தருமபுரியில் தந்தத்திற்காக ஆண் யானை பலி.. மூவர் கைது!
தருமபுரி அருகே ஆண் யானையை வேட்டையாடி தந்தம் கடத்தப்பட்ட வழக்கில் மூன்று பேரை வனத்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வனச்சரகம் கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு மாவட்டங்களின் எல்லை புற காடுகளை ஒன்றிணைக்கும் பகுதியாக இருந்து வருகிறது. குறிப்பாக பென்னாகரம் வனச்சரக பகுதியில் அதிகளவில் காட்டு யானைகள் இருந்து வருகின்றன.
இந்த நிலையில் தற்போது யானைகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி அவ்வப்போது மக்கள் வசிப்பிடத்திற்குள் முகாம் விடுவதாக அப்பகுதி மக்கள் வனத்துறையிடம் புகார் அளித்தனர். இதனால் வனத்துறையினர் அவ்வப்போது ரோந்து பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் தான் கடந்த ஒன்றாம் தேதி அன்று பெண்ணாகரம் அடுத்த ஏமனூர் வனப்பகுதியில் ஆண் யானை ஒன்று வேட்டையாடப்பட்டு உயிரிழந்த நிலையில் இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் உயிரிழந்து கிடந்தது ஆண் யானை என்றும் அதன் தந்தத்திற்காக வேட்டையாடப்பட்டு இருப்பது உடற்கூறு ஆய்வில் தெரிய வந்தது.
இதையும் படிங்க: தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம்.. பூரண கும்பம் வழங்கி அழைப்பு விடுத்த மக்கள்!
இதனை அடுத்து இந்த குற்றத்தில் தொடர்புடையவர்கள் குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். முன்னதாக இந்த விவகாரத்தில் வனவர் சக்திவேல் மற்றும் ஏமனூர் பீட் வனக்காப்பாளர் தாமோதரன் ஆகிய இருவரையும் மாவட்ட வன அலுவலர் தற்காலிகமாக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில் குற்றவாளிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க மூன்று தனிப்பிரிவுகள் அமைக்கப்பெற்று விசாரணை தீவிர படுத்தப்பட்டது. தொடர்ந்து விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ், விஜயகுமார் மற்றும் கோவிந்தராஜு ஆகியோர் யானையை துப்பாக்கியால் சுட்டு தந்தங்களை கடத்திச் சென்றது தெரிய வந்தது. இதனை அடுத்து தலைமறைவான மூவரையும் வனத்துறையினர் கைது செய்தனர்.
இதையும் படிங்க: ஐபிஎஸ் அதிகாரிக்கு அனுப்பப்பட்ட மெமோ.. இடைக்கால தடைவிதிக்க நீதிமன்றம் மறுப்பு..!