காலை உணவு திட்டத்தால் குழந்தைகளின் கற்றல் திறன் மேம்படுகிறது.. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்..!
காலை உணவுத் திட்டத்தால் குழந்தைகளின் கற்றல் திறன் மேம்படுகிறது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மதுரையில் உள்ள அரசுப் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் 2022 ஆம் ஆண்டு தொடங்கி வைத்தார். நகரப் பகுதிகளிலும், கிராமப் பகுதிகளிலும் பள்ளிக்கு செல்லக்கூடிய குழந்தைகள் காலையிலேயே புறப்பட்டு விடுவதால், பெரும்பாலான குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவது இல்லை என்ற தகவல் கிடைத்ததால் பள்ளிகள் மிகத் தூரமாக இருப்பது மட்டுமல்ல, சிலருடைய குடும்ப சூழலும் இதற்குக் காரணமாக இருக்கிறது என்பதாலும் இதனை மனதில் கொண்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தனர்.
திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 7.5.2022 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் விதி 110-ன் கீழ் காலை உணவு திட்டம் குறித்த அறிவிப்பு வெளியிட்டார்.
இதையும் படிங்க: இல்லாத பிரச்சனையை கையில எடுக்காதீங்க.. நாங்களும் தமிழர்கள் தான்! லெப்ட் ரைட் வாங்கிய தமிழிசை..!
தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில், இத்திட்டத்தினை செயல்படுத்தும் வகையில் ரூ.33.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் 417 மாநகராட்சி பள்ளிகளில் 43,681 மாணவர்கள், 163 நகராட்சி பள்ளிகளில் 17,427 மாணவர்கள், 728 வட்டாரம் மற்றும் கிராம ஊராட்சி பள்ளிகளில் 42,826 மாணவர்கள், 237 தொலைதூர, மலைபிரதேச பள்ளிகளில் 10,161 மாணவர்கள், என மொத்தம் 1,545 பள்ளிகளில் தொடங்கப்பட்டு, 1,14,095 மாணவர்கள் பயன்பெறுவார்கள் எனவும் குறிப்பிட்டு இருந்தார்.
இதனிடையே, காலை உணவுத்திட்டம் குறித்து வெளியான செய்தியை சுட்டிக்காட்டி முதலமைச்சர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நன்கு ஊட்டமளிக்கப்பட்ட குழந்தை பள்ளியில் சிறப்பாகச் செயல்படுகிறது என்றும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தால் குழந்தைகளின் நினைவாற்றல் மேம்பட்டுள்ளது எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் குழந்தைகளின் கவனம், நினைவாற்றல், கற்றல் விளைவுகளை மேம்படுத்துகிறது. சிந்தனையுடன் திட்டமிடுவது என்பது பிரச்சனைகளை தீர்ப்பது மட்டுமல்ல, நாம் நினைத்துப் பார்க்க முடியாத சமூகத்தை மாற்றுகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: அதிகப்பிரசிங்கித் தனம்... வேல்முருகன் மீது ஆத்திரத்தில் மு.க.ஸ்டாலின் எடுத்த முடிவு..!