தேர் திருவிழா அனைவருக்கும் சமம்..! யாருக்கும் முன்னுரிமை கிடையாது.. கோர்ட் அதிரடி..!
தேர் திருவிழா என்பது அனைவருக்கும் சமம், குறிப்பிட்டோருக்கு முன்னுரிமை தர முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கோவில் தேர் திருவிழாவில் குறிப்பிட்ட சபாவிற்கு மட்டும் முன்னுரிமை அளிக்க அறநிலையத்துறைக்கு உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
போரூர் பங்குனி உத்திர பால்காவடி, வேல் பூஜா சபா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், போரூரில் உள்ள முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா 48வது ஆண்டாக வரும் ஏப்ரல் 10ம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வருடம் பங்குனி உத்திர விழாவின் போது தேர் இழுக்கும் திருவிழா நடத்த சபா சார்பில் அறநிலையத்துறைக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. ஆனால், குறிப்பிட்ட சபாவிற்கு மட்டும் அனுமதி வழங்க முடியாது என்று கூறி அனுமதியானது மறுக்கப்பட்டுள்ளது. அதனால், அனுமதி வழங்க அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: பக்தர்கள் கவனத்திற்கு! திருப்பதி கோவில் ஜூன் மாத ஆன்லைன் டிக்கெட் விவரங்கள் வெளியீடு..!
இந்த வழக்கு நீதிபதி டி. பரத சக்ரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அறநிலையத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கார்த்திகேயன், கடந்த 2009ம் ஆண்டு முதல் தனி அதிகாரி மூலம் கோவில் விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதனால், இந்தாண்டு குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் தேர் இழுக்க அனுமதிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, கோவிலில் வழிபாடு நடத்த குறிப்பிட்ட சபாவிற்கு மட்டும் தனி உரிமை கிடையாது. அனைவரும் வழிபாடு நடத்த உரிமை உள்ளது. அனைத்து மக்களும் கலந்து கொள்ளும் தேர் திருவிழாவில் சபா சார்பாகவும் கலந்து கொள்ளலாம். திருவிழாவில் பங்கேற்க அறநிலையத்துறையிடம் மனு அளித்து அனுமதி பெற்றுக் கொள்ளலாம் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
இதையும் படிங்க: மாசாணி அம்மன் கோயில் நிதியில் இருந்து ஊட்டியில் ரிசார்ட் கட்டப்பட மாட்டாது.. நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்..!