2026-ல் திமுக அரசை மாற்றுவோம்.. மகளிர் தினத்தில் வீடியோவில் தோன்றி விஜய் பேச்சு..!
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி வீடியோ வெளியிட்டு வாழ்த்துக் கூறியுள்ள நடிகரும், தமிழக வெற்றிக்கழகத் தலைவருமான விஜய், மகளிருக்கான செய்தியாக 2026-ல் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வருவோம் என்று கூறியுள்ளார்.
கட்சி தொடங்கி இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைத்த போதிலும், வெறும் அறிக்கை வாயிலாகவே, எக்ஸ் தளத்தில் பதிவுகளாகவே கட்சியை நடத்துகிறார் என்று தவெக தலைவர் விஜய் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் நேரடியாக கலந்து கொண்டார் விஜய். வெள்ளை நிற லுங்கியும், வெள்ளை நிற அரைக்கை சட்டையும், தொப்பியும் என டிபிக்கல் முஸ்லீம் தோற்றத்தில் வந்திருந்தார்.
இன்றைய தினம் சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி வீடியோ ஒன்றை விஜய் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது...
இதையும் படிங்க: தவெக கொடி கம்பம் வைப்பதில் சிக்கலா..? நீதிமன்றம் கூறியது என்ன..?
எல்லோருக்கும் வணக்கம் . இன்று மகளிர் தினம், தமிழ்நாடு முழுவதும் உள்ள என்னுடைய அம்மா, அக்கா, தங்கை, தோழி என அத்தனைபேருக்கும் இந்த தினத்தில் வாழ்த்து வாழ்த்து சொல்லாமல் இருக்க முடியாது. உங்கள் அனைவருக்கும் எனது மகளிர் தின வாழ்த்துகள். சந்தோஷம்தானே.
பாதுகாப்பாக இருந்தால்தானே சந்தோஷத்தை உணரமுடியும். அப்படி எந்த பாதுகாப்பும் இல்லாதபோது, எந்த சந்தோஷமும் இருக்காதுதானே? அப்படியென்று நீங்கள் நினைப்பது எனக்கு புரிகிறது. என்ன செய்ய?
நீங்கள், நாம் எல்லோரும் சேர்ந்துதான் இந்த தி.மு.க. அரசை தேர்ந்தெடுத்தோம். ஆனால், அவர்கள் நம்மை இப்படி ஏமாற்றுவார்கள் என்று இப்போதுதானே தெரிகிறது.
எல்லாமே இங்கு மாறக்கூடியதுதானே? மாற்றத்திற்கு உரியதுதானே? கவலைப்படாதீர்கள். 2026ல் நீங்கள் எல்லோரும் சேர்ந்து இல்லை நாம் எல்லோரும் சேர்ந்து மகளிருக்கான பாதுகாப்பை உறுதி செய்ய தவறிய தி.மு.க. அரசை மாற்றுவோம்.
அதற்கு மகளிர் தினமான இன்று நாம் எல்லோரும் சேர்ந்து உறுதியேற்போம். ஒன்றுமட்டும் கூறிக்கொள்கிறேன், எல்லா சூழ்நிலையிலும் உங்களுடைய ஒரு மகனாக, அண்ணனாக, தம்பியாக, தோழனாக உங்களுடன் நான் நிற்பேன். நன்றி வணக்கம்...
இவ்வாறு அந்த வீடியோவில் விஜய் கூறியுள்ளார்.
சர்வதேச மகளிர் தினம் என்ற வகையில், அவர் வெறும் திமுக அரசை மட்டும் மாநில அளவில் பேசியிருப்பது ஏன் என்றும், இந்தியாவில் பிற மாநிலங்களில் நடக்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் பற்றி அவர் எதுவும் குறிப்பிடாததது ஏன் எனவும் அரசியல் நோக்கர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இதையும் படிங்க: அஞ்சலை அம்மாளுக்கு அஞ்சலி செலுத்திய விஜய்..! படப்பிடிப்பு இடைவேளையில் கொஞ்சம் அரசியல்...!