சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலில் பங்குனி பெருவிழா.. மனமுருகி வழிபட்ட பக்தர்கள்..!
சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலில் பங்குனி பெருவிழா கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக வயதான வேடத்தில் உள்ள முருகனை வள்ளி திருமணம் செய்யும் காட்சி நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்திற்கு வடகிழக்கில் 6 கி.மீ தொலைவில் காவேரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோவில். இக்கோயிலில் மீனாட்சி சுந்தரேசுவரர் எழுந்தருளியுள்ளதால் சுந்தரேசுவர சுவாமி கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக திகழ்கிறது.
முருகப்பெருமான் இக்கோயிலில் தகப்பன் சுவாமி எனப் புகழ் பெற்று விளங்குகிறார். குருமலை என்றும், கந்தாசலம், சிரகிரி, சிவமலை , திருவேரகம் என்றும் இக்கோவில் அழைக்கப்படுகிறது.
இதையும் படிங்க: தங்க நகையை ரயிலில் தவறவிட்ட பெண்.. திருடிவிட்டு நாடகமாடிய ஊழியர் கைது..!
தாளமும், சந்தமும் நிறைந்த மெய்ப்பொருள் துறைப் பாடல்கள் இயற்றப் பெற்ற தலம் இது. இத்தலத்தில் உள்ள முருகனைப் பற்றி அருணகிரிநாதர் மற்றும் நக்கீரர் பாடிய பாடல்கள் திருப்புகழில் 4ஆம் திருமுறையில் காணப்படுகின்றன.
தமிழ் ஆண்டுகள் அறுபதைக் குறிக்கும் வகையில் இக்கோவிலில் 60 படிகளில் ஏறிச்செல்ல வேண்டும். விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், சரஸ்வதி, நாரதர், வீரபாகு, அகத்தியர், அருணகிரிநாதர் ஆகியோர் சிலைகள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. சுவாமிநாத சுவாமியின் சன்னதிக்கு எதிராக மயிலுக்குப் பதிலாக யானை வாகனம் உள்ளது தான் இத்தலத்தின் சிறப்பு. இது இந்திரன் அளித்ததாக கருதப்படுகிறது. கருவறையில் முருகனின் வலது கரத்தில் தண்டம் ஏந்தியபடி ஊறு முத்திரையில் நின்ற நிலையில் அருள் பரிகின்றார்.
இப்படியாக பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி பெருவிழா விமர்சையாக நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டு பங்குனி பெருவிழா நடைபெற்று வரும் நிலையில்,அதன் முக்கிய நிகழ்வான வள்ளி கல்யாணம் நடந்தது.
முன்னதாக திருவலஞ்சுழி அரசலாற்றங்கரையில் முதுமை வேடத்தில் இருக்கும் முருகனை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி விநாயகர், யானை ரூபத்தில் வந்து வள்ளியை விரட்டும் நிகழ்ச்சி தத்ரூபமாக நடைபெற்றது.
அப்போது வள்ளி வயதான வேடத்தில் இருக்கும் முருகனை திருமணம் செய்து கொள்வதாக அமையும் திருமண காட்சி நடைபெற்றது. தத்ரூபமாக நடந்த இந்த நிகழ்வை ஏராளமான பக்தர்கள் வியந்து தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க: கணவன் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொன்ற மனைவி..! தகாத உறவால் ஆத்திரம்!