காஸ்ட்லி 'லெஹங்கா' அணியாத மணமகள்... வாள் சண்டை போட்ட சம்மந்திகள்... போர்க்களமான திருமண மண்டபம்..!
ஹரியானாவில் மணமகள் அணிந்து வந்த 'லெஹங்கா' விலை குறைவு என்பதால் திருமண மண்டபமே போர்க்களமாக மாறியது.
இந்தியாவில் திருமணங்கள் என்றாலே பிரமாண்டமான கொண்டாட்டங்கள், உணர்ச்சிகரமான தருணங்கள் மற்றும் பிரமிக்க வைக்கும் ஆடைகளுக்கு பெயர் பெற்றவை என்பது அனைவரும் அறிந்தது தான்.
ஆனால் அரியானா மாநிலம் பானிபட் நகரில் நடைபெற்ற ஒரு திருமணம் அதிர்ச்சியூட்டும் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியது. திருமணத்தின் போது மணமகள் அணிய வேண்டிய லெஹங்கா பற்றிய தகராறு முழு அளவிலான குடும்ப போருக்கே வழி வகுத்து, திருமணத்தை ரத்து செய்ய வேண்டிய நிலையில் கொண்டு விட்டு விட்டது.
இதையும் படிங்க: சொத்துக்காக தாயை அடித்து கொடுமை படுத்தும் மகள்.. என்னை விட்டுவிடு என கதறி துடிக்கும் தாய்..
மகிழ்ச்சியாக நடைபெற வேண்டிய திருமணம் சோகத்தில் முடிந்தது எப்படி..?
ஹரியானாவின் பானிப்பட்டைச் சேர்ந்த பெண்ணுக்கு திருமணம் நடைபெற இருந்தது. மணமகன், பஞ்சாபின் அமிர்தசரஸைச் சேர்ந்தவர். இதையடுத்து மணமகன் குடும்பத்தார் திருமண நாள் அன்று பானிப்பட்டுக்கு வந்து சேர்ந்தனர். திருமணச் சடங்கின்போது மணமகள் அணிந்து வந்த 'லெஹங்கா'வை பார்த்ததும், மணமகள் குடும்பத்தார் சண்டை போடத் தொடங்கினர்.
இந்த 'லெஹங்கா'வின் விலை ரூ.20 ஆயிரம் மட்டுமே. ஆனால் நாங்கள் ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள 'லெஹங்கா'வை வாங்குமாறு கூறியிருந்தோமே. அதை ஏன் மணமகள் அணியவில்லை? என்று கேட்டு சண்டை போட்டனர். மேலும் மணமகளின் குடும்பத்தினர் திருமணத்தில் தங்களை வற்புறுத்தி ஆடம்பரமான பரிசுகளை தரும்படி கூறியதாகவும் மணமகன் வீட்டார் குற்றம்சாட்டினர்.
இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு முற்றி கைகலப்பில் முடிந்தது. இந்நிலையில், மணமகனின் உறவினர் ஒருவர் பட்டாக்கத்தியுடன் (வாள்) வந்து தாக்கத் தொடங்கினார். பதிலுக்கு மணமகள் குடும்பத்தாரும் தங்கள் வாள்களை உருவி எதிர்ச்சண்டை போட்டனர். இதனால் திருமண மண்டபத்தில் கூச்சலும், குழப்பமும் நிலவியது.
மண்டபமே போர்க்களமாக மாறியதால் திருமணத்துக்கு வந்த உறவினர்கள் அனைவரும் சிதறி ஓடினர். பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. ஆனால் 'லெஹங்கா' பிரச்சினை ஓயவில்லை. கோபமடைந்த மணமகன் குடும்பத்தார், திருமணத்தை நிறுத்துவதாகக் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
இந்திய திருமணங்கள் பெரும்பாலும் பரபரப்பானவை; பாரம்பரியத்தையும் வானளாவிய எதிர்பார்ப்புகளையும் கொண்டவை. திருமண செலவுகள் மற்றும் குடும்ப கோரிக்கைகள் குறித்த மோதல்கள் சாதாரணமானது தான். என்றாலும் லெஹங்காவை வைத்து திருமணத்தை ரத்து செய்வது ஒரு அரிய நிகழ்வாகும். கலாச்சார முக்கியத்துவம் மற்றும் குடும்ப பெருமை ஆகியவை, சிறிய கருத்து வேறுபாடுகள் கூட, வெடிக்கும் மோதல்களாக மாற்றும் என்பதற்கான தெளிவான நினைவூட்டாக இந்த சம்பவம் அமைந்துவிட்டது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: நான் அம்பானி அல்ல அதானிடா..! ஆடம்பர திருமணத்திற்கு பதில் 10,000 கோடி ரூபாயை வாரி வழங்கிய ஆச்சரியம்