13 வயதிலேயே கூட்டணி என்கிற கருவாட்டு ருசியுடன் கைத்தடி ஊன்றி தேர்தல் களத்துக்கு வந்த திமுக!
திமுகவின் தேர்தல் வரலாறு
1949-ம் ஆண்டு உருவான திமுக, நாட்டின் முதலாவது பொதுத் தேர்தலான 1952-ல் பங்கேற்கவில்லை. 1957-ம் ஆண்டுதான் திமுக முதல் முறையாக தேர்தல்களில் பங்கேற்றது. 1957-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக 15 தொகுதிகளைக் கைப்பற்றியது.
1962-ம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தலில் திமுக கூட்டணி அமைத்தது. அன்றைக்கு திமுகவுக்கு வயது13. இளம் திமுகவுக்கு அப்போதே கூட்டணி என்கிற கைத்தடி தேவையானதாகவும் இருந்தது. அதனால்தான் 1962-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ராஜாஜியின் சுதந்திரா கட்சி, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்தது திமுக. இந்த தேர்தலில் 50 சட்டமன்ற தொகுதிகளில் வென்றது திமுக.
'கூட்டணி' என்கிற கருவாட்டை ருசி கண்ட திமுக எனும் பூனைக்கு அன்று முதல் இன்றைக்கு 75 வயதாகிற போதும் அந்த கருவாடு தேவையானதாகவே இருக்கிறது என்பது எவ்வளவு பெரிய 'துயரமானது'!
1967-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக, ஏராளமான கட்சிகளை கூட்டணியில் சேர்த்துக் கொண்டது. ராஜாஜியின் சுதந்திரா கட்சி, சிபிஎம், பிரஜா சோசலிஸ்ட் கட்சி, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், சம்யுக்தா சோசலிஸ் கட்சி என பல கட்சிகளைக் கூட்டணியில் இணைத்து களம் கண்டு வெற்றி பெற்றது. அத்தேர்தலில் திமுகவுக்கு 138 இடங்கள் கிடைத்தன. அண்ணாதுரை முதல்வரானார். ஆனால் காலம் அண்ணாதுரையை புற்றுநோய் வடிவில் எமனாக மாற அவரது சகாப்தம் முடிவுக்கு வந்தது. அண்ணாதுரையின் இடத்துக்கு எப்படியோ அடித்து பிடித்து முன்னேறினார் கருணாநிதி.
கருணாநிதியின் காலம் முழுவதுமே திமுகவுக்கு கூட்டணி என்கிற கருவாடும் கைத்தடியும் அவசியமானதாகவே இருந்தது என்கிறது சரித்திரம்.
1971-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் இந்திரா காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், பார்வர்ட் பிளாக், பிரஜா சோசலிஸ்ட் கட்சி, முஸ்லீம் லீக் ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்த திமுக 184 இடங்களில் வென்றது.
அண்ணன் அண்ணாதுரையைத் தொடர்ந்து தம்பி கருணாநிதிக்கும் கூட்டணி என்கிற கருவாடு ருசியானது கூட்டணி என்கிற அடங்கா பசியை வாழ்நாள் முழுவதும் தந்து கொண்டே இருந்தது. ஏனெனில் அதிகாரம் என்கிற போதை அப்படி கருணாநிதியை தள்ளாட வைத்துக் கொண்டுதான் இருந்தது.
.
இந்திரா காந்தி எமர்ஜென்சியை அமல்படுத்தி திமுகவினரை ஓட ஓட அடித்து சிறைக் கம்பிகளுக்குள் போட்டு பந்தாடிய காரணத்தால் 1977 சட்டமன்ற தேர்தலில் ஜனதா கட்சியுடன் இணைந்து தேர்தலை எதிர்கொண்டார் கருணாநிதி. என்னதான் எமர்ஜென்சிக்கு விலை கொடுத்த கட்சியாக இருந்தாலும் வலிமையான கூட்டணி இல்லாத காரணத்தால் மட்டுமே வெறும் 48 தொகுதிகளில்தான் திமுகவால் ஜெயிக்கவும் முடிந்தது.
1977-ம் ஆண்டு புரட்சித் தலைவர் எம்ஜிஆர் தமிழ்நாட்டின் முதல்வரானார். முதல்வர் நாற்காலியில் எம்ஜிஆர் அமர்ந்த நாள் முதல் வங்கக் கடலோரம் சந்தனப் பேழையில் சங்கமித்து கண்ணுறங்கும் நாள் வரை கருணாநிதியால் முதல்வர் நாற்காலியை கனவிலும் கூட நினைத்துப் பார்க்க முடியவில்லை. இத்தனைக்கும் திமுகவினரை நையப் புடைத்து அடித்து கொன்ற இந்திரா காந்தியையே நேருவின் மகளே வருக! நிலையான ஆட்சி தருக என்றெல்லாம் கூப்பாடு போட்டு கூவி கூவி வாழ்த்தினார். ஆனாலும் தமிழ்நாட்டு வெகுஜனம், கருணாநிதியின் இந்த வேடங்களை எல்லாம் ரசித்து ஓட்டுப் போட்டுவிட தயாராகவும் இல்லை.
இப்படியே இலவுகாத்த கிளியாக இருந்த கருணாநிதியின் திமுகவுக்கு 1989-ம் ஆண்டு ஜாக்பாட் அடித்தது. அப்போது எம்ஜிஆர் கட்டிய கோட்டையான அண்ணா திமுக இரண்டாக உடைபட்டு நின்றது. அந்த தேர்தலில், அண்ணா திமுகவின் இரட்டை இலை சின்னம் களத்திலே இல்லாத காலத்தில் கூட கருணாநிதியால் உதயசூரியன் சின்னத்தை மட்டுமே நம்பி தேர்தலுக்கு போக முடியவில்லை. அன்றைக்கும் கூட கூட்டணி என்கிற கருவாட்டையும் கைத்தடியையும் கையில் பிடித்தபடிதான் சிபிஎம், ஜனதா தளம் கட்சிகள் துணையுடன் அதிகாரத்தை கைப்பற்ற முடிந்தது கருணாநிதியால். கூடா நட்பு கேடாய் முடியும் என எத்தனையோ முறை பேசிய கருணாநிதிக்கு விடுதலைப் புலிகள் சகவாசமும் அப்படித்தான் என்பதை திமுக ஆட்சி கவிழ்ப்பு உணர்த்தியிருக்கலாம்.
அண்ணா திமுக உடைந்து மீண்டும் ஒன்றாய் எழுந்து எம்ஜிஆரின் இரட்டை இலை சின்னம் கம்பீரமாக நின்றது. 1991 சட்டமன்ற பொதுத் தேர்தலில்
1991ஆம் ஆண்டு சட்டசபைக்கும் லோக்சபாவுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டது. அந்த தேர்தலில் கருணாநிதியின் கூட்டணி கட்சியாக இருந்த ஒரு கட்சியின் பெயர் தாயக மறுமலர்ச்சி கழகம். நடிகர் டி.ராஜேந்தரின் கட்சிதான். திமுகவில் இருந்து வெளியேறி தாயக மறுமலர்ச்சி கழகம் தொடங்கி மீண்டும் திமுகவுடனேயே கூட்டணி அமைத்த காலக் கொடுமை அது. ஜனதா தளம், சிபிஐ, சிபிஎம் ஆகியவை திமுகவுடன் கை கோர்த்து களம் கண்டன. அந்த தேர்தலிலும் மண்ணைக் கவ்வியது திமுகதான்.
1996-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு தெம்பும் திராணியும் இருந்திருந்தால் தனித்தே நின்று தன் பலத்தை காட்டியிருக்க முடியும். ஏனெனில் அன்றைய அண்ணா திமுக ஆட்சி மீதான மக்கள் கோபம் அப்படி. ஆனாலும் தொடைநடுங்கியாக இருந்த திமுகவுக்கு அப்படியான தருணத்திலும் கூட மூப்பனாரில் தமாகா, நடிகர் ரஜினிகாந்த் வாய்ஸ் என்கிற கூட்டணி கைத்தடிகள் தேவைப்பட்டது. அதனால்தான் மிக எளிதாக மீண்டும் முதல்வராகினார் மூவன்னா காவன்னா எனும் மு.கருணாநிதி.
மத்தியில் யாருமே எதிர்பாராத வகையில் பண்டாரம் பரதேசிகள் என கருணாநிதியால் விமர்சிக்கப்பட்ட பாஜகவுடன் கை கோர்த்து மகிழ்ந்திருந்தது திமுக. அந்த காலத்தில் 2001-ல் சட்டமன்ற தேர்தல் நடந்தது. அப்போது திமுகவுக்கு 15 கட்சிகள் ஆதரவு அவசியமாக இருந்தது. ஊரில் இருந்த அத்தனை ஜாதிய கட்சிகளுடனும் கை கோர்க்க தயங்காதவராக இருந்தார் கருணாநிதி. ஆனால் மக்கள்தான் கருணாநிதியை நம்ப தயாராக இல்லை. மீண்டும் அண்ணா திமுகவையே அரியணையில் அமர்த்தி அழகுபார்த்தனர்.
2006-ல் மீண்டும் காங்கிரஸ், பாமக, சிபிஎம், சிபிஐ கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்தும் கூட 96 இடங்களில்தான் திமுகவால் வெல்ல முடிந்தது. திமுக, இதர கட்சிகள் ஆதரவுடன் மைனாரிட்டி ஆட்சியை நடத்தியது.
2011-ல் அதிமுகவின் வியூகம் முன்பாக கருணாநிதி தலைமையிலான திமுகவின் கூட்டணியால் வெல்ல முடியவில்லை. அடுத்த தேர்தலிலும் இதே பரிதாபம்தான். 2016-ம் ஆண்டு தேர்தலில் விஜயகாந்த் வருவார்.. வருவார்.. எப்படியும் கை கொடுத்து காப்பாற்றுவார் என பரிதாபமாக காத்திருந்து ஏமாந்து போனார் கருணாநிதி. 2011, 2016 தேர்தல்களிலும் கருணாநிதியால் ஜெயிக்க முடியவில்லை.
2021-ம் ஆண்டு தேர்தலிலும் கூட அதிமுக சிதறி சின்னாபின்னமாகிய நிலையாலும் இருக்கிற கட்சிகள் அனைத்தையும் திமுக எனும் லாரியில் ஏற்றிக் கொண்டதாலும் ஸ்டாலின் தலைமையிலான திமுக வெல்ல முடிந்தது.
இப்போதும் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை சீ.. என உதறித் தள்ளிவிட்டு ஓடிப் போக அத்தனை கூட்டணி கட்சிகளும் தயாராகவே உள்ளன. ஆனால் அய்யோ.அய்யோ.. என தனித்தே நின்று பழகிவிடாத திமுக, வாரி வாரிக் கொடுத்து வாரி அணைத்துக் கொண்டிருக்கிறது கூட்டணிக் கட்சிகளை! 13 வயதிலேயே கூட்டணி எனும் கைத்தடியை ஊன்றிய திமுகவுக்கு 75 வயதில் மட்டும் தேவைப்படாமலா போய்விடும்.. இதை உணர்ந்துதான் என்னவோ திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கைத்தடியை பரிசாக தந்தாரோ என்னவோ!