×
 

குடியரசுத் தினத்தன்று டிராக்டர் பேரணி, விவசாயிகள் அறிவிப்பு..

தலைநகர் டெல்லியில் விவசாயிகள் போராட்டம்...

இந்தியா அடிப்படையில் வேளாண்நாடு. ஆனால் பல்லாண்டுகளாக தங்கள் கோரிக்கைகளுக்காக போராடியும், உயிர்துறந்தும் வருகிற ஒரு இனம் எதுவென்றால் அது விவசாய பெருங்குடி மக்கள் தான்.. குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளாக தலைநகர் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடைபெறாத நாள் என ஒன்றுகூட இல்லை என்று தாராளமாக கூறலாம்.

இந்தமுறை விவசாயிகள் சங்கத் தலைவரான 70 வயது நிரம்பிய ஜக்ஜித்சிங் தல்லேவால் கடந்த 44 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருகிறார். உச்சநீதிமன்றமே தலையிட்டு அவரது உடல்நிலையை கவனியுங்கள், விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு செவிகொடுங்கள் என கூறியபிறகே அவர்களின் போராட்டம் குறித்து மத்திய அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பஞ்சாப் - அரியானா மாநிலங்களின் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நவாவ் சிங் தலைமையில் முதல்கட்ட சந்திப்பு நடைபெற்றது. 

அப்படி என்னதான் விவசாயிகள் கேட்கிறார்கள்.. அவர்களின் கோரிக்கைகள் எதுவும் புதிதல்ல. தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருவது தான்.. விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம், விவசாயக் கடன் தள்ளுபடி, விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, விவசாயிகளுக்கு எதிராக போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெறுவது, 2013-ம் வருடத்திய நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது பிரதான கோரிக்கைகள். இவை தவிர லக்கிம்கேரி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கிளைக் கோரிக்கைகளும் உள்ளன. 

இதையும் படிங்க: இஸ்ரோவின் புதிய தலைவராக வி.நாராயணன் நியமனம்.. மீண்டும் ஒரு தமிழர், இஸ்ரோ தலைவராகிறார்.

சரி, இவற்றை தருவதற்கு மத்திய அரசுக்கு எது இடைஞ்சலாக இருக்கிறது. விவசாயிகளின் எண்ணிக்கை பலகோடி என்பதால் அவர்களுக்கு ஓய்வூதியம் நிர்ணயம் செய்வது என்பதும் அவற்றை மாதந்தோறும் வழங்குவது என்பதும் நடைமுறையில் சாத்தியம் இல்லை. வெவ்வேறு பருவங்களில் வெவ்வேறு விதமான பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன. ஒருவேளை அவை இயற்கை சீற்றங்களால் நட்டமடையும்போது பயிர் காப்பீடு திட்டத்தின் மூலம் அவை ஈடு செய்யப்படுவதாக அரசின் தரப்பில் கூறப்படுகிறது. விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது மட்டும் இருதரப்பிலும் பேசப்பட்டு நடைமுறைப்படுத்த ஏதுவான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஆனால் இதுவரையிலும் அதில் சிறிதளவு கூட முன்னேற்றம் ஏற்படவில்லை என்பதே துயர்மிகு உண்மை.

டெல்லியின் ஷம்பு பகுதியில் முகாமிட்டுள்ள விவசாயிகள் ஏற்கனவே நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்ல முயன்று கைதாகினர். இந்நிலையில் வருகிற 26-ந் தேதி கொண்டாடப்பட உள்ள குடியரசு தினத்தன்று டெல்லி நோக்கி டிராக்டர் பேரணி நடத்த விவசாய சங்கங்கள் முடிவு எடுத்துள்ளன. மறுபுறம் விவசாய சங்கத் தலைவர் ஜக்ஜித் சிங் தல்லேவால் உடல்நிலை மோசமாகிக் கொண்டே வருகிறது. ஒருவேளை அவருக்கு அசம்பாவிதமாக ஏதேனும் நடக்கும்பட்சத்தில் விவசாயிகள் கொந்தளிப்பின் உச்சிக்கே சென்று விடுவார்கள் என்பதால், மத்திய அரசு இவ்விவகாரத்தில் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருகிறது.

ஆனால் இவற்றுக்கெல்லாம் ஒரே தீர்வு எதுவெனில், விளைபொருட்களுக்கு உரிய விலையை நிர்ணயம் செய்தால் மட்டுதே விவசாயிகளின் ஆதங்கம் அடங்கும் என்பதே உண்மை..

இதையும் படிங்க: இந்திய ஜிடிபி(GDP) நடப்பு நிதியாண்டில் 4 ஆண்டுகளில் இல்லாத அளவு குறையும்: என்எஸ்ஓ முதல்கட்ட கணிப்பு...

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share