×
 

தென்காசி கோயிலை சுழற்றி அடிக்கும் ஊழல் புகார்.. 1 மணி நேரம் மந்திரம் சொல்ல ரூ.45 லட்சம் சம்பளமா..?

தென்காசி காசி விசுவநாதர் கோயில் குடமுழுக்கில் 1 மணி நேரம் பங்கேற்கும் சிவாச்சாரியார்களுக்கு 45 லட்ச ரூபாய் சம்பளம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தென்காசி காசி விசுவநாதர் கோயில், அதன் பழைமைக்கும், கலை அழகுக்கும் பேர்போன ஒன்று. குற்றாலத்தின் குளுமை தவழ்ந்து தென்றலாக நுழையும் தென்காசி நகரம், இப்போது திகுதிகுவென பற்றி எரிகிறது. 

தென்காசியில் உள்ள உலகம்மன் உடனுறை காசி விசுவநாதர் கோயில் பிரசித்தி பெற்ற ஒன்று. இங்கு கடைசியாக கடந்த 2006-ம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது. 18 ஆண்டுகள் கடந்த நிலையில், நடப்பாண்டு ஏப்ரல் மாதம் 7-ந் தேதி குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக 15 திருப்பணிகள் மேற்கொள்ள மூன்றரை கோடி ரூபாயும், ராஜகோபுரத்திற்கு மட்டும் ஒரு கோடியே 60 லட்சம் என மொத்தம் 5 கோடி ரூபாய் நிதி இந்துசமய அறநிலையத்துறையால் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதையும் படிங்க: மருதமலை முருகன் கோவிலில் தமிழில் குடமுழுக்கு.. இந்துசமய அறநிலையத்துறை திட்டவட்டம்..!

ராஜகோபுரத்தில் பழுதடைந்த சிற்பங்களை சீரமைத்தல், சுத்தம் செய்யும் பணி, வர்ணம் பூசுதல், கோவில் உள்பகுதியில் சகஸ்ர லிங்கம், பராசக்தி பீடம், சொக்கநாதர்-மீனாட்சி சன்னதி, காலபைரவர் சன்னதி, உலகம்மன் சன்னதி, முருகன் சன்னதி, சுவாமி சன்னதியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 

பெரும்பாலான பணிகள் முடிந்த நிலையில் இன்று காலை கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம் ஆகியவற்றோடு குடமுழுக்குக்கான ஆகமங்கள் தொடங்கின. வரும் 7-ந் தேதி வரை நாள்தோறும் ஆறுகால பூஜைகள் நடைபெறும். 7-ந் தேதி காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் உலகம்மன் உடனுறை காசி விசுவநாத சுவாமி கோபுரங்கள், விமான கோபுரங்கள், மூலஸ்தான பிரதான மூர்த்திகளுக்கு புனிதநீர் தெளிக்கப்பட்டு குடமுழுக்கு நடத்தப்படும். 

ஆனால் கோயில் புனரமைப்பு மற்றும் குடமுழுக்குக்கு செலவான தொகை இதுவென பட்டியல் ஒன்று வெளியானது. ஆனால் ஒன்றுமேயில்லாத விஷயங்களுக்குக் கூட கணக்குக் காட்டி ஒன்றரை கோடி ரூபாய் ஆனதாக எழுதப்பட்டிருந்தது. இது தென்காசி மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. உதாரணத்திற்கு குடமுழுக்கில் ஒருமணி நேரம் பங்கேற்கும் சிவாச்சாரியார்களுக்கு 45 லட்ச ரூபாய் சம்பளம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

அதேபோன்று கோயில் செயல் அலுவலரின் வாய்மொழி உத்தரவையடுத்து 100 டிராக்டர்கள் அளவுக்கு மண் திருடப்பட்டுள்ளதாகவும், குடமுழுக்குக்கான நிதியில் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும் கூறி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் புகார் அளிக்கப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள் இதுபற்றி விசாரிக்கும் வரையிலும், புனரமைப்பு பணிகள் முழுமையாக முடிக்கும் வரையிலும் குடமுழுக்கு நடத்தக்கூடாது என உத்தரவிட்டுள்ளனர்.

சிவன் சொத்து குலநாசம் என்றொரு பழமொழி உள்ளது. திருடியவர்கள் இதனை சிந்திப்பார்களா?

இதையும் படிங்க: குடமுழுக்கு தொடர்பாக நாம் தமிழர் தாக்கல் செய்த மனு.. அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share