கடந்த மார்ச் 6 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை தமிழகத்தின் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. சென்னை மற்றும் கரூர் உள்ளிட்ட பல்வேறு அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கில், டாஸ்மாக் நிர்வாக இயக்குனர், டாஸ்மாக் தலைமை கணக்கு அதிகாரி உட்பட பெண் அதிகாரிகளும் பிரமாண மனு தாக்கல் செய்தனர்.
அமலாக்கத்துறை சோதனையின் போது, நீண்ட நேரம் சட்ட விரோதமாக அடைத்து வைக்கப்பட்டதாகவும் உடல் மற்றும் மன ரீதியாக துன்புறுத்தப்பட்டதாகவும் காலையில் பணிக்கு வந்த தங்களை, நள்ளிரவில் தான் வீட்டுக்கு அனுப்பியதாகவும் கூறி உள்ளனர். இந்த சோதனையால் தேவையற்ற சிரமத்தை ஏற்படுத்தியதாகவும், விசாரணை என்ற போர்வையில், அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது மட்டுமன்றி, மனிதாபிமானமற்ற நடவடிக்கை என டாஸ்மாக் அதிகாரிகள் தரப்பில் முறையிட்டு இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து முறையிட்ட அமலாக்கத்துறை டாஸ்மாக் முறைகேடு மூலம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு சட்டவிரோத பண பரிவர்த்தனை நடந்திருப்பதாக தெரிவித்தது. சட்டவிரோத பண பரிவர்த்தனை நடந்திருப்பதாக தகவல் கிடைத்ததால் தான் சோதனை நடத்தப்பட்டதாக அமலாக்கத்துறை வாதிட்டது. டாஸ்மாக் ஊழியர் லஞ்சம் வாங்கினால் அதன் சங்கிலி என்ன என்பது குறித்து தெரிந்து கொள்ள வேண்டாமா என்று கூறப்பட்டது.
இதையும் படிங்க: மசோதாக்கள் மீது முடிவெடுக்க காலக்கெடு.. உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு.. மத்திய அரசு அதிரடி முடிவு.?

இந்த நிலையில், ஊழியர்கள் துன்புறுத்தப்பட்டதாக சுமத்திய குற்றச்சாட்டை அமலாக்கத்துறை திட்டவட்டமாக மறுத்துள்ளது. டாஸ்மாக் தலைமை அலுவலக சோதனையின் போது அதிகாரிகள் துன்புறுத்தப்படவில்லை என்றும் பொய் தகவல்களை கூறி திசை திருப்ப முயல்வதாகவும் உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது.
சோதனையின் போது டாஸ்மாக் அதிகாரிகளுக்கும் அல்லது அலுவலக உடமைகளுக்கும் எந்த சேதமும் ஏற்படுத்தவில்லை என்றும் எதற்காக வந்திருக்கிறோம் என்ற தகவலை டாஸ்மாக் நிறுவன தலைவர், மேலாளர் ஆகியோருக்கு தெரிவித்த பின்னரே சோதனை நடத்தப்பட்டது என்றும் கூறினர். சோதனையின் போது பெண் அதிகாரிகள் யாரும் இரவில் தங்க வைக்கப்படவில்லை என அமலாக்கத்துறை விளக்கமளித்த நிலையில், வழக்கு விசாரணையை ஏப்ரல் 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: இளம்பெண் தற்கொலைக்கு காரணமான இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்..! சீமான் வலியுறுத்தல்..!