தமிழ்நாடு சீருடைப் பணியாளர் நியமன விவகாரம்.. நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்..!
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக ஓய்வு பெற்ற டிஜிபி சுனில் குமார் தகுதியின் அடிப்படையில் மட்டுமே நியமிக்கப்பட்டதாகவும் எந்த வித அரசியல் காரணங்களும் இல்லை என தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக ஓய்வு பெற்ற டிஜிபி சுனில் குமாரை நியமித்து தமிழக அரசு அண்மையில் அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில், சுனில்குமாரின் நியமனத்தை ரத்து செய்யக் கோரி அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் ஐ.எஸ்.இன்பதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அதில், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக பதவியில் இருக்கும் அல்லது ஓய்வு பெற்ற டிஜிபியை நியமிக்கும் வகையில் கடந்த 1991ம் ஆண்டு சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மாணிக்கம் தாகூருக்கு எதிராக விஜயபிரபாகரன் தொடர்ந்த வழக்கு.. காங்கிரஸ் எம்.பி. கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்..!
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக சீமா அகர்வால் மூன்று ஆண்டுகளுக்கு மேல் வாரியத்தின் தலைவராக பதவி வகித்ததாகவும் அதன் காரணமாகவே அவர் மாற்றப்பட்டு சுனில்குமார் நியமிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2012-2020ம் ஆண்டு வரை பல்வேறு காலக்கட்டங்களில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர் செயலராக சுனில்குமார் இருந்துள்ளதாகவும் அதனால் அவருக்கு அந்த துறை குறித்து அவர் நன்கு அறிந்து வைத்திருப்பதாலும் அவர் வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுனில்குமார் ஓய்வுப் பெற்று இருந்தாலும் கூட வாரியத்தின் தலைவராக பணியாற்றும் போது அரசின் விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது டிஜிபி அந்தஸ்தில் உள்ள பதினோரு அதிகாரிகளும் மற்ற துறைகளில் பணியாற்றி வருவதால் ஓய்வு பெற்ற டிஜிபி சுனில்குமார் வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டதாகவும் பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.
பதில் மனு தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து வழக்கின் விசாரணையை மார்ச் 17ம் தேதிக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: அதிமுக முன்னாள் எம்எல்ஏ மீதான ஆள்கடத்தல் வழக்கு.. 6 மாதத்திற்குள் விசாரித்து முடிக்க உத்தரவு..!