ஆப்ரிக்க பெண்ணை கரம் பிடித்த பிரான்ஸ் மணமகன்.. கோலாகலமாக நடந்த 60ம் கல்யாணம்..!
மானாமதுரை அருகே பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 69 வயது நபர், ஆப்பிரிக்காவைச் சேர்ந்த 60 வயது பெண்ணை தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டார்
பிரான்சில் பணிபுரியும் தமிழர் வாயிலாக நமது மரபு மற்றும் பாரம்பரியம் குறித்து அறிந்து கொண்ட வெளிநாட்டு காதல் ஜோடி மதம், இனம், மொழி கடந்து, நாடு கடந்து தமிழர் முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளனர். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே தாயமங்கலம் சாலையில் நவத்தாவு அருகே உள்ள அழகாபுரி முருகன் கோயிலில் இவர்களது திருமணம் நடந்தது. மணமகன், தெற்கு பிரான்ஸ் நாட்டின் மோண்ட்பெல்லியர் நகரத்தைச் சேர்ந்த யுவெஸ் அர்னெய்ல் லே. வயது 69. மணமகள் மேற்கு ஆப்பிரிக்காவிலுள்ள டோகோ நாட்டின் தலைநகரான லோமைச் சேர்ந்த வணிகர் ஜூலியென் சரெளனா லே. வயது 60.
இருவரும் தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி மாலை மாற்றி, தாலி கட்டி, மணமகன் மணமகளுக்கு மெட்டி அணிவித்து, அருந்ததி பார்த்து திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்த கையோடு மானாமதுரை தாயமங்கலம் செல்லும் சாலையில் அமைந்துள்ள முத்துராமலிங்கபுரம் அருகே, மணமகன் யுவெஸ் அர்னெய்ல் லே, தனது நண்பரின் தோட்டத்தில் அவரது உறவினர்கள், நண்பர்கள், அ.விளாக்குளம், முத்துராமலிங்கபுரம், பீக்குளம், மேல பிடாவூர், பிள்ளத்தி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களுக்கு திருமண விருந்து அளித்து உபசரித்தார். இத்திருமண நிகழ்வில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி மகிழ்ந்தனர். நாடு, மொழி, இனம், வயது கடந்து நடைபெற்ற இந்தத் திருமணம் அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது
இதையும் படிங்க: சென்னையை உலுக்கும் குப்பை பிரச்னை.. வானதி சீனிவாசன் எழுப்பும் கேள்வி..
இது குறித்து மணமகன் அர்னெய்ல் லே கூறுகையில், பிரான்ஸ் நாட்டில் உள்ள எனது நண்பர் மார்க் அமலன் சிவகங்கையை சேர்ந்தவர். இவர் தங்களுடைய கலாச்சாரம், பண்பாடு பற்றி அடிக்கடிக் கூறி உள்ளார். தன்னுடைய இந்திய நாட்டைப் பற்றியும், கலாச்சாரத்தை பற்றியும் எங்களுடன் பகிர்ந்துள்ளார். அதன் காரணமாக இந்தியாவிற்கு நாங்கள் டூர் வந்தோம். காசியில் நடைபெற்ற மகா கும்பமேளாவில் கலந்து கொண்டோம். கடந்த 4 நாட்களாக தமிழ்நாட்டிலுள்ள சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள அவரது தோட்டத்தில் தான் தங்கி இருந்தோம்.
அப்போதே எங்களுக்கு தமிழர் முறைப்படி திருமணம் செய்து கொள்ள ஆசை வந்தது. எனவே அது குறித்து நண்பர் மார்க் அமலனின் பெற்றோரிடம் கூறினோம். அவர்கள் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டனர். தமிழர் முறைப்படி நாங்கள் எங்களது திருமண பந்தத்தில் இணைந்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றார். மணமகள் ஜூலியென் சரெளனா லே கூறுகையில், குடும்பமாக அனைவரும் உறவினர்களை போன்று எங்களை உபசரித்து இந்த திருமணத்தை நடத்தி வைத்த விதம் மிகவும் சிறப்பாக இருந்தது. எங்களுக்கும் இதுபோன்ற திருமண முறையில் மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் ஏற்பட்டு உள்ளது. தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி எங்களுக்கு திருமணம் செய்து வைத்த அனைத்து நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் கிராம மக்களுக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.
இதையும் படிங்க: தொடங்கியது ப்ளஸ் 1 பொதுத்தேர்வு... 8 லட்சம் பேர் எழுதுகின்றனர்..!