×
 

வெயிட்டிங் பார் 302..? இன்ஸ்டா ரீல்ஸால் சிக்கிய சிறுவர்கள்.. கொலைக்கு திட்டம் தீட்டியது அம்பலம்..!

சென்னை புளியந்தோப்பு பகுதியில் வெயிட்டிங் பார் 302 என்ற குறியீடோடு இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிட்ட சிறுவர்கள், பழைய பகையை மனதில் வைத்து கொலைக்கு திட்டம் தீட்டியது போலீசார் விசாரணையில் அம்பலமானது.

கொலை, கொள்ளை போன்ற குற்றச் செயல்களில் தற்போதெல்லாம், முழுதாக 18 வயது கூட நிரம்பாத சிறுவர்கள் ஈடுபடுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. 2கே கிட்ஸ் என்று அழைக்கப்படும் 2000ம் ஆண்டுக்கு பிறகு பிறந்த சிறுவர்களில் பலர், எதிர்காலம் பற்றிய அக்கறை ஏதும் இன்றி, முறையான கல்வியையும் பெறாமல், தான் தோன்றித்தனமாக திரிவதாகவே ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இவர்களை முறையாக கண்காணித்து நல்வழிப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். குறிப்பாக சென்னை புளியந்தோப்பு பகுதியில் தொடர்ந்து சந்தேகத்திற்குரிய நபர்கள் மற்றும் அடிக்கடி பிரச்னையில் ஈடுபடுபவர்களை போலீசார் கண்காணித்து வருகின்றனர். 

அந்த வகையில் இளைஞர் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆங்கிலத்தில் வெயிட்டிங் பார் 302 என்ற வாசகத்தை பதிவிட்டு இருந்தார். 302 என்பது கொலை குற்றத்திற்கு பதிவு செய்யப்படும் குற்றப்பிரிவு எண் ஆகும். எனவே யாரையோ கொலை செய்வதற்காக இவர்கள் திட்டம் தீட்டுகிறார்கள் என்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதனை அடுத்து இது குறித்து உரிய விசாரணை நடத்தும் படி புளியந்தோப்பு  போலீசாருக்கு உயர் அதிகாரிகள் அறிவுறுத்தினர். அதன் அடிப்படையில் புளியந்தோப்பு சாஸ்திரி நகர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் என இருவரை போலீசார் கைது செய்தனர். 

இதையும் படிங்க: போலீசை தாக்கி விட்டு தப்பிய ரவுடிகள்.. தேடிப்பிடித்து கைது செய்த போலீஸ்.. மதுபோதையில் இருந்தவர்களுக்கு மாவுக்கட்டு..!

இவர்களது வீட்டை சோதனை செய்தபோது இரண்டு அடி நீளம் உள்ள கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. இதனை அடுத்து பிடிபட்ட இருவரையும் போலிஸ் ஸ்டேஷன் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில்  பெரம்பூர் ராஜீவ் காந்தி நகர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் மற்றும் புளியந்தோப்பு வ.உ.சி நகர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் மற்றும் புளியந்தோப்பு திருவிக நகர் பகுதியை சேர்ந்த 20 வயதான விஜய் என்பவர் உட்பட மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர். 

இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த 23 வயதான ராகுல் மற்றும் அவரது கூட்டாளி 20 வயதான அப்பு என்கின்ற அசோக் ஆகிய இருவரும் சேர்ந்து கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவனை அடித்ததாக தெரியவந்தது. மேலும்   சிறுவனுக்கு ஆதரவாக பஞ்சாயத்துக்கு வந்த சிறுவனின் பெரியம்மா பார்வதி என்ற நபரையும் ராகுல் என்பவர் செருப்பால் அடித்துள்ளார். இதனால் கடும் ஆத்திரமடைந்த சிறுவன் தனது நண்பர்கள் 4 பேரை சேர்த்துக்கொண்டு ராகுல் மற்றும் அப்பு என்கின்ற அசோக் ஆகிய இருவரையும் கொலை செய்ய திட்டமிட்டுள்ளான். 

அதனை மற்றவர்களுக்கு தெரிவித்து விட்டு கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் வைட்டிங் பார் 302  என பதிவிட்டது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து விஜய் உட்பட கைது செய்யப்பட்ட நான்கு சிறுவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்த புளியந்தோப்பு போலீசார் நான்கு சிறுவர்களையும் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விஜய் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: பணம் தர மறுத்ததால் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய மகன்..அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குடும்பத்தினர்..

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share