பாஜகவுடன் விஜய் உறவு இருப்பதால் கேட்காமலேயே ஒய் பிரிவு பாதுகாப்பு....அமைச்சர் தா.மோ.அன்பரசன் பகீர்
பாஜகவுடன் விஜய் நல்ல நெருக்கத்தில் இருப்பதால் தான் அவர் கேட்காமலேயே அவருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பை மத்திய அரசு அளிக்கிறது என்று அமைச்சர் தா.மோ. அன்பரசன் குற்றம் சாட்டினார்.
குரோம்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே ‘போதை இல்லாத தமிழகம்' என்ற தலைப்பில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 5 ஆயிரம் பேர் கலந்து கொண்ட மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்த மராத்தான் போட்டியை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு துவக்கி வைத்தார். சிறுவர்கள், பெரியவர்கள், மாற்றுத்திறனாளிகள் என்று அனைத்து தரப்பினரும் கலந்துகொண்டு குரோம்பேட்டை பேருந்து நிலையத்தில் இருந்து தொடங்கி சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் சென்று மீண்டும் குரோம்பேட்டை பேருந்து நிலையத்தை அடைந்தனர்.
இதில் முதல் 3 இடங்களைப் பிடித்தவர்களுக்கு 10 ஆயிரம், 5 ஆயிரம் மற்றும் 3 ஆயிரம் என ஊக்க தொகையுடன் கோப்பை, மெடல், சான்றிதழ்கள் வழங்கினர். போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இதன்பின்னர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் நிருபர்களிடம் கூறியதாவது:
”தமிழக மக்களிடையே போதை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 5 ஆயிரம் பேர் கலந்து கொண்ட இந்த மாரத்தான் போட்டி நடைபெற்றது. போதைப்பொருட்கள் இளைஞர்கள் மத்தியில் ஊடுருவி இளைஞர்கள் கெட்டுப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் முதலமைச்சர் போதையில் இருந்து இளைஞர்களை பாதுகாத்திட வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறார்.
இதையும் படிங்க: ஸ்டாலினுக்கு புதிய பட்டப்பெயர் சூட்டிய எடப்பாடியார்… விஜய்க்கு கொடுத்த சமிக்ஞை..!
இது கடந்த 10 வருடத்தில் ஆரம்பித்தது. அப்போது யார் ஆட்சியில் இருந்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் ஒவ்வொரு நாளும் எவ்வளவு கஞ்சா பிடிக்கிறது என்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த மாரத்தான் போட்டி நடைபெற்றுள்ளது.
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதிலிருந்து என்ன தெரிகிறது, பிஜேபியும் அவரும் கூட்டணியில்தான் இருக்கிறார்கள். அவர் இன்னும் களத்திற்கே வரவில்லை. அவர் கேட்காமலேயே ஒன்றிய அரசு அவருக்கு பாதுகாப்பு வழங்குகிறது என்றால் என்ன அர்த்தம். பாஜவுக்கும் தவெகவிற்கும் உறவு இருக்கிறது என்றுதான் அர்த்தம்”. இவ்வாறு அமைச்சர் கூறினர்.
இதையும் படிங்க: பணம் கேட்டா கொடுக்க மாட்டியா? பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்.. தலைமறைவான தவெக நிர்வாகிக்கு வலை!