எஸ்.பி.வேலுமணியை காப்பாற்றுகிறதா திமுக அரசு... கேள்வி எழுப்பும் அறப்போர் இயக்கம்...!
கோவை மாநகராட்சியில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி மீது கொடுத்த புகாரின் அடிப்படையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்பு துறைக்கு தமிழக அரசு அனுமதி தராமல் இழுத்தடிப்பதாக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது.
கோவை மாநகராட்சியில் கோடிக்கணக்கான ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக கூறி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது தாங்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தமிழக அரசு அனுமதி தராமல் இழுத்தடிப்பதாக அறப்போர் இயக்கம் குற்றஞ்சாட்டி உள்ளது.
2014 முதல் 2018 வரை சென்னை, கோவை மாநகராட்சி டெண்டர்களில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமானவர்களுக்கு முறைகேடாக ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதாகவும் அதில் கோடிக்கணக்கான ரூபாய் அளவுக்கு ஊழல் நடைபெற்றதாகவும் கூறி அறப்போர் இயக்கம் கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் கொடுத்தது. 2021-ம் ஆண்டு இந்தபுகாரின் பேரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
ஆனால் தன்னுடைய பெயர் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் இந்த புகாரில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். முதலில் அவர் பெயரை நீக்கிய நீதிமன்றம், முகாந்திரம் இருந்தால் குற்றப்பத்திரிகையில் அவரது பெயரை சேர்க்கலாம் என தீர்ப்பு வழங்கியது.
இதையும் படிங்க: டப்பிங் பழனிசாமி... பாஜகவின் குரல் அவர்...! மு.க ஸ்டாலின் கடும் தாக்கு!
2023-ம் ஆண்டு இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தபோது அப்போது குற்றப்பத்திரிகை தயாராக இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை கூறியிருந்தது. 6 வாரங்களுக்குள் நீதிமன்ற விசாரணைக்கான அனுமதி பெற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று லஞ்ச ஒழிப்பு துறைக்கு 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தீர்ப்பு கொடுத்தது சென்னை உயர்நீதிமன்றம்.
ஆனால் 25 வாரங்கள் ஆகியும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்புத்துறை மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றை கடந்த மார்ச் மாதம் தொடுத்தது. இதற்கு பதிலளித்த லஞ்ச ஒழிப்புத்துறை குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்யும் வேலையை துவங்கி விட்டதாக நீதிமன்றத்தில் கூறியது. 2 வாரங்களுக்குள் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனால் 10 மாதங்களாகியும் இதுவரை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் 8 அரசு பொது ஊழியர்கள் மீது குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்ய நீதிமன்ற விசாரணைக்கு தமிழ்நாடு அரசிடம் அனுமதி கோரி உள்ள விவரம் வெளிவந்துள்ளது. 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதமே குற்றப்பத்திரிக்கை தயாராக உள்ளதாக தெரிவித்த லஞ்ச ஒழிப்புத்துறை தற்பொழுது வரை நீதிமன்ற விசாரணைக்கு அனுமதி பெற முடியவில்லை என்பது அபத்தமாக உள்ளதாக அறப்போர் இயக்கம் குற்றஞ்சாட்டி உள்ளது.
யார் யார் இந்த தாமதத்திற்கு காரணம் என்பதை முதலமைச்சர் ஸ்டாலின் மக்களுக்கு விளக்க வேண்டும் என்றும், அதிமுக அரசின் ஊழல்கள் மீதான நீதிமன்ற விசாரணையை திமுக அரசு அனுமதி தராமல் தாமதிக்கும் நோக்கம் என்ன என்பதை இந்த நேரத்தில் கேள்வியாக எழுப்புவதாக அறப்போர் இயக்கம் கூறியுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை உடனடியாக குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யாவிட்டால் மீண்டும் உயர்நீதிமன்றத்தை நாட உள்ளதாக அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: செங்கோட்டையனுக்கு பதிலடி கொடுத்த ஆர்.பி.உதயகுமார்.. அதிமுகவில் வெளிப்படையாக வெடித்த கோஷ்டி மோதல்..