நான் வாங்கிய கடனை செலுத்திவிட்டேன்... வங்கிகளிடம் அறிக்கை கேட்ட விஜய் மல்லையா!!
கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வங்கிகள் திரும்ப பெற்ற தொகை குறித்து விரிவான அறிக்கையை வெளியிட வேண்டும் என கேட்டு விஜய் மல்லையா மனுதாக்கல் செய்துள்ளார்.
இந்தியாவில் மிகவும் பிரபலமான விமான சேவை நிறுவனங்களில் ஒன்றான கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு கடந்த 2008 ஆம் ஆண்டு சர்வதேச அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அப்போது விமான எரிபொருட்களின் விலைகள் பட மடங்கு உயர்ந்தன. அந்த நேரத்தில் விஜய் மல்லையா நஷ்டத்தில் இருந்த ஏர் டெக்கன் என்ற விமான சேவை நிறுவனத்தை வாங்கினார்.
இதனை வாங்கிய பிறகு விஜய் மல்லையாவிற்கு நஷ்டம் ஏற்பட்டது. மேலும் இதற்கான செலவினங்களும் அதிகரித்தன. இதனால் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் போனதோடு, கடன் தொகையும் ஏறிக்கொண்டே சென்றது. இதை அடுத்து 2012 ஆம் ஆண்டு இந்த விமான சேவை நிறுவனம் முழுவதுமாக மூடப்பட்டது. இந்த நிலையில் விஜய் மல்லையா இந்தியாவை சேர்ந்த சுமார் 17 வங்கிகளிடம் இருந்து 9000 கோடி கடனாக வாங்கினார்.
இவற்றில் பெரும்பாலான பணத்தை இவர் தன்னுடைய விமான சேவை நிறுவனத்திற்கு பயன்படுத்தாமல் தனிப்பட்ட கணக்குகளுக்கும், ஷெல் நிறுவனங்களுக்கும் , வெளிநாட்டிற்கும் அனுப்பி வைத்தது விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில் வங்கிகள் கொடுத்த கடனை திரும்ப கேட்டபோது விஜய் மல்லையாவால் திரும்ப செலுத்த முடியவில்லை.
இதனிடையே விஜய் மல்லையா மீது வங்கிகள் கடன் மீட்பு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தன. விஜய் மல்லையா 1200 கோடி ரூபாய் வட்டியுடன் மொத்தமாக இந்தியாவை சேர்ந்த வங்கிகளுக்கு 6,203 கோடி ரூபாயை செலுத்த வேண்டும் என அறிவித்தது. கடந்த 2016 ஆம் ஆண்டில் விஜய் மல்லையா இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு தப்பிச் சென்றார்.
இதையும் படிங்க: தமிழ் புத்தாண்டு வாழ்த்து மட்டும் சொன்ன விஜய் மல்லையா..! கொந்தளிக்கும் கன்னடர்கள்..!
இதனை அடுத்து அவரை பொருளாதார குற்றவாளி என மத்திய அரசு அறிவித்தது. அதுமட்டுமின்றி இந்தியாவில் இருந்த அவருடைய சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது. விஜய் மல்லையாவை பிரிட்டனில் இருந்து இந்தியாவுக்கு திரும்ப அழைத்து வருவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
பிரிட்டனிலேயே சில சமயம் அவர் கைதும் செய்யப்பட்டார், பின்னர் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது மல்லையாவிடம் இருந்து மட்டும் 14 ,131 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் கையகப்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.
இவை அனைத்தும் அவர் கடன் வாங்கிய வங்கிகளுக்கு திரும்ப வழங்கப்பட்டதாக கூறினார். இதனை அடுத்து தான் விஜய் மல்லையா இந்தியாவை சேர்ந்த வங்கிகள் நான் வாங்கிய கடன் பணத்தை விட அதிகமான தொகையை திரும்பப் பெற்று இருக்கின்றன குறிப்பிட்டார். இருந்தாலும் என்னை குற்றவாளியாகவே வைத்திருப்பது நியாயமா என்றும் வினவினார்.
ஆனால் வங்கிகள் 14,131 கோடி ரூபாய் பணத்தை பெற்றிருந்தாலும் விஜய் மல்லையா வாங்கிய முழு கடன் தொகையும் தங்களுக்கு வந்து சேரவில்லை என இன்னும் கூறி வருகின்றன. இந்த சூழலில் தான் விஜய் மல்லையா கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வங்கிகள் திரும்ப பெற்ற தொகை குறித்து விரிவான அறிக்கையை வெளியிட வேண்டும் என கேட்டு மனுதாக்கல் செய்திருக்கிறார்.
இதையும் படிங்க: வங்கதேசத்தில் இந்து தலைவர் கொலை... கடுப்பான இந்தியா..! கயிற்றை இறுக்கும் அமெரிக்கா..!