சுகந்த மஜூம்தாருக்கு எதிராக கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “வட இந்திய மாநிலங்களில் பேசப்பட்டு வந்த 20-க்கும் மேற்பட்ட அந்த மக்களின் தாய்மொழிகளைக் கடந்த ஒரு நூற்றாண்டில் இந்தி எனும் ஆதிக்க மொழிப் படையெடுப்பு சிதைத்துள்ளது. தற்போது தமிழகத்துக்குள் மும்மொழிக் கொள்கை என்ற முகமூடி அணிந்து நுழைய முயற்சிக்கிறது. மேலும் இந்தியின் வழியே சமஸ்கிருதத்தைத் திணித்துத் தமிழர்களின் பண்பாட்டைச் சிதைக்கும் சூழ்ச்சியும் இதில் அடங்கியிருக்கிறது.

இந்நிலையில், நாளை (பிப்.28) தமிழகத்துக்கு வருகை தருவதாக இருந்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராகக் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்த எமது கூட்டமைப்பு உள்பட பல்வேறு அமைப்புகளும் திட்டமிட்டிருந்த நிலையில், தர்மேந்திர பிரதானின் பயணம் ரத்து செய்யப்பட்டிருப்பது தமிழகத்தின் உணர்வெழுச்சிக்கும், மாணவர்களின் போராட்டங்களுக்கும் கிடைத்துள்ள வெற்றியாகும்.

இதையும் படிங்க: அடுத்து திமுகவா, தவெகவா..? பாஜகவிலிருந்து விலகிய ரஞ்சனா நாச்சியார் அதிரடி சரவெடி முடிவு..!

எனினும், ஐஐடி-யில் நடைபெறும் விழாவில் மத்திய கல்வித் துறை இணை அமைச்சர் சுகந்த மஜூம்தார் கலந்துகொள்வதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. தர்மேந்திர பிரதான் என்ற ஒருவரை மட்டும் கண்டிப்பதல்ல, தமிழகத்துக்கு நிதி தர மறுத்து, இந்தியையும், தேசியக் கல்விக் கொள்கையையும் திணிக்க முனையும் மத்திய அரசைக் கண்டித்தே இந்தப் போராட்டம் என்பதால், மத்திய கல்வித் துறை இணை அமைச்சர் சுகந்த மஜூம்தாருக்கும் கருப்புக் கொடி காட்டுவது என்று மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு முடிவெடுத்துள்ளது.

திமுக மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் தலைமையில், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், இந்திய மாணவர் சங்கம், சமூக நீதி மாணவர் இயக்கம், தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ், திராவிட மாணவர் கழகம், திராவிட மாணவர் பேரவை, திராவிட முன்னேற்றக் கழக மாணவர் அணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, மக்கள் நீதி மய்யம், மதிமுக மாணவர் அணி,மாணவர் இந்தியா, முற்போக்கு மாணவர் கழகம், முஸ்லிம் மாணவர் பேரவை உள்ளிட்ட அமைப்புகள் இணைந்துள்ள “மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு - தமிழ்நாடு (FSO-TN)” சார்பில், சென்னை, ஐஐடி வாயிலில் “மாபெரும் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்” நாளை (பிப்.28) காலை 9.30 மணியளவில் நடைபெற உள்ளது” என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: உங்க வீட்டு பிள்ளைங்கள இந்தி படிக்க வைச்சுட்டு பொது இடத்தில் இந்தி எழுத்துகளை அழிப்பீங்களா.? திமுகவை தெறிக்கவிட்ட தமிழிசை.!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share