×
 

மசோதா முரண்பாடுகளை கவர்னர் தெரிவிக்க வேண்டும்..! முட்டுக்கட்டை நீடிக்க கூடாது... மீண்டும் விசாரணை

தமிழக அரசுடன் மோதல்: உச்ச நீதி மன்றத்தில் 3-ம் நாள் விசாரணை; 'முட்டுக்கட்டை' தொடரக் கூடாது- நீதிபதிகள் கண்டிப்பு; மீண்டும் திங்கட்கிழமை விசாரணை

தமிழக அரசுக்கும் கவர்னர் ஆர் என் ரவிக்கும் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில் தமிழக அரசு சார்பில் கவர்னருக்கு எதிராக இரண்டு 'ரிட்' மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. நீதிபதிகள் ஜே.பி பார்திவாலா, ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த மனுக்கள் மீது தொடர்ந்து மூன்று நாட்கள் விசாரணை நடைபெற்று வந்தது. 

மூன்றாவது நாளாக நேற்று நடந்த விசாரணையின் போது கவர்னர் ரவி தரப்பில் மத்திய அரசின் தலைமை வக்கீல் (அட்டர்னி ஜெனரல்) ஆர் வெங்கட் ரமணி ஆஜராகி வாதிடும்போது, "மசோதாவை இயற்றி கவர்னருக்கு அனுப்பி வைக்கும் போது அதற்கு ஒப்புதல் வழங்காமல் கவர்னர் நிறுத்தி வைத்தால் அந்த மசோதா  காலாவதி ஆகிவிடும். மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற முதலாவது நிபந்தனையின்படி கவர்னர் மசோதாவை சட்டமன்றத்துக்கு மீண்டும் அனுப்பி வைக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

 இதுபோல மசோதாவை பரிசீலனை செய்ய கவர்னர் அனுப்பாத பட்சத்தில் அந்த மசோதாவை மீண்டும் இயற்றும் நடவடிக்கையில் மாநில அரசு இறங்க முடியாது. முதலாவது நிபந்தனையின்படி மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பதே தமிழ்நாடு அரசின் கோரிக்கையாக உள்ளது. அரசியல் அமைப்பு சட்டத்தின் 200-வது பிரிவின்படி மசோதாக்களுக்கு ஒப்புதல் தருவது ஒப்புதலை நிறுத்தி வைப்பது மசோதாவை ஜனாதிபதியின் பரிசீலனைக்கு அனுப்பி வைப்பது போன்ற நிபந்தனைகளுடன் நாலாவதாக பல்வேறு செயல் நடவடிக்கைகளை கொண்டுள்ளன.

இதையும் படிங்க: தமிழக அரசின் மசோதாவை ஏற்றுக்கொள்ள அவசியம் இல்லை.. கவர்னர் பதில்; உச்ச நீதிமன்றத்தில் இன்று 3-ம் நாள் விசாரணை

கவர்னருக்கு என்று சில கடமைகளும் பொறுப்புகளும் உள்ளன. மத்திய அரசின் சட்டங்களுடன் முரண்பாடு கொள்ளும் மசோதாக்களை ஜனாதிபதிக்கு கவர்னர் அனுப்பி வைத்துள்ளார்' என்று தெரிவித்தார். 

அப்போது நீதிபதிகள், 'மத்திய அரசின் சட்டங்களுடன் மசோதாக்கள் முரண்பாடு கொண்டிருப்பதாக கவர்னர் கருதும் போது நேரடியாக மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க முடியாது என மறுத்து இருக்க முடியும். ஒப்புதல் அளிக்காமல் கவர்னர் நிறுத்தி வைத்தது ஏன்? என்பதே தற்போதைய கேள்வி.

 தமிழக அரசின் மசோதாக்கள் மத்திய அரசின் சட்டங்களுக்கு முரண்பாடு கொண்டிருப்பதாக கவர்னர் கருதும் பட்சத்தில் அந்த மசோதாக்களில் திருத்தம், மாற்றம் கொண்டுவர முடியாத நிலை உருவாகி இருக்கிறது. மசோதாக்கள் மத்திய அரசின் சட்டங்களுடன் முரண்பாடு கொண்டிருப்பதை மாநில அரசின் கவனத்திற்கு கவர்னர் கொண்டு செல்ல முடியாதா?. கவர்னர் என்ன நினைக்கிறார் என்பதை மாநில அரசு எப்படி தெரிந்து கொள்ள முடியும்?

 மாநில அரசின் மசோதாக்கள் மத்திய அரசின் சட்டங்களுடன் முரண்பாடு கொண்டிருப்பதாக கவர்னர் கருதி இருந்தால் அதை உடனடியாக மாநில அரசு கவனத்திற்கு கவர்னர் எடுத்துச் சென்று இருக்க வேண்டும்.அப்படி செய்திருந்தால் மசோதாக்களை மாநில அரசு மறுபரிசீலனை செய்திருக்க முடியும்" என்றும் தெரிவித்தனர். 

"மாநில அரசுக்கு கட்டுரை எழுத வேண்டிய அவசியம் இல்லை"

மேலும் " ஜனாதிபதிக்கு கவர்னர் அனுப்பி வைத்த மசோதாக்களின் நிலவரம் என்ன ஆனது?" என்பது போன்று சரமாரி கேள்விகளை தொடுத்தனர். இதற்கு பதில் அளித்த மத்திய அரசின் தலைமை வக்கீல் ஆர் வெங்கட்ரமணி "முரண்பாடுகளை கொண்ட மசோதாக்கள் குறித்து மாநில அரசுக்கு கட்டுரை எழுத வேண்டிய அவசியம் கவர்னருக்கு இல்லை.

 பல்கலைக்கழகங்கள் சட்ட திருத்தம் தொடர்பாக ஏழு மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிப்பதை நிறுத்தி வைத்துள்ளார். இது தொடர்பான ஜனாதிபதியின் முடிவும் மாநில அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒப்புதலை நிறுத்தி வைப்பது என்பது ஒப்புதலை நிராகரிப்பதாகும்" என்று வாதிட்டார். 

முட்டுக்கட்டை நீடிக்க கூடாது 

அதற்கு பதில் அளித்த நீதிபதிகள் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைப்பது மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்று பொருள் கொள்ள வேண்டும் என்ற விளக்கம் சரியாக இருக்காது. மேலும் இந்த விளக்கம் அரசியலமைப்பு சாசனத்தின் 200 மற்றும் 201 வது பிரிவுகளை பயனற்று போக செய்து விடும்" என்று அழுத்தமாக தெரிவித்தனர். 

அதைத்தொடர்ந்து இது பற்றி விளக்கமாக பதில் அளிப்பதற்கு 10-ம் தேதி (திங்கட்கிழமை )வரை அவகாசம் வேண்டும் என்று மத்திய அரசின் வக்கீல் கோரிக்கை விடுத்தார். 

அதைத் தொடர்ந்து பேசிய நீதிபதிகள், "மத்திய அரசின் சட்டங்களுடன் மாநில அரசின் மசோதாக்கள் முரண்படுவதாக கவர்னர் கருதி இருக்கும் பட்சத்தில் அது குறித்த தகவலையும் ஜனாதிபதியும் பரிசீலனைக்கு மசோதாக்களை அனுப்பி வைத்ததையும் மாநில அரசுக்கு கவர்னர் தெரிவித்து இருக்க வேண்டும். இல்லை என்றால் இந்த முரண்பாடுகளை மாநில அரசு எப்படி களைய முடியும்?. கவர்னர் இக்கட்டான ஒரு நிலையை உருவாக்கினால் அதற்கு அவர் தான் தீர்வு காண வேண்டும். இந்த விவகாரத்தில் முட்டுக்கட்டை நீடிக்க கூடாது' என்று வலியுறுத்தினார்கள். 

அதைத்தொடர்ந்து அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை திங்கட்கிழமைக்கு (10-ம் தேதி) ஒத்தி வைத்தனர். அன்றைய தினம் கவர்னர் தரப்பின் விவாதங்களையும் கவர்னர் தரப்பு விவாதங்களை மறுக்கும் தமிழ்நாடு அரசின் வாதங்களையும் முன்வைக்கும்படியும் உத்தரவு பிறப்பித்தனர்

இதையும் படிங்க: மசோதாக்களை 3 ஆண்டுகள் நிறுத்தி வைத்தது ஏன்..? தமிழக ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் கிடுக்கிப்பிடி.. இன்றும் விசாரணை.!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share