முஸ்லிம்களுக்கான நிதியுதவி பட்ஜெட்டில் தொடர்குறைப்பு: ‘சப்கா விகாஸ்’ என மோடி அரசு சொல்வது உண்மையா?
முஸ்லிம்களுக்கான நிதியுதவி பட்ஜெட்டில் தொடர்குறைப்பு
“சப்கா சாத், சப்கா விகாஸ்”(எல்லோருக்கும் எல்லாவற்றையும் கிடைக்கச் செய்வது) என்பது மத்தியில் ஆளும் பாஜக அரசின் முக்கிய முழக்கமாக இருந்து வருகிறது. நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தில்கூட பிரதமர் மோடி சப்கா சாத் சப்காவிகாஸ் என்ற முழக்கத்தை முன்வைத்தார்.
ஆனால், மத்திய அரசின் இந்தக் குரல் சிறுபான்மை மக்களுக்கு குறிப்பாக முஸ்லிம்களை பொதுநீரோட்டத்தில் கொண்டு வந்து சேர்க்குமா, அனைவருக்கும் கிடைக்கும் நிதியுதவித் திட்டங்கள் அவர்களுக்கும் பாரபட்சமின்றி கிடைக்குமா என்பது ஒவ்வொரு பட்ஜெட்டிலும் ஒதுக்கப்படும் நிதியுதவி மூலம் அறியலாம்.
இந்துத்துவா சித்தாத்தந்தின்படி ஆட்சியில் இருக்கும் பாஜக அரசு, சிறுபான்மையினர் கல்வி, மற்றும் மேம்பாட்டில் விருப்பமில்லாமல் இருக்கிறது என்பது ஒவ்வொரு பட்ஜெட்டிலும் நிதிக்குறைப்பின் மூலம் தெரியவருகிறது.
இதையும் படிங்க: பட்ஜெட்டில் தமிழகம் பெயர்கூட இல்லை.. மோடி அரசுக்கு எதிராக பொங்கிய திமுக.. அதிரடியாக கட்சியினருக்கு உத்தரவு..!
பட்ஜெட்டில் நிதி குறைப்பு
2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், சிறுபான்மையினருக்கான ப்ரீமெட்ரிக் உதவித்தொகை என்பது சிறுபான்மை சமூகத்தில் குழந்தைகளை பள்ளிக்குச் செல்வதை ஊக்கப்படுத்தும் திட்டமாகும், இடைநிற்றலைத் தடுத்து, அவர்களுக்கு தொடர்கல்வி அளிப்பதை உறுதி செய்யும் திட்டம். ஆனால், இந்தத் திட்டத்துக்கு 2023-24ம் ஆண்டு பட்ஜெட்டில் ரூ.433 கோடி ஒதுக்கப்பட்டநிலையில் நடப்பு நிதியாண்டு 2024-25ம் ஆண்டில் ரூ.326.16 கோடியாகக் குறைக்கப்பட்டது. இது வரும் 2025-26ம் நிதியாண்டில் மோசமாகக் ரூ.195.70 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது என்று பட்ஜெட் ஆவணங்கள் வாயிலாக அறியலாம் என்று தி வயர் (ஆங்கிலம்) செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தத் திட்டங்களுக்கு ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட தொகையில் 2023ம் ஆண்டில் ரூ.93 கோடியும், 2024ம் ஆண்டில்ரூ.90 கோடிதான் வழங்கப்பட்டது ஆனால் ரூ.326 கோடி ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையாவாது முழுமையாக சிறுபான்மை குழந்தைகள் கல்விக்கு வழங்கியிருக்கலாம். ஆனால், அதிலும் பாதி தொகையைக் கூட வழங்காமல் கல்வி உதவித்தொகை வழங்குவதில் சிக்கல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. போஸ்-மெட்ரிக் உதவித்தொகையும் வரும் நிதியாண்டில் குறைக்கப்பட்டுள்ளது. நடப்பு 2024-25ம் நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட நிதியைவிட 65 சதவீதம் குறைத்து ரூ.413.99 கோடிதான் ஒதுக்கப்பட்டுள்ளது. இளநிலை,முதுநிலை பட்டப்படிப்புகளில் மெரிட்டில் படிக்கும் சிறுபான்மை மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்க கடந்த ஆண்டு ரூ.33.80 கோடி ஒதுக்கப்பட்டது, வரும்நிதியாண்டில் இது ரூ.7.34 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் பயிலும் சிறுபான்மை மாணவர்களுக்கான கல்விக் கடனில் வட்டி தள்ளுபடிக்காக கடந்த ஆண்டு ரூ.15.30 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் வரும்நிதியாண்டில் ரூ.8.16 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் நடத்தும் மதரஸாக்கள் மீதான வெறுப்பு, மத்தியில் ஆளும் அரசுக்கு எவ்வாறு இருக்கிறது என்பது ஒவ்வொரு பட்ஜெட்டிலும் ஒதுக்கப்படும் நிதிமூலம் தெரியவருகிறது.
2023-24ம் ஆண்டில் மதரஸாக்களில் கல்வித் திட்டம் மற்றும் சிறுபான்மையினருக்காக நிதியுதவி 93 சதவீதம் குறைக்கப்பட்டு ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டது. 2024-25ம் ஆண்டில் அது மேலும் குறைக்கப்பட்டு ரூ.2 கோடியாக் சரிந்தது, வரும் நிதியாண்டில் இது மேலும் குறைக்கப்பட்டு ரூ.0.01 கோடியாக ஒதுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை என்பது, சிறுபான்மை சமூகத்தில் இருந்து வரும் மாணவர்கள் கல்வி கற்கவும், தலித்துகள், ஆதிவாசிகள், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்கள், சிறுபான்மையினர் பொருளாதார சவால்களை கடந்து கல்வி பயில உதவியாக இருந்தது. ஆனால், இந்த கல்வி ஆதரவை மத்திய அரசு தொடர்ந்து குறைக்கிறது.
சிறுபான்மையினர் கல்விதொடர்பான 6 திட்டங்களுக்காக 2024-25ம் ஆண்டில் ரூ.1575.22 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், ரூ.517.20 கோடிதான் உண்மையில் வழங்கப்பட்டது. உதாரணமாக 2023-24ம் ஆண்டு பட்ஜெட்டில் ரூ.1689 கோடி அறிவிக்கப்பட்டநிலையில், ரூ.1500 கோடி விடுவிக்கப்பட்டது, ஆனால், ரூ.428.74 கோடிதான் உண்மையில் செலவிடப்பட்டது. இந்தத் திட்டங்களுக்கு நடப்பு நிதியாண்டில் ரூ.678.03 கோடி ஒதுக்கியுள்ளது. எவ்வளவு செலவிடப்பட்டுள்ளது என்பது இனிமேல் அரசு வெளியிடும்.
வக்ஃபு திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில், வக்ஃபு வாரியங்களுக்கான நிதியுதவியும் குறைக்கப்பட்டுள்ளது. குவாமி வக்பு வாரிய தராக்தி திட்டம் என்பது வக்ஃபு வாரியத்தை டிஜிட்டல் மயமாக்குதல், சொத்துக்கள் டிஜிட்டல் செய்யும் திட்டமாகும். மற்றொரு திட்டம் ஷஹ்ரி வக்ஃபு சம்பதி விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வக்ஃபு நிறுவனங்களுக்கு வட்டியில்லாக் கடன், வக்ஃபு சொத்துக்களை வணிகரீதியாக மேம்படுத்துதலாகும். இந்த திட்டங்களுக்கு தனியாக நிதி ஒதுக்கப்பட்டநிலையில் அதுவும் குறைக்கப்பட்டுள்ளது.
2023-24ம் ஆண்டில் இந்த இரு திட்டங்களுக்கும் ரூ.17 கோடி ஒதுக்கப்பட்டது, ரூ.8 கோடிதான் விடுவிக்கப்பட்டது, 0.10 கோடிதான் செலவிடப்பட்டது. 2024-25ம் ஆண்டில் ரூ.16 கோடி ஒதுக்கப்பட்டு, ரூ.3.07 கோடி விடுவிக்கப்பட்டது. வரும் நிதியாண்டில் இரு திட்டங்களுக்கும் ரூ.13 கோடியாகக் குறைக்கப்பட்டது.
இது தவிர நயி மன்சில்(Nayi Manzil ), யுஎஸ்டிடிஏடி(USTTAD) சிறுபான்மை பெண்கள் மேம்பாட்டுத் திட்டம், ஹமாரி தரோஹர் உள்ளிட்ட திட்டங்கள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளன. யுபிஎஸ்சி, எஸ்எஸ்சி, மாநில அரசுபணித் தேர்வுகளுக்கு தயாராக மாணவர்களுக்கு உதவும் திட்டம், ஆதரவு அளிக்கும் திட்டமும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மவுலானா ஆசாத் கல்வி அறக்கட்டளை, என்எம்டிஎப்சி திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை.
பொதுப்படையாகப் பார்க்கும் போது 2025-26ம் ஆண்டு பட்ஜெட்டில் சிறுபான்மை நலனுக்கான தொகை நடப்பு 2024-25ம் ஆண்டைவிட ரூ.166 கோடி கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது போல் தெரிகிறது.
அதாவது 2024-25ம் ஆண்டில் ரூ.3183.24 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் 2025-26ம் ஆண்டில் ரூ.3,350 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், சிறுபான்மையானர் நலனுக்கான திட்டங்களுக்கு விடுவிக்கப்படும் நிதியும், பயன்படுத்தப்படும் நிதியும் குறைவாக இருக்கிறது.
2024-25ம் ஆண்டு பட்ஜெட்டில் சிறுபான்மை நலத்துறைக்கு ரூ.3,183.24 கோடி ஒதுக்கப்பட்டு பின்னர் மறுஆய்வுக்குப்பின், ரூ.1868.18 கோடியாகக் குறைக்கப்பட்டது. 2025-26ம் ஆண்டில் ரூ.3,350 கோடி ஒதுக்கப்பட்டாலும், இறுதி திருத்த அறிக்கையில் எவ்வளவு குறைக்கப்போகிறார்கள் இனிமேல்தான் தெரியும்.
இதையும் படிங்க: சீனாவுக்கு வரி செலுத்தும் இந்தியா... மக்களவையில் பகீர் கிளப்பிய ராகுல் காந்தி..!