×
 

வேங்கைவயல் வழக்கை இனி யார் விசாரிக்கப் போகிறார்கள் தெரியுமா..?

வேங்கை வயல் விவகாரத்தில் சிபிசிஐடி குற்ற பத்திரிகையை ஏற்று புதுக்கோட்டை மாவட்டம் நடுவர் நீதிமன்றம் விசாரிக்கும் என அம்மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25-ந் தேதி மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மனிதர்கள் நீரருந்தும் குடிநீரில் இத்தகைய அசிங்கத்தை கலந்தது யார்? என்ற கேள்வி விஸ்வரூபம் எடுத்தது. இறையூர், வேங்கைவயல் என்ற இரண்டு கிராமங்களிலும் சாதி மோதல் நிகழ்வதற்கு இச்சம்பவம் காரணமாகி விடுமோ என்ற கவலை பிறந்தது. இதனையடுத்து இந்த வழக்கை சிபிசிஐடி வசம் ஒப்படைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. 

சிபிசிஐடி துணை கண்காணிப்பாளர் பால்பாண்டி தலைமையில் சம்பந்தபட்ட கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. சந்தேகத்திற்கு உட்பட்ட 31 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனையும் செய்யப்பட்டது. ஆனால் இரண்டு ஆண்டுகள் கடந்தும் குற்றவாளிகள் யார் என்பதில் இழுபறி நீடித்து வந்தது. உண்மைக் குற்றவாளிகளை கண்டறிய சிபிசிஐடிக்கு பதிலாக சிபிஐ விசாரணை வேண்டும் என கோரிக்கை எழுப்பப்பட்டது. ஓய்வுபெற்ற நீதிபதி சத்யநாராயணன் தலைமையில் ஒருநபர் விசாரணைக் குழு ஒன்றை தமிழக அரசு நியமித்தது. அவரும் அனைத்து தரப்பினரும் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்தார்.

இந்நிலையில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த காவலர் முரளிராஜா, சுதர்சன், முத்துக்கிருஷ்ணன் ஆகிய மூன்றுபேர் தான் சம்பவத்தன்று குடிநீர் தொட்டியில் இந்த அவலத்தை செய்ததாக சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அவர்கள் எடுத்த செல்பி-க்கள், செல்போன் டவர் அலைவரிசை, யார் யாருக்கு செல்போனில் பேசினார்கள் என்ற அறிவியல் தரவுகளின் அடிப்படையில் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்தனர். 

இதையும் படிங்க: "எங்களால் உத்தரவிட முடியாது.." தமிழக கவர்னரை வாபஸ் பெறும் வழக்கு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

புதுக்கோட்டை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த விசாரணையில் இந்த வழக்கு வன்கொடுமை பிரிவின் கீழ் வராததால் வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என மனுதாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மூவரும் மனுதாக்கல் செய்தனர். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிமன்றம், இவ்வழக்கை புதுக்கோட்டை மாவட்ட நடுவர் நீதிமன்றம் விசாரிக்கும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 

இதையும் படிங்க: சீமான் இப்படி பேச காரணமே விஜய் தான் ...! கொளுத்தி போட்ட புகழேந்தி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share