இந்தியாவில் போட்ஸ் மூலம் முன்பதிவான 2,000 விசா நேர்காணல்கள் ரத்து.. அமெரிக்கத் தூதரகம் திடீர் உத்தரவு..!
இந்தியாவில் போட்ஸ் மூலம் முன்பதிவான 2,000 விசா நேர்காணல்கள் ரத்து செய்யப்பட்டது.
இந்தியாவில் போட்ஸ் மூலம் ஏஜென்ட்கள் மூலம் முன்பதிவு செய்யப்பட்ட 2 ஆயிரம் விசா நேர்காணல்களை அமெரிக்க தூதரகம் திடீரென ரத்து செய்துள்ளது. அமெரிக்கத் தூதரகத்தில் விசா நேர்காணலில் இடம்பிடிப்பதற்காக ஒவ்வொரு ஏஜென்டிடமும், ரூ.30ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம்வரை பணம் செலுத்தி இந்தியர்கள் ஏமாந்துள்ளது தெரியவந்துள்ளது.
இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் நேற்று எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கருத்தில் “இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் போட்ஸ் மூலம் முன்பதிவு செய்யப்பட்ட 2000 விசா நேர்காணல்களை ரத்து செய்துள்ளது. ஏஜென்ட்கள் மூலம் விசா நேர்காணல்களை பணம் கொடுத்து முன்பதிவு செய்வது அமெரிக்க அரசின் கொள்கைகளுக்கு முரணானது. இதை ஒருபோதும் அரசு பொறுக்காது. இந்த ரத்து உத்தரவு உடனடியாக அமலாகிறது, இந்த 2 ஆயிரம் நேர்காணல்களை ரத்து செய்து, அந்தந்த கணக்குகளையும் முடக்குகிறோம். நாங்கள் தொடர்ந்து மோசடிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம், மோசடிகளை ஒருபோதும் பொறுக்கமாட்டோம்” எனத் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: 7 ஆண்டுகள் சிறை..! புதிய குடியேற்ற மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்..!
அமெரிக்காவுக்கு செல்ல விரும்புவோர் அது கல்வி, வேலை, வர்த்தகம் உள்ளிட்ட பணிகளுக்கு செல்ல விரும்புவோருக்கு அவர்கள் விரும்பும் நேரத்தில் விசா நேர்காணல் தேதிகள் கிடைப்பதில்லை. இதைப் பயன்படுத்தும் டிராவல் ஏஜென்சிகள் சில, ரோபாட்கல் மூலம் நேர்காணல் தேதிகளை முன்பதிவு செய்து, பிளாக் செய்து வைக்கின்றன. நேர்காணல் தேவைப்படுவோருக்கு குறிப்பிட்ட தொகையைப் பெற்றுக்கொண்டு அந்த இடத்தை விற்பனை செய்து விடுகின்றன. நேர்மையாக நேர்காணல் தேதி பெற ஒருமாதம் வரை ஆகும் நிலையில் குறுக்கு வழியில் ஏஜென்ட்கள் மூலம் செல்லும்போது, சில நாட்களில் தேதிகளைப் பெற இயலும்.
ஒரு பெற்றோர் தங்கள் அனுபவத்தைக் கூறுகையில் “என் மகன் அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் படிக்க இடம் கிடைத்துள்ளது. ஆனால் விசா நேர்காணலுக்கு தேதி கிடைக்கவில்லை. குறிப்பிட்ட காலத்துக்குள் கல்லூரியில் சேர வேண்டும் இதனால் வேறுவழியின்றி ஏஜென்ட்களிடம் ரூ.30ஆயிரம் கொடுத்து விசா நேர்காணல் தேதிகளைப் பெற்றோம். இப்போது ரத்தாகிவிட்டது” எனத் தெரிவித்தார்.
பி1,பி2 விசாவில் செல்லுபவர்கள் விசா நேர்காணலுக்காக ஏறக்குறைய 6 மாதங்கள் வரை காக்திருக்க நேரிடும். ஆனால் போட்ஸ் மூலம் ஏஜென்ட்கள் முன்பதிவு செய்தால் சில வாரங்களில் நேர்காணல் வந்துவிடும்.
அமெரிக்க விசா பெறுவதில் பல்வேறு மோசடிகள் நடக்கின்றன என்பதை அறிந்து அமலாக்கப்பிரிவு வழக்குப்பதிவு செய்து விசாரித்தது. அமெரிக்க செல்ல விரும்புவோருக்கு போலியான ஆவணங்களை ஏற்பாடு செய்து, விசாபெற்றுக் கொடுத்து, அதிகமான பணத்தைப் பெற்றுக் கொண்டு விண்ணப்பதாரரை அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கிறார்கள். இதில் பலகோடி மோசடிகள் நடக்கின்றன என்பதை அமலாக்கப்பிரிவு விசாரித்தது.
இதையும் படிங்க: கோல்டன் விசா உங்களுக்கு வேண்டுமா.? இவ்வளவு ரூபாய் இருந்தால் மட்டும் போதும்.!!