மதுபோதையில் தகராறு.. நண்பன் மீது கொடூர தாக்குதல்.. கோமாவில் இருந்தவர் இறந்ததால் சிக்கல்..!
மயிலாடுதுறை அருகே 3 இளைஞர்கள் சேர்ந்து தாக்கியதில் கோமா நிலையை அடைந்த இளைஞர் 15 நாட்களுக்குப் பிறகு சிகிச்சை பலனின்றி இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா தொழுதாலங்குடி கிராமம் விக்கிரமன் குத்தாலம் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மகன் திவாகர் (வயது 24). இவர் கடந்த 3-ஆம் தேதி இரவு தேரழுந்தூரை அடுத்த கீழையூர் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்துக்கு சென்றபோது, அவருக்கு ஏற்கனவே அறிமுகமான கீழையூரை சேர்ந்த வசந்தகுமார் (வயது 21), கம்பன்(வயது 21), மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் திவாகரனை மது அருந்த அழைத்துள்ளனர்.
ஏற்கனவே அனைவரும் நன்கு பரீட்சையமான நண்பர்கள் என்பதாலும், அனைவரும் அடிக்கடி சந்தித்து இது போல மது அருந்துவது வழக்கம் என்பதாலும் திவாகரும் அவர்களுடன் மது அருந்த சம்மதம் தெரிவித்து உள்ளார்.
இதனை அடுத்து 4 பேரும் அங்கு அமர்ந்து மது அருந்தியுள்ளனர். மது போதை தலைக்கு ஏறவும், அவர்கள் 3 பேருக்கும், திவாகரனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. போதையில் வாக்குவாதம் முற்றி கைகலப்பானது. இதில், ஆத்திரமடைந்த மூவரும் சேர்ந்து தாக்கியதில் கீழே விழுந்த திவாகர் மயக்கம் அடைந்துள்ளார்.
இதனால் பயந்துபோன மூவரும் தங்களது இருசக்கர வாகனத்தில் திவாகரை ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்ததில் திவாகர் கோமா நிலையை அடைந்துவிட்டதாகக் கூறி அவரை தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: பழிக்கு பழிவாங்க காத்திருந்த ரவுடிகள்.. பட்டா கத்தி, வெடிகுண்டுகள் தயார்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்..!
இது குறித்து தகவல் அறிந்த குத்தாலம் போலீசார், கொலை முயற்சி வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். மேலும் வசந்தகுமார் (வயது 21), கம்பன் (வயது 21), மேலும் 17 வயது சிறுவன் உட்பட மூவரையும் கைது செய்த குத்தாலம் போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், 2 வாரங்களாக சிகிச்சை பெற்றுவந்த திவாகர் 14 நாட்களுக்குப் பிறகு நேற்று இரவு சிகிச்சை பலனில்லாமல் உயிர் இழந்தார். இதனை அடுத்து கொலை முயற்சி வழக்கை போலீசார் கொலை வழக்காக மாற்றம் செய்தனர். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் திவாகர் கொலை சம்பவத்தில் மொத்தம் 6 பேர் ஈடுபட்டுள்ளதாகவும், முக்கிய குற்றவாளிகளான மற்ற 3 பேரையும் வழக்கில் சேர்த்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் குத்தாலம் கடைவீதியில் உயிரிழந்த இளைஞரின் உறவினர்கள் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட முன்னாள் செயலாளர் மயில்வாகணன் தலைமையில் மறியலில் ஈடுபட்டனர். 50-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குத்தாலம் போலீசார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
குற்றச் சம்பவத்தில் தொடர்புடைய 3 பேருமே கைது செய்யப்பட்டு விட்டனர். வேறு யாருக்கும் இதில் தொடர்பு இல்லை என தெரிவித்தனர். இதனை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஏற்றுக்கொள்ளாமல் போராட்டத்தை தொடர்ந்ததால், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 26 பெண்கள் உள்ளிட்ட 52 பேரை குத்தாலம் போலீசார் கைது செய்து தனியார் திருமணக் கூடத்துக்கு கொண்டு சென்று அடைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: பயமுறுத்த தான் குத்துனோம்.. செத்துடுவான்னு நினைக்கல சார்.. இளைஞர் கொலையில் குற்றவாளிகள் வாக்குமூலம்..!