வடலூர் வள்ளலார் பெருவெளியில் கட்டுமான பணிகளுக்கு உச்சநீதிமன்றம் தடை....
கடலூர் மாவட்டம் வடலூரில் அமைந்துள்ளது, திருவருட் பிரகாச வள்ளலார் எனும் ராமலிங்க சுவாமிகள் நிறுவிய சத்தியஞான சபை.
அருட்பெருட்ஜோதி, தனிப்பெருங்கருணை எனும் மந்திரத்தை அருளிய வள்ளலார், வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று பாடி எளிய மக்களிடத்தில் இறைவனை கண்டார்.
தன்னுடைய கொள்கைகளை பரப்பவும், பசித்தோருக்கு உணவிடவும் சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை வடலூரில் 1867-ல் நிறுவினார். அவரது மறைவுக்குப் பின்னர் இன்றளவும் சத்தியஞான சபையை நாடி வரும் மக்களுக்கு 3 வேளை உணவு அங்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு விசாரணை: உச்ச நீதிமன்றம் தடை
இந்நிலையில் கடந்த ஆண்டு சத்தியஞான சபையில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் சர்வதேச மையம் கட்ட தமிழக அரசு சார்பில் பிப்ரவரி 17-ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார். ஆனால் சிக்கல் என்னவென்றால், 106 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த இடம் என்பது சமரச சுத்த சன்மார்க்க சங்கம், தருமசாலை, அருட்பெருட்ஜோதி மண்டபம் என மூன்று முக்கிய பிரிவுகளை கொண்டது. எஞ்சிய காலி நிலம், பெருவழி என்று அழைக்கப்படுகிறது. இந்த காலி இடத்தில் தான், ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் சர்வதேச மையம் அமைக்க அரசு முயற்சி மேற்கொண்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வினோத் ராகவேந்திரா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். கட்டுமானங்களுக்கு தடை விதித்து உயர்நீதிமன்றமும் உத்தரவிட்டிருந்தது. இதன் மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் சுதான்சு துலியா, வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை மேற்கொண்டது.
கோயில் பெருவழியில் கட்டுமானங்கள் மேற்கொள்ள சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடை தொடரும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதுதொடர்பாக பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு நோட்டீஸ அனுப்ப உத்தரவிட்டு வழக்கை பிப்ரவரி 28-ந் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
சத்தியஞான சபையில் இருந்து ஒருகிலோ மீட்டர் தொலைவில் முதியோர் இல்லம் மற்றும் சித்த மருத்துவமனை ஆகியவற்றை உள்ளடக்கிய சர்வதேச மையத்தை கட்டிக் கொள்ளலாம், பெருவழியில் கட்டக்கூடாது என்பது சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பாகும்.
இதையும் படிங்க: மத்திய முதியோர் நலத்துறை வருமா?: மனுதாரர் அரசிடம் முறையிட உச்ச நீதிமன்றம் அனுமதி..