×
 

சட்டவிரோத கனிமவள கொள்ளை.. 6 நிறுவனங்கள் ரூ.3500 கோடி செலுத்த உத்தரவு.. அதிரடியை தொடங்கிய தமிழக அரசு !

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் சட்ட விரோத சுரங்கங்கள் மூலம் கனிம வளங்களை கொள்ளையடித்த 6 நிறுவனங்கள் ரூ.3500 கோடி செலுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள கடற்கரையில் சட்டவிரோதமாக கனிம வளம் எடுத்து விற்பனை செய்து வருவதாக சுரங்க  உரிமையாளர்கள் மீது புகார்கள் எழுந்தன. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலும் கோரிக்கை எழுந்தது. இதை அடுத்து 2013இல்  அப்போதைய அதிமுக ஆட்சியில் அரசு செயலாளர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. சட்டவிரோத சுரங்க வழக்கு தொடர்பாக நீதிமன்றத்துக்கு உதவ, அமிகஸ் க்யூரி ஆக வக்கீல் சுரேஷ் நியமிக்கப்பட்டார்.

இந்த குழுக்கள் பல்வேறு ஆய்வுகளை மூன்று மாவட்டங்களிலும் மேற்கொண்டன. இந்த ஆய்வில் முறைகேடுகள் நடந்திருப்பது உறுதியானது. பின்னர் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம், நீதிபதி ஜோதிராமன் அமர்வில் விசாரணை அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன.  இதனால் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில், 30க்கும் மேற்பட்ட தாது மணல் ஆலைகள் மூடப்பட்டன. இந்நிலையில்  திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக கனிம வளம் எடுத்து விற்பனை செய்த 6 நிறுவனங்களுக்கு மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த உத்தரவில், சட்டவிரோதமாக கனிமத்தை எடுத்து விற்பனை செய்ததற்காக மொத்தம் ரூ. 3500 கோடி அரசுக்கு செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் சட்டவிரோதமாக எடுக்கப்பட்ட மணல் 33.62 லட்சம் டன் என்று அறிக்கையில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பாஜகவுக்கு அதிர்ச்சி தந்த தயா சங்கர்..! நெல்லையில் தத்தளிக்கும் தாமரை..!



இதில், வி.வி. மினரல்ஸ் நிறுவனம் மட்டும் 2002 - 2014  காலகட்டத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் 27 லட்சம் டன் கனிமங்களை சட்டவிரோதமாக எடுத்ததாகவும், அதற்கான ராயல்டி மற்றும் கனிமவள கட்டணமாக ரூ.2,195 கோடி செலுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேபோல தூத்துக்குடி மாவட்டத்திலும் சட்டவிரோதமாக எடுக்கப்பட்ட கனிம வளங்களுக்கான தொகையைச் சுரங்க உரிமையாளர்களிடம் வசூலிக்க விரைவில் நோட்டீஸ் பிறப்பிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: மதுரை -தூத்துக்குடி ரயில் திட்டம் கைவிடப்படவில்லை.. தெற்கு ரயில்வே விளக்கம்..

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share