சாவிலும் பிரியாத பாசமலர்கள்; தம்பி இறந்த அதிர்ச்சியில் அக்காவும் உயிரிழப்பு..!
சிவகங்கை மாவட்டத்தில் தம்பி இறந்த அதிர்ச்சியில் அக்காவும் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பாசமலர் பட கிளைமேக்ஸ் காட்சியில் அண்ணன் சிவாஜி இறந்த அதிர்ச்சியில் தங்கை சாவித்ரியும் மரணிக்கும் காட்சிகள் காண்போர் கண்களை இன்றும் குளமாக்கும் அளவிற்கு உணர்ச்சிமிக்கதாக இருக்கும். அதனால் தான் அதீத பாசத்துடன் பழகும் அண்ணன் - தங்கை அல்லது அக்கா - தம்பி உறவுகளைப் பார்க்கும் போது பாசமலர்கள் என வேடிக்கையாக குறிப்பிடுவது உண்டு. ஒன்றாக பிறக்கக்கூட வாய்ப்புள்ள இந்த சகோதர பந்தங்கள், ஒன்றாக இறப்பது என்பது அரிதிலும் அரிதாக நடக்கூடிய சம்பவமாக உள்ளது. குறிப்பாக தனது சகோதரனோ, சகோதரியோ இறந்துவிட்டால், அந்த துயரம் தாளாமல் துடிதுடித்து மரணிக்கும் உறவுகள் அரிதாகவே உள்ளன.
அப்படியொரு உணர்ச்சிப்பூர்வமான சம்பவம் தான் ஒட்டுமொத்த சிவகங்கை மாவட்டையே உலுக்கி எடுத்துள்ளது. சிங்கம்புணரி அருகே கிருங்காக்கோட்டை சாமியாடிகளத்தைச் சேர்ந்தவர் மருதன். 49 வயதான இவர், வழக்கறிஞர் ஒருவரிடம் உதவியாளராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு இரவு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனை கொண்டு சென்றும் சிகிச்சை பலனியின்றி உயிர் இழந்தார்.
இதையும் படிங்க: கேம்ப் ஃபயரில் எரிந்த உடல்... எடுக்க எடுக்க வந்த உடல் பாகங்கள்... கொடைக்கானலில் கொடூரம்!!
மருதன் இறந்ததை கேள்விப்பட்ட அவரது அக்கா புஷ்பம், தம்பியின் வீட்டிற்கு வந்துள்ளார். தம்பியின் உடலின் மீது விழுந்து கதறி அழுத போது மாரடைப்பு ஏற்பட்டு அங்கேயே அவரும் இறந்தாக கூறப்படுகிறது. மருதன் சிறு வயதிலிருந்து, அவரது அக்கா புஷ்பம் பாசத்துடன் வளர்த்துள்ளார். அக்கா, தம்பி இருவரும் உண்மையான பாசமலர்களாகவே இருந்துள்ளனர்.
இந்நிலையில் தான் பாசத்தோடு வளர்த்த ஆருயிர் தம்பி இறந்ததை தாங்கிக் கொள்ள முடியாத துக்கத்தில் புஷ்பமும் இறந்துள்ளார். இருவரது உடலையும் அவரவர் ஊர்களில் ஒரே நேரத்தில் அடக்கம் செய்ய ஏற்பாடுகள் நடக்கிறது. சாவிலும் பிரியாத அக்கா தம்பி, மறைவு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: இளம் வயதில் விட்டு சென்றது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது... மனோஜ் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்!!