அண்ணா பல்கலை விவகாரம்; அதிரடி காட்டும் அண்ணாமலை... மதுரை To சென்னை மகளிர் பேரணி
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் நாளுக்கு நாள் பரபரப்பு அடைந்து வருகிறது.
இந்த விவகாரத்தை முதன் முதலில் கையில் எடுத்து விரிவாக பேட்டி அளித்து,சவுக்கடி போராட்டம் நடத்திய அண்ணாமலை, மேலும் ஒரு அதிரடியாக மதுரையில் இருந்து சென்னை நோக்கி மகளிர் பேரணி நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த மாணவி ஒருவர் ஞானசேகரன் என்கிற நபரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தமிழகம் தாண்டி தேசிய அளவில் பெரிதும் எதிரொலித்து வருகிறது.
தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகள் இந்த விவகாரத்தை கையில் எடுத்து போராட்டம் நடத்தி வருகின்றன. திமுகவின் தோழமைக் கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகளும் இந்த விவகாரத்தில் கடுமை காட்டி வருகின்றன. இது அரசுக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது.
இந்த விவகாரத்தில் காவல்துறையின் செயல்பாடு குறித்து அதிர்ச்சி தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை கையில் எடுத்தது. விசாரணை நடத்த உள்ளது, அதிமுக சார்பில் சிபிஐ விசாரணை கேட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது இந்த வழக்கில் நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், லட்சுமி நாராயணன் அமர்வு கடுமையான கண்டனத்தை காவல்துறைக்கும், அரசு தரப்புக்கும் தெரிவித்தது.
இதையும் படிங்க: அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம்.. பிரதமரிடம் விசாரணை அறிக்கையை கொடுப்போம்..மகளிர் ஆணைய தலைவி அதிரடி
விசாரணை நடத்தப்படும் விதம், காவல் ஆணையரின் பேட்டி, முதல் தகவல் அறிக்கை வெளியான விவகாரம், முதல் தகவல் அறிக்கையில் மாணவியின் மாண்பை குறைக்கும் வகையில் எழுதப்பட்டுள்ள வாசகங்கள் என பல்வேறு விவகாரங்களில் உயர் நீதிமன்றம் தனது அதிர்ச்சியை தெரிவித்து கமிஷனர் அல்லாத மூன்று பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது.
மாணவி விவகாரம் குறித்து பேட்டியளித்த காவல் ஆணையர் பேட்டி குறித்து அதிருப்தி தெரிவித்த உயர் நீதிமன்றம் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ 25 லட்சம் இழப்பீடு வழங்கவும், முதல் தகவல் அறிக்கையை டவுன்லோட் செய்த 14 பேர் மீது நடவடிக்கை எடுக்கவும், மாணவிக்கு இலவச கல்வி அளிக்கவும் உத்தரவிட்டது.
இந்த விவகாரத்தில் அரசியல் கட்சித் தலைவர்களில் குறிப்பாக அண்ணாமலையின் சவுக்கடி போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் ஊடகங்கள் அரசியல் தலைவர்கள் அன்றைய தினம் விவாதத்தை நடத்தினர். அதிமுக சார்பில் மாவட்ட தலைநகரங்களில் போராட்டமும், அதன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து தன்னுடைய பேட்டியின் மூலம் சிபிஐ விசாரணை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவதும் நடந்து வருகிறது.
நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகளும் ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளன. இன்று ஆர்ப்பாட்டத்திற்கு வந்த சீமான் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியினர் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாவெக தலைவர் விஜய் ஆளுநரை சந்தித்து இதுகுறித்து மனு ஒன்றை அளித்த நிலையில், அவரது கைப்பட எழுதிய லெட்டரை மகளிர் அணியினர் விநியோகித்ததில் அவர்களும் காவல்துறையால் கைது செய்யப்பட்டு அவர்களைப் பார்க்கச் சென்ற புஸ்ஸி ஆனந்தும் கைது செய்யப்பட்டது நேற்று மிகவும் பரபரப்பாக இருந்தது .
இந்த நிலையில் இந்த விவகாரத்தில் தொடர்ந்து முனைப்பு காட்டி வரும் பாஜக தலைவர் அண்ணாமலை, இன்று ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மாணவி விவகாரத்தில் மாணவிக்கு நீதி கிடைக்கவும், இது போன்ற நிகழ்வுகள் இனி நடைபெறாமல் இருக்கவும் பாஜக சார்பில் வரும் ஜனவரி 3-ஆம் தேதி மதுரையில் இருந்து நீதி கேட்டு பேரணி பாஜக மகளிர் அணி சார்பாக நடைபெற உள்ளது என்றும் இந்த பேரணி சென்னையில் நிறைவு பெற்றவுடன் பேரணியின் கோரிக்கைகளை ஆளுநரிடம் அளிக்க உள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பாஜக கையில் எடுத்துள்ள இந்த மகளிர் பேரணி மீண்டும் அரசியல் களத்தில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் பாஜக நடத்தும் இந்த பேரணிக்கு போலீசார் அனுமதி அளிப்பார்களா? என்பது குறித்து இதுவரை தகவல் இல்லை. ஒருவேளை அனுமதி மறுக்கப்பட்டால் தடையை மீறி பேரணி நடக்குமா? அல்லது வேறு வடிவில் இந்த பேரணி இந்த போராட்டம் நடத்தப்படுமா? என்பது குறித்து இனி தான் தெரியவரும்.
அண்ணாமலை இந்த விவகாரத்தில் தொடர்ந்து பரபரப்பூட்டும் ஒரு அரசியல் நிகழ்வை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. மறுபுறம் அதிமுகவும் தனது பங்குக்கு மாவட்ட தலைநகரங்களில் போராட்டத்தை நடத்தி வருகிறது. நாம் தமிழர் கட்சியும் போராட்டத்தில் குதித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தமிழக அரசுக்கு இந்த ஆண்டு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது என்றால் அது மிகையல்ல.
இதையும் படிங்க: வந்த உடனேயே கைதா? ஆர்ப்பாட்டம் நடத்த விடுங்கப்பா? போலீஸாரிடம் கொந்தளித்த சீமான்