வால்பாறையில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் ஸ்ட்ரைக்..! கடைகள் மூடப்பட்டதால் வெறிச்சோடிய நகரம்..!
சுற்றுச்சூழல் உணர்திறன் அறிவிப்பை ரத்து செய்ய கோரி வால்பாறையில் இன்று முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்திற்கான வரைவு அறிவிப்பை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டது. அந்த வரைவு அறிக்கையில், வளமையான வனம், உயிரினங்கள், நீர் ஆதாரம், நதிகள் ஆகியவற்றை எதிர்காலங்களில் மாசில்லாமல் பேணிக்காக்க வேண்டும் என்றும் இயற்கையுடன் இணைந்து மனிதன் உள்ளிட்ட உயிரினங்கள் வாழும் பழக்கத்தை கொண்டு வர வேண்டும்., நீர் ஆதாரங்களின் முழுபயனை அடையவும், நீரின்றி வறண்டு கிடக்கும் நிலபரப்பிற்கு, இங்குள்ள நீரீனை கொண்டு சென்று பயன்படுத்துதல் உள்ளிட்ட காரணங்களை முன்னிருத்தி, மசோதா கொண்டு வரப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த அறிவிப்பு வெளியான தினத்தில் இருந்து 60 நாட்களுக்குள் ஆட்சேபம் தெரிவிக்கலாம் என்று பொது மக்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இந்த சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்திற்கான வரைவு அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில மாதங்களாக வால்பாறையில் வணிக நிறுவனங்கள் மளிகை கடைகள் சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: 100 நாள் வேலை உறுதி திட்டத்திற்கான நிதி எங்கே..? மத்திய அரசைக் கண்டித்து திமுக போராட்டம்..!
இதன் ஒரு பகுதியாக சுற்றுச்சூழல் உணர்திறன் அறிவிப்பை ரத்து செய்யக் கோரி, வால்பாறையின் தேயிலை தோட்ட தொழில் சங்கங்கள் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பணிக்கு செல்லாமல் தங்கள் பணியை புறக்கணித்து, ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வியாபாரிகள், வணிக நிறுவனங்கள், கார் ஆட்டோ பேன் லாரி என அனைத்து சங்கத்தினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக வால்பாறையில் ஜவுளி கடைகள் மளிகை கடைகள் டீக்கடைகள் என அனைத்து கடைகளும் மூடப்பட்டு முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கடையடைப்பு போராட்டம் காரணமாக வால்பாறையில் உள்ள நகராட்சி மார்க்கெட் மற்றும் கடைவீதி பகுதிகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இருப்பினும் அரசு பேருந்துகள் வழக்கம்போல் இயங்குகின்றன.
இதையும் படிங்க: வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் - ஒரே போடாய் போட்ட எல்பிஜி கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள்...!