டெல்லி போல 2026இல் தமிழகமும் பாஜக கையில்... தாமரை மலர்ந்தே தீரும் மோடில் தமிழிசை சவுந்திரராஜன்.!
டெல்லியைபோல 2026இல் தமிழகத்தில் தாமரை மலரும் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 1993இல் வெற்றி பெற்றது. பிறகு 1998, 2003, 2008, 2013, 2015, 2020 நடந்த தேர்தல்களில் பாஜகவால் வெற்றிப் பெற முடியவில்லை. இந்நிலையில் 28 ஆண்டுகள் கழித்து பாஜக ஆட்சிக்கு வந்துள்ளது. இதனால் நாடு முழுவதும் பாஜகவினர் உற்சாகத்தில் இருக்கின்றனர். டெல்லி வெற்றியை சென்னை தி.நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பாஜக தொண்டர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். இதில், மாநில முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பிறகு செய்தியாளர்களை தமிழிசை சவுந்தரராஜன் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "தலைநகர் டெல்லியில் பாஜகவின் தலைநிமிர்ந்துள்ளது. ஆம் ஆத்மியின் தலை குனிந்துள்ளது. காங்கிரஸ் நிலையொ குலைந்து போயுள்ளது. வளர்ச்சிக்கான திட்டங்களை பாஜக முன்னெடுத்தது. அதை அங்கீகரிக்கும் வகையில் தலைநகர் மக்கள் பாஜகவுக்கு வாக்களித்துள்ளனர்.
இதையும் படிங்க: கெஜ்ரிவால் எழுச்சியும் வீழ்ச்சியும்... ஊழல் எதிர்ப்பு போராளி வீழ்ந்த கதை
தலைநகரிலே தாமரை மலரும்போது, 2026-ல் தமிழகத்திலும் தாமரை மலரும் என்கிற நம்பிக்கை எங்களுக்கு வந்திருக்கிறது. ஊழலை ஒழிப்போம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த கேஜ்ரிவால் ஊழல் குற்றச்சாட்டில், சிறைக்கு சென்றார். டெல்லியில் எந்த ஒரு வளர்ச்சியையும் அவர் தரவில்லை. இண்டியா கூட்டணி ஒரு தேர்தலைகூட ஒற்றுமையாக எதிர்கொள்ள முடியவில்லை. அதனால், காங்கிரஸ் கட்சியால் ஓர் இடத்தில்கூட வெற்றி பெற முடியவில்லை. இதை நினைத்து திமுக வருத்தப்பட வேண்டும். அதனால்தான், ஈரோடு கிழக்கு தேர்தல் வெற்றியைகூட அவர்களால் கொண்டாட முடியாத சூழ்நிலையில் இருக்கின்றனர்.
டெல்லியில் பட்டியலின மக்கள் அதிகமாக வாழக்கூடிய பகுதிகளில் பாஜகவுக்கு பெரும்பான்மையான வாக்குகள் கிடைத்துள்ளன. இதேபில இஸ்லாமிய மக்கள் வாழும் இடங்களில்கூட 4 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. எனவே, பாஜக ஒரு குறிப்பிட்ட மதத்துக்கும் சமூகத்துக்கும் எதிரானவர்கள் என்ற பொய் பிரச்சாரம் இனி எடுபடாது. விசிக தலைவர் திருமாவளவன் இன்னும் தன்னை பலப்படுத்திக் கொள்ள வேண்டும். ஏனென்றால், இன்னும் பல அதிர்ச்சிகள் அவருக்கு காத்திருக்கிறது " என்று தமிழிசை கூறினார்.
இதையும் படிங்க: ஜீரோ எம்.எல்.ஏ.வில் ஹாட்ரிக் அடித்த ராகுல் காந்திக்கு வாழ்த்துகள்...! காங்கிரஸை கதற விட்ட எச்.ராஜா