அதிகாலையிலேயே பரபரப்பான சென்னை.. தூத்துக்குடி ரவுடியை சுட்டுப்பிடித்த போலீஸ்.. ரவுடிகள் மீது அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு!
பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடைய தூத்துக்குடி பிரபல ரவுடி ஐகோர்ட் மகாராஜாவை கிண்டி அருகே போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் கொலைச் சம்பவங்கள் சாதாரணமாக நடைபெறுவதாகவும், போலீசார் சுதந்திரமாகச் செயல்படவில்லை என்றும் அதிமுக, பாஜ உள்ளிட்ட எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. மேலும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும் எதிர்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து சட்டசபையில் விளக்கம் அளித்த தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், குற்றசம்பவங்கள் குறைவாக தான் நடப்பாதாகவும், ஆனால் அவை அதிகம் வெளியே தெரியவருவதாகவும் கூறினார். எனினும் இதனை எதிர்க்கட்சிகள் ஏற்கவில்லை.
மாறாக போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பதால் தான் இத்தகைய குற்ற சம்பவங்கள் அதிகரிப்பதாக வாதத்தை முன்வைத்தனர். பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான குற்ற சம்பவங்களும், பாலியல் குற்றங்களும் அதிகரிப்பதற்கு இந்த போதைப்பொருள் பழக்கம் அதிகரிப்பு, போதைப்பொருள் நுகர்வு கலாச்சாரமே காரணம் எனவும் தெரிவித்தனர்.
இதனிடையே இத்தகைய சம்பவங்கள் மற்றும் குற்றச்சாட்டுகளால் போலீசாருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக குற்றங்களை தடுப்பதற்கும் குற்றவாளிகளை ஒடுக்குவதற்கும் போலீசார் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பறிபோன இளைஞரின் பார்வை.. ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு.!
இதன் ஒருபகுதியாக தான் ரவுடிகளையும், குற்றவாளிகளையும் துப்பாக்கிச்சூடு நடத்தி பிடிக்கும் வழக்கம். நேற்றும் தமிழகத்தில் ஒரு கொள்ளையனை போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி கைது செய்தனர். கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே சித்திரப்பாடியில் தப்பியோட முயன்ற கொள்ளையனை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். இந்த நிலையில்தான், நேற்று கடலூர், இன்று சென்னை என அடுத்தடுத்து ரவுடிகள் மீது, போலீசாரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்படுகிறது. இன்று அதிகாலையிலேயே தூத்துக்குடி ரவுடி ஐகோர்ட் மகாராஜாவை போலீசார் துப்பாக்கிசூடு நடத்தி கைது செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடியைச் சேர்ந்த பிரபல ரவுடி ஐகோர்ட் மகாராஜா. கடந்த வாரம் ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த பிரபல நகைக்கடை உரிமையாளர் மகனை கடத்திச் சென்று மிரட்ட கூலிப்படை கும்பல் ஒன்று முயற்சி செய்ததாக கூறி ஐந்து பேரை போலீசார் கைது செய்திருந்தனர். அவர்களை ஆதம்பாக்கம் பகுதியில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். இந்த ஆட் கடத்தல் வழக்கின் பின்னணியில் பிரபல ரவுடி ஹைகோர்ட் மகாராஜா இருந்தது விசாரணையில் தெரியவந்தது. இதே ஐகோர்ட் மகாராஜா மீது பல்வேறு கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இவன் மீது கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் என 20 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. மதுரை எஸ்.எஸ். காலனியில் 10 கோடி கேட்டு பள்ளி மாணவனை கடத்திய வழக்கிலும் தொடர்புடையவன் தான் இந்த ஐகோர்ட் மகாராஜா. இதையடுத்து ஐகோர்ட் மகாராஜாவை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த சூழலில் திருநெல்வேலி பகுதியில் பதுங்கியிருந்ததாக வந்த தகவகை அடுத்து ரவுடி மகாராஜாவை போலீசார் கைது செய்தனர். தனிப்படை மூலம் சென்னை கொண்டுவரப்பட்ட நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் வழக்கு தொடர்பாக கிண்டி பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர்.
இன்று அதிகாலை 4:15 மணியளவில் மகாராஜா பயன்படுத்திய பைக்கை பறிமுதல் செய்ய சென்ற போது, தன்னுடைய இருசக்கர வாகனத்தை எடுக்க வேண்டும் போலீசாரிடம் மகாராஜா தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து போலீசார் இருசக்கர வாகனத்தை எடுக்க அனுமதித்த பொழுது இருசக்கர வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நாட்டு துப்பாக்கியால் போலீசாரை தாக்கிவிட்டு ஐகோர்ட் மகாராஜா தப்ப முயன்றுள்ளார்.
அப்போது பணியில் இருந்த உதவிக் காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ரவுடி மகாராஜாவை வலது காலில் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளார். காயம் பட்ட ரவுடி தற்பொழுது ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இதையும் படிங்க: கல்லூரி பேராசிரியருக்கு பாலியல் தொல்லை.. கல்லூரி வளாகத்திலேயே பேராசிரியரை வெளுத்த மாணவர்கள்..!