×
 

பாஜக தயவுக்காக மக்களிடமிருந்து விலகி நிற்கும் அதிமுக.. அதிமுகவை எகிறி அடிக்கும் திருமாவளவன்

தமிழக மக்களிடம் இருந்து அதிமுக மெல்ல மெல்ல விலகி நிற்கிறது. அவர்களே அவர்களுக்கான சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை, ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்திருந்தார். இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. அதன் அடிப்படையில் தங்களுக்கு உள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, உச்ச நீதிமன்றமே மசோதாக்களை சட்டம் ஆக்கியுள்ளது. இதன்மூலம் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உச்ச நீதிமன்றம் பாடம் புகட்டியிருக்கிறது. ஆர்எஸ்எஸ் பின்புலத்தில் வளர்ந்த ஆர்.என்.ரவி, முட்டுக்கட்டை போடுவதன் மூலம் திமுக அரசை நெருக்கடிக்கு உள்ளாக்கவும் செயலிழக்க செய்யவும் முடியும் என்று நம்பினார்.



ஆனால், தமிழகம் அவருக்கு தோதான மண் இல்லை என சட்டப்பேரவையிலும், நீதிமன்றத்திலும் தொடர்ந்து நிரூபித்து வருகிறோம். நாகலாந்தில் அவர் செய்ததை போல தமிழகத்தில் செய்ய முடியாது என்பதை அவர் இப்போது உணர்ந்திருப்பார். திராவிட பாசறையில் வளர்ந்த ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைந்து அவருக்கு பாடம் புகட்டியுள்ளன. இது தமிழக முதல்வருக்கும், தமிழக மக்களுக்கும் கிடைத்த மகத்தான வெற்றி. ஆர்.என்.ரவி போன்ற ஆளுநர்கள் இனி பாஜக ஆளாத மாநிலங்களில் உள்ள அரசுகளுக்கு நெருக்கடி கொடுக்க முடியாது. மாநில அரசுகளை முடக்க முடியாது. அதை செவிலில் அறைந்து பாடம் புகட்டும் வகையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.



எனவே, முதல்வரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக எப்படி ஒரு அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றதோ அதேபோல் நீட் தொடர்பாக பாஜக ஆளாத மாநில அரசுகளை அழைத்து அகில இந்திய அளவில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தி, கல்வி தொடர்பாக அதிகாரத்தை பொதுப்பட்டியலில் இருந்து மாற்றி, மாநில பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும் என்கிற கருத்துருவாக்கத்தை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறோம். அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை கலையரசு குழுவின் பரிந்துரைப்படி 10 சதவீதமாக உயர்த்த வேண்டும்.

இதையும் படிங்க: தமிழகத்தில் பாஜக மலரவே மலராது... பாஜகவுக்கு நாஞ்சில் சம்பத் சாபம்.!!

அதை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்ய வேண்டும். மத்திய தொகுப்பு என்ற பெயரில் மாநில அளவிலான மருத்துவ கல்லூரிகளிலிருந்து நூற்றுக்கணக்கான இடங்களை மத்திய அரசு பறித்து கொள்கிறது. அதை இனி தரத் தேவையில்லை என்கிற வகையில் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். மீண்டும் நீட் விலக்கு மசோதாவை கொண்டு வர வேண்டும் என்றும் முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளேன்.



 பாஜகவின் தயவு வேண்டும் என்பதற்காக தமிழக மக்களின் ஆதரவை இழக்கும் நிலைப்பாடுகளை அதிமுக எடுத்து வருகிறது. இதுபோன்ற நிலைப்பாடுகள் மூலம் தமிழக மக்களிடம் இருந்து அதிமுக மெல்ல மெல்ல விலகி நிற்கிறது.  அவர்களே அவர்களுக்கான சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் வெளியே வரும், வெளியே வரும் என இலவு காத்த கிளிகள் போல காத்திருக்கின்றனர். ஆனால் அவ்வாறு நடக்காததால் அதிமுக விரக்தியில் பேசுகிறது" என்று திருமாவளவன் கூறினார்.

இதையும் படிங்க: எப்படி இருந்த அதிமுக இப்படி ஆயிடுச்சி.. அதிமுகவுக்காக உச் கொட்டும் கார்த்தி சிதம்பரம்.!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share