இந்தி திணிப்பை எந்நாளும் எதிர்ப்போம்... மு.க.ஸ்டாலின் கடிதம்..!
தமிழ்நாடு பிடிவாதமாக இல்லை, மொழிக்கொள்கையில் தெளிவாக இருக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாள்தோறும் கட்சித் தொண்டர்களுக்கு கடிதம் எழுதுவதை வாடிக்கையாக்கிக் கொண்டுள்ளார். அந்தவகையில் இன்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது..
மும்மொழிக் கொள்கையை ஏற்கமாட்டோம் என்று தமிழ்நாடு பிடிவாதமாக இருப்பதால் நிதியை இழக்க வேண்டியுள்ளதே என்று சிலர் கேட்கிறார்கள். தமிழ்நாடு பிடிவாதமாக இல்லை. தன்னுடைய மொழிக்கொள்கையில் தெளிவாக இருக்கிறது.
மத்தியில் இதற்கு இருந்த பல ஆட்சியாளர்கள் இந்திஅ திணிப்பு முயற்சியை மேற்கொண்டிருக்கிறார்கள். அப்போதும் தமிழ்நாடு உறுதியாக எதிர்த்து நின்றது. அப்போதெல்லாம், இந்தியை நுழையச் செய்யும் திட்டங்கள்தான் நிறுத்தப்பட்டனவே தவிர, தமிழ்நாட்டின் கல்விக்கான மத்திய அரசின் நிதியை நிறுத்தவில்லை.
இதையும் படிங்க: ஆங்கிலம் கற்றதால் தான் பெரிய நிறுவனங்களில் தமிழர்கள் உள்ளனர்..இந்தியை கற்பதால் என்ன பயன்?.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி..
பாஜக அரசு தான் தமிழ்நாட்டு மாணவர்கள் வயிற்றில் அடிக்கின்ற படுபாதகச் செயலை செய்திருக்கிறது. இந்தி திவாஸ் கொண்டாடப்படும் போதெல்லாம் நம்மை அடிமைப்படுத்திய ஆங்கிலத்தை வெளியேற்றிவிட்டு, இந்தியா முழுவதும் இந்தியை நடைமுறைக்குக் கொண்டு வருவோம் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், பாஜகவினரும் தெரிவிக்கிறார்கள்.
இதன் உள்நோக்கத்தைத் தமிழ்நாடு உணர்ந்திருப்பதால் தான், எதிர்காலத்தில் தமிழர்கள் தங்கள் தாய்மொழியை அடிமைப்படுத்தி விட்டார்கள் என்ற வரலாற்றுப்பழி நேர்ந்திடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
தமிழ்நாட்டு மாணவர்களின் பெருமை மீது பொறாமை கொண்டுதான் பாஜக வஞ்சிக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. இருமொழிக் கொள்கையைக் கடைபிடிக்கும் தமிழ்நாட்டின் மாணவர்கள் எந்த அளவில் கல்வித்தரத்தில் பிற மாநிலத்தவருக்கு குறைவாக இருக்கிறார்கள்?
இதே வாதங்களை இந்தியா முழுவதும் அறியப்பட்ட ஆங்கில நெறியாளரிடம் தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் என் அன்பிற்கினிய பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் வைத்தார். ஆதிக்கமொழித் திணிப்பை எதிர்த்து அன்னைத் தமிழைக் காத்திட சூளுரைத்துள்ள திமுகவுடன் தோழமைக் கட்சியினர் முழுமையாக இணைந்து நிற்கின்றனர். அரசியல் களத்தில் மாறுபட்ட நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகளும் மும்மொழித் திட்டத்திற்கு எதிராகக் குரல் கொடுத்து வருகின்றன. அந்த கட்சிகள் அனைத்திற்கும் என் நன்றி.
தமிழை மதிக்காமல் இழிவுபடுத்தும் மக்கள் விரோத மனப்பான்மையுடன் செயல்படும் ஒரே கட்சியாக பாஜக உள்ளது. தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளையும் இந்தியாவின் ஆட்சி மொழியாக்கிட வேண்டும் என்பதே திமுகவின் கொள்கை. மாநில உரிமைகளைப் பறிக்கும் ஒன்றிய பாஜக அரசின் சர்வாதிகார போக்கிற்கு எதிரான அறவழிப் போராட்டம் எதுவாக இருந்தாலும் அதில் உடன்பிறப்புகளுடன், உங்களில் ஒருவனான நான் முதல் ஆளாக நிற்பேன். இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம், இன்னுயிர்த் தமிழை எந்நாளும் காப்போம்...இவ்வாறு அந்த பதிவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: முதல்வர் பிறந்த நாள்.. கேக் வெட்டி கொண்டாடிய நிர்வாகிகள்..!